Friday, September 12, 2014

வண்ணக்கடல்- பாலாஜி

வண்ணக்கடலை இரண்டாவது முறை முழுமையாக வாசித்தபின் ஓர் காட்சி தொடர்ந்து நினைவில் வந்துகொண்டே இருந்தது. அர்ஜுனன் துரோணரின் குருகுலத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு வந்தபின் இளைய கௌரவர்களுடன் மரப்பந்து விளையாடும் காட்சி அது. ஆடலின் ஒரு கட்டத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் துனுக்குறல் "இப்பந்து மனிதர்களை வைத்து விளையாடுகிறதோவென". மொத்த நாவலையும் இக்காட்சியை அச்சாக வைத்து மீண்டும் வாசிக்கலாம்.

வில்லும் கதையும் மனிதர்களை வைத்து விளையாடும் ஆட்டமாக நாவலை வாசிக்கலாம். ஆயுதம் என்பதுதான் என்ன? மனிதனின் காமகுரோதமோகங்களின் புறவடிவம் தானோ? அல்லது மனித ரஜோகுணத்தின் குறியீடா? துரோணரின் முதல் அத்தியாயத்திலேயே இந்தப் போராட்டம் ஆரம்பமாகி விடுகிறது. தனக்கான வழியாக விஸ்வாமித்திர தர்ப்பையை தேர்வு செய்து எவ்வித தயக்கமுமில்லாமல் ஒரு பறவையை வீழ்த்துகிறார். அதேசமயம் அவரது மனம் காயத்ரியை நாடுகிறது. ஷத்ரிய நெறிக்கும் பிராமண நெறிக்குமிடையில் ஊசலாடுகிறார். பரத்வாஜ முனிவரும் கங்கைக்கரையின் குகப்பெண்ணும் அவருள் போராடுகின்றார்கள்.

துரோணர் தன்னை கண்டுகொள்ளும் காட்சி மிகக் கவித்துவமாக எழுதப்பட்டுள்ளது. பரத்வாஜ முனிவர் பிற மாணவர்கள்ளுக்கு வேதம் கற்பிப்பதை தூரத்திலிருந்து நோக்கும் துரோணர் அச்சொற்கள் தன் காதுகளை எட்டாததால் தவித்து கண்ணீர் விட்டு ஓர் மரத்தினடியில் அமர்ந்து தர்ப்பையை மடித்து ஊதிகிறார். தர்ப்பை வேதத்தை ஓதுகிறது. அப்பொழுது கண்டுகொள்கிறார் தனக்கு அனைத்து ஞானங்களும் தர்ப்பை வழியாகவே வந்தடையுமென. அங்கிருந்து தர்ப்பை ஒரு பெரும் குறியீடாக விரிகிறது. நீரை உண்டு வளர்வது, நெருப்பை தன் உயிர்ச்சாரமாக கொண்டது. நீரென்றால் நீர், நெருப்பென்றால் நெருப்பு. துரோணரும் தர்ப்பையும் வேறல்ல.

இந்த இரட்டைத்தன்மையே துரோணரின் ஆளுமையாக அடுத்தத்து விரிகிறது. ஷத்ரியர்கள் பயிலும் அக்னிவேசரின் குருகுலத்தில் தன்னை பிராமணராக முன்வைக்கிறார். தன்னை பிராமணோத்தவரே என அழைத்ததாலேயே யக்ஞசேனனை மாணவனாக ஏற்றுக்கொள்கிறார். பிராமண அடையாளத்திற்காக மாதக்கணக்கில் பரசுராமரைத் தேடி அலைகிறார். கிருபியை மணந்து ஷத்ரியராக வாழும்போதும் ஊழ் தொடர்ந்து துரத்துகிறது. பிரமாண அடையாளமின்மையால் யக்ஞசேனனிடம் அவமானப்பட்டு திரும்புகிறார்.

இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இச்சிக்கலுக்கு ஒரு தீர்வு இல்லை என்பதையே. துரோணரே சொல்வது போல் "படைக்கப்பட்ட தெய்வங்களினாலேயே கைவிடப்படும்" நிலையை. இந்த அம்சமே இப்பாத்திரத்தை எக்காலத்திற்கும் விவாதிக்கப் படவேண்டிய விஷயமாக்குகிறது. இச்சிக்கல் துரோணர் குசைதேவியை சந்திக்கும் இடத்தில் உச்சம் கொள்கிறது. இயற்கையின் அடிப்படை இயல்பிலேயே இந்த இரட்டைத்தன்மை உள்ளது. "அமை-அளி-கருணை" என உலகு புரந்தாலும் ஆன்மாவின் ஒரு பகுதியின் நிறைவின்மையால் புரந்தவற்றை அழிக்கிறாள் குசைதேவி. முடிவில் துரோணரின் நிழல்களாக புராணங்களின் அனைத்து புறக்கணிக்கப்பட்டவர்களும் தோன்றும் காட்சி ஒரு பெரும் படிமமாக மாறுகிறது.

வில்லாடும் அடுத்த பாவையாக அர்ஜுனன் பாத்திரம் வருகிறது. துரோணருக்கு வில் என்பது ஒரு புல். அம்பும் ஒரு புல்லே. எது உலகாகி நிற்கிறதோ அதுவே வில்லாகியும் நிற்கிறது. பிரம்மத்தின் இன்னொரு முகம். வில்லை அறிவதன் மூலமாக பிரம்மத்தை அறியலாம். அர்ஜுனனுக்கு வில் என்பது ஒரு சொல். மொழியின் அடிப்படை அலகு. சிந்தனையின் முதல் படிக்கட்டு. ஞானத்தின் முதல் வாசல். விடுதலையை நோக்கி எடுக்கும் முதல் அடி.

இப்பகுதியில் துரோணர் அர்ஜுனனுக்கு கூறும் சொற்கள் மீண்டும் மீண்டும் கற்றுத் தெளிய வேண்டியவை. 6 வேதாங்களான சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிடம். என்னளவில் இதை சுருக்கமாக நினைவில் தங்க இவ்வாறு மாற்றிக்கொள்கிறேன் - துளியறிவு, தொகுப்பறிவு, மொழியறிவு, சொற்பொருளின் தற்காலிகத்தன்மை, ஒலியறிவு, விதையுறங்கும் நிலம். அர்ஜுனனிடமும், அஸ்வத்தாமனிடமும் துரோணர் பொன்னையும், மண்ணையும் அதேபோல் மணியையும், முத்தையும் அறியும் வழி குறித்து கேட்குமிடம் முக்கியமானது. அஸ்வத்தாமன் கூறுகிறான் "பொன், மண் இரண்டையும் வண்ணத்தால் அறிய வேண்டும். மணி, முத்து இரண்டையும் ஒளியால் அறிய வேண்டும்" அர்ஜுனனோ "பொன், மண் இரண்டையும் நிறம் மாறாத் தன்மையாலும், மணி, முத்து இரண்டையும் நிறம் மாறும் தன்மையாலும் மதிப்பிட வேண்டும்" என்கிறான். அஸ்வத்தாமன் கூறுவது துளியறிவு, அர்ஜுனன் கூறுவது தொகுப்பறிவு.

குதிரையேற்றம், யானையேற்றம் குறித்த பகுதிகளும் கூர்ந்த வாசிப்பைக் கோருவது. குதிரையும் யானையும் மனித அகத்தின் இரு வேறு நிலைகளின் குறியீடுகளாய் வாசிக்கலாம். ஒன்றை முழுதாய் அடக்கி வெல்ல வேண்டும், மற்றொன்றுடன் இயைந்து கடக்க வேண்டும். ஒன்றை அறிவின் அகங்காரமாகவும், மற்றொன்றை ஆழ்மனத்தின் அறியமுடியாமையாகவும் உருவகிகலாம். ஒன்று தன் பிம்பத்தைக் கண்டு காமுறுவது, மற்றொன்று அனைத்திலிருந்தும் விலகி தன் கருவறைக்குள் தனித்து குடியிருப்பது. அர்ஜுனன் குதிரையிடம் தோற்பதை இதைக்கொண்டு புரிந்து கொள்ளலாம். எந்த செயலூக்க மனநிலை கனநேர சலிப்பின்றி கற்றலின் ஒவ்வொரு கணத்தையும் பெருங்களிப்பாக மாற்றுகிறதோ, அதுவே அறிதலை "என்" அறிதலாகவும், அகங்காரமாகவும் மாற்றுகிறது.

அதேபோல் துரோணர் அர்ஜுனனிடம் வாக்குறுதி கேட்கும் தருணம் மிக நுட்பமானது. அனைவர் முன்னிலையிலும் தன்னை முதல் மாணவனாக துரோணர் அறிவிக்குமிடத்தில் அர்ஜுனன் கொள்ளும் சோர்வின் காரணம் என்ன? எளிமையான ஒற்றை பதிலைக் கூற முடியாதென்றே எண்ணுகிறேன். என்னளவில் இதை இரண்டு விதமாக நோக்கலாம். அதுவரையில் துரோணருக்கும் அர்ஜுனனுக்குமான உறவென்பது தூய குரு சீடன் உறவு மட்டுமே. அறிவின், ஞானத்தின் தூல வடிவமாகவே துரோணரைக் கண்டு வந்த அர்ஜுனன் சட்டென லௌகீக தந்தையின் முகத்தைக் காண நேர்ந்ததின் அதிர்ச்சியாக இருக்கலாம். அல்லது உரையாடலின் போது துரோணர் கூறிய சொற்களின் சாத்தியங்களை எண்ணியதனாலாகவும் இருக்கலாம். தானும் அஸ்வத்தாமனும் களத்தில் எதிரெதிர் நிலையில் நிற்கும் சாத்தியங்களை உள்ளூர உணர்ந்துமிருக்கலாம்.

துரோணர் ஓரிடத்தில் கூறுகிறார் " வில்லைத் தொட்டு உணர்பவன் அதமன், எண்ணி உணர்பவன் மத்திமன், வில்லாகவே தன்னை உணர்பவன் உத்தமன்." துரோணர் தர்ப்பையைத் தொட்டு வில்லென உணர்ந்தவர், அர்ஜுனனோ சொல்லை எண்ணி வில்லென உணர்ந்தவன், கர்ணனிடன் "வில்லென்பது என்ன" எனக் கேட்டிருந்தால் பதில் "நானே" எனக் கூறியிருப்பானோ? அக்னிவேசர் இறுதியில் உணர்ந்த வில்லென்பது புல்லே என்பதிலிருந்து துரோணர் தொடங்கியிருக்கிறார். அர்ஜுனன் உச்சமாக அறிந்த சப்தயோகத்திலிருந்து கர்ணன் துவங்குகிறான். கங்கைக் கரையில் சகஸ்ரபாகுவின் ஆயிரம் கைகளை இருளில் அவற்றின் ஓசையைக் கொண்டே எதிர்கொள்கிறான். துரோணரிடம் கல்வி கற்கையிலும் கர்ணன் அர்ஜுனனைவிட ஒருபடி மேலேயே இருக்கிறான்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம் தனுர்வேதம் பற்றி துரோணர் குறிப்பிடுவது "சொல்லை வில்வித்தையாக மாற்றுவது ஓராண்டில் கற்று விடலாம், முழுமையான சொல்லை அடைதலென்பது வாழ்நாள் முழுக்க தவம் செய்தடைவது." எண்ணத்தை செயலாக்குவது எளிது, சரியான எண்ணத்தை அடைவதே முழுமையான கல்வி. அதற்கு 6 வேதாங்கங்களின் துணை கொண்டு மொத்த இயற்கையையும் அறிய வேண்டும். ஏனெனில் இந்த வில்லாடும் களம் இயற்கை. அந்த சரியான சொல்லை அடைந்ததினால் தான் நீரோடையில் தெரியும் பறவைநிழலைக் கொண்டு கர்ணன் சரியாக வீழ்த்துகிறான். அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் தவற விடுகின்றனர்.

துரோணரும் கர்ணனும் தன் தோற்றத்தினாலேயே அவமானப்படுகிறார்கள். குருவுக்கு மலைவேடத்தோற்றமும் சீடனுக்கு உயரமும் ஊழாக வந்து ஆடுகின்றன. அங்கநாட்டின் நூற்றுவர்த்தலைவனிலிருந்து பீமன் வரை அனைவரையும் அவன் தோற்றம் சீண்டுகிறது. அர்ஜுனன் அவனை சூதனாக வந்து மண்ணை வென்று அரசனாக முயல்பவனாகக் காண்கிறான்.

முதல் வாசிப்பில் இவ்வத்தியாயத்தில் பெரும் அதிர்ச்சியளித்தது அர்ஜுனன் மற்றும் கர்ணனின் நடத்தைதான். அதுவரை பாண்டவர்கள் அனைவரும் கீழ்மை அண்டாத பாத்திரங்களாகவே வருகிறார்கள். "உன் தந்தையை கழுவேற்ற முடியும். அதற்கான காரணங்களை ஒவ்வொரு நாளும் அவரே உருவாக்கிக் கொள்வார்" எனும் இடத்தில் அர்ஜுனன் உமிழும் நஞ்சு தாங்கவொண்ணாதது. அதேபோல் பீமன் "அவன்மேல் உனக்கு சினமிருந்தால் கழுவிலேற்ற ஆணையிடு. அவன் குலத்தையே கருவறுக்கச் சொல்" என கீழ்மையின் எல்லைக்கே செல்கிறான். ஒரு சூதரை தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்ட பீமன் இவ்வளவு தரம் தாழ்தலுக்குக்கான‌ காரணத்தை அவனின் மொத்த குணாதிசயத்திலிருந்து யூகிக்கலாம். பீமன் எப்பொதும் தன்னை உணவுக்கூடத்திலும் காட்டிலுமே ஈடுபடுத்திக் கொள்கிறான். அன்னமும் யானையும் தான் அவன் அறிதலுக்கான சாவிகள். உடலையே தானாக உணருபவன் அவன். முதல் பார்வையிலேயே கர்ணனின் தோற்றம் தன் ஆழத்தை அசைத்திருக்கும். எவ்வகையிலேனும் அவன் தன் வம்சத்திற்கு அச்சுறுத்தலாகவே இருப்பானென்று உணர்ந்திருப்பான். பீஷ்மருக்கு நிகரான உயரமும், தோள்விரிவும் அவனை வெறும் குதிரைச்சூதனாக இருக்கவிடாது. மேலும் நகுலனும், சகாதேவனும் அவனை மூத்தவரே என்று அழைப்பதைக் காண்கிறான். சிறு குழந்தைகளும் அவனை சூதனாக எண்ணவில்லையென நினைத்திருப்பான். அதனால், கர்ணனனை அடக்கி ஒடுக்க தருணம் நோக்கியிருந்து தனது தம்பியர்களுக்கு நிகராக வாளையேந்தியதைக் காரணமாக வைத்து அவமானப்படுத்துகிறான். முகத்தில் காறி உமிழ்கிறான். இன்னொரு கோணத்தில் கர்ணனை ஷத்ரியனாகவும் தன் அன்னைக்கு ஏதோ வகையில் மைந்தனென்றும் அறிந்து அதனாலும் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம். கர்ணனை அதிரதனின் மைந்தன் தானாவென ஓடும் நீரில் சத்தியம் செய்யுச்சொல்லுமிடத்தில் இதை அறியலாம். இதில் வியப்பான விஷயம் கர்ணனின் கொள்ளும் தயக்கம். ஊள்ளூர தானும் சூதமைந்தனில்லையென்று அறிந்திருப்பானோ?

மற்றுமொரு முக்கியத் தருணம் போரின் இறுதியில் அர்ஜுனன் கொள்ளும் துயரம் ஏன்? பீமனிடம் தான் அர்ஜுனனைக் களத்தில் வென்றிருப்பேனென மீண்டும் மீண்டும் கூற, பீமன் மூடா மூடா என்கிறான். போரில் வெற்றி யாரின் பக்கமென்ற நிச்சயமின்மையை பீமனைப் போல் அர்ஜுனனும் உணர்ந்ததாலா? தன் திறனை தனக்கே நிரூபிக்க நேர்ந்ததாலா? அல்லது போரின் ஏதோ ஒரு கனத்தில் தானும் கர்ணனும் ஒன்றே, இருவரும் ஒரே விசையின் இரு முனைகளே என உணர்ந்து அவனுக்கு ஏற்பட்ட அவமானம் தன்னையும் தாக்கியதாலா?

அர்ஜுனனுடன் போரிடுமுன் வரும் கர்ணனின் அகவோட்டச்சித்தரிப்பை ஒரு இலக்கிய சாதனையென்றே கூறலாம். அந்தநேர உணர்ச்சிகளிலிருந்து மேலெழுந்து முழுமையின் வெட்டவெளியை நோக்கி பிரக்ஞை பதறி மீண்டும் உணர்ச்சிகளில் சிக்கிக்கொள்ளும் மனித அகத்தின் இயல்பை அபாரமாக மொழியில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. "தெய்வங்கள் அறிக" என கர்ணன் கூறுவது ஒரு ஆப்த வாக்கியமாக நெஞ்சில் உறைந்துவிட்டது.

இன்னொரு பூடகமான இடம் திருதராஷ்டிரன் தழுவும்போது கர்ணன் விசும்புவது. தனக்கான வாழ்க்கைச் சூழலை, தன்னுடைய இடத்தை அறிந்த கணத்தில் பீறிட்ட உணர்ச்சியா?

துரோணரும், அர்ஜுனனும் புறக்கணிக்கப்பட்டவர்களின் தரப்பென்றால், ஏகலவ்யன் தோற்றவர்களின் தரப்பாக வருகிறான். வரலாறு முழுக்க தோற்றுக்கொண்டேயிருக்கும் அசுரர்களின் தரப்பாக. புழுவின் தரப்பு. தன்னில் தான் ஒடுங்கி, புழுங்கி, நெளிந்து வதைபடும் தரப்பு. ஆனால் உள்ளே உலகையே உண்டுவிடும் அனலெனும் பெரும்பசி கொண்டுள்ள, பெரும்பசி மட்டுமே கொண்டுள்ள தரப்பு. அறத்தைவிட மறத்தை வாழ்வெனக் கொண்டவர்கள். வீடுபேறடைந்து விண்ணுக்குச் செல்லாமல் மண்ணுக்குள் புதைந்து தன் குலத்திற்கு வேரானவர்கள். மாபலி போல.

ஏகலவ்யனுக்கும் துரோணருக்கும் இடையிலிருக்கும் உறவு மிக ஆர்வமூட்டுவது. துரோணர் பிறப்பால் பாதி மலைவேடன். முதல்முறை சந்திக்கும் அனைவரும் தோற்றத்தால் மலைவேடனென்றே எண்ணுகின்றனர். தர்ப்பைப் புதரிலிருந்து புழுதியுடலுடன் எழுந்து கங்கையில் நீரள்ளுகையில் பின்னாலிருக்கும் ஏகலவ்யனை நீர்பிம்பம் வழியாக சந்திக்கிறார். அக்கணத்தில் அவருள் வாழும் மலைவேடன் அவனை சீடனாக ஏற்றுக்கொள்கிறது. அந்த கணத்தை ஏகலவ்யனிடம் கட்டை விரலைத் தானமாகப் பெற்று தன் கப்பலுக்குத் திரும்பும் போது நீர்பிம்பத்தில் பார்த்துணர்ந்ததும் உடல் வலிப்பால் துடிக்கிறது.

தன் அன்னை நவகண்டம் செய்துகொண்டதும் அவனுள் ஏற்படும் மாற்றம் மிக நுண்ணியது. தன் அன்னை கூறிய சொற்கள் அவனுள் பேருருவம் கொள்கிறது. " தன்னுள் எழும் ஞானத் தவிப்பென்பது தனிமனிதன் சார்ந்ததே. ஆனால் ஞான்மென்பது தன்னைத் தனித்து உணர்வதல்ல. காட்டின் ஒரு மரத்தையே மின்னல் தீண்டுகிறது. ஆனால் அதன்மூலம் மொத்தக் காடும் எரிந்து வீடுபேரடைகிறது." தன்னைத் தனித்து உணர்ந்ததால் குரு கேட்டதும் சிறு தயக்கமுமின்றி விரலைக் கொடுத்தவன், அதன் பிறகு தன் வில்வேதத்தை நாங்கு விரல்கள் கொண்டதாக மாற்றுவதன் மூலம் அக்குருவின் ஞானத்தையே துறக்கிறான். இவ்விடத்தில் மிக இயல்பாக கட்டைவிரல் ஒரு குறியீடாக மாறுகிறது. விண்ணேறுபவர்களுக்கும் மண்புகுபவர்க்குமான போர் மீண்டும் தொடங்குகிறது.

துரோணர் முதல் ஏகலவ்யன் வரையிலான பகுதிகள் விற்களின் ஆடலென்றால், பீமனுக்கும் துரியோதனனுக்குமிடையில் நடப்பது தோள்களின், கைகளின், கதைகளின் ஆடல். துரியோதனின் அகவோட்டம் ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறது. தன்னை அசையும் பாறையாக உணர்ந்த கணமே தன்னைச் சுற்றியுள்ள உலகம் அசையாப் பொருட்களினால் ஆனதென உணர்கிறான். மொத்த உலகையும் தனக்கெதிரான விசையாகக் காண்கிறான். தன் வாழ்வென்பதே அதனுடன் கொள்ளும் முடிவிலாப் பொருதலேவென உணர்கிறான். அவனின் அனைத்து சிக்கல்கலுக்குமான தொடக்கமும் இங்கிருந்துதான் ஊற்றெடுக்கிறது. தன்னுள் உறையும் ராகு, கேதுவின் இச்சை அதுதான். எதிர்ப்பின், அழிவின் தெய்வமே அவனுள் குடிகொண்டிருக்கிறது. தன் தசைகளின் வாழும் நாகங்களிடும் கட்டளை அதுவே. இந்த சமூகக் கட்டுப்பாட்டின் கழுத்துமணியை அறுத்துவிட்டு தன் இயல்பின் காட்டிற்கு அரசனாகத் திரும்பிய சியாமனை எதிர்கொள்ளும் காட்சி மூலம் துரியோதனனைப் புரிந்து கொள்ளலாம். யானைப் பயிற்சியின் போது துரோணர் கூறுவது ஒரு போதும் யானையின் கண்களை சந்திக்கக் கூடாதென்று. இது மனிதர்களுக்கு மட்டுமே. இன்னொரு யானைக்கல்ல. யானையுள் வாழும் சக்தை துரியோதணின் நாகங்களைக் கண்டு கொள்கிறது. இரு கஜபதிகளும் கூர்கண் நோக்கி ஒற்றை அகமென ஆகின்றனர்.

முதல் சந்திப்பில் அர்ஜுனனையும் கர்ணனையும் போலவே துரியோதனனும் பீமனும் தங்களை பரஸ்பரம் ஆடிப் பிம்பங்களாகவே உணர்கின்றனர். இங்கு இருவரும் நட்பாகும் இடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இரு உயிர் நண்பர்களுக்கிடையில் இடையில் எழும் பகைமையின், குரோதத்தின் வீச்சு அளப்பரியது. இருவரின் உடலும் சமரில் ஒன்றை ஒன்று முழுதுணர்வது போல் இருவர் அகங்களின் முழுதுணர்களுக்காகவே இந்த நட்பு நிகழ்கிறதோ?

இந்த இடத்தில் இளநாகனும் மித்ரரும் கொள்ளும் உரையாடல் மீண்டும் மீண்டும் சிந்தித்து தெளிய வேண்டிய இடம். "ஆன்மாவிற்கு மனத்தையும், சித்தத்தையும் விட உடல் அண்மையானது. உடல் தங்களுக்கான அறிதல் வழியைக் கொண்டுள்ளது. உடலென்பது நிலையான பேரிப்பு. ஆதி இயற்கையின் ஒரு துளி. உளன் எனில் உளன், இலன் எனில் இலன் என மனமோ சித்தமோ கொள்ளும் மாயையைக் கொண்டிருப்பதல்ல. ஒரு போதும் இணை எதிரிகள் தழுவிக்கொள்ளலாகாது. தெய்வங்களும் தோற்குமிடம் அது."

தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நெருக்கமான பகுதி கலைதிகழ் காஞ்சி. குறிப்பாக சௌனகரின் பாத்திரப்படைப்பு. ஒவ்வொரு வாசகனும் தன் பிரதிபலிப்பாக அவரை உணர்வானென்றே எண்ணுகிறேன். அதிலும் அவர் தார்க்கிகருடம் கொள்ளும் உரையாடலாக வரும் அத்தியாயம் ஒரு தலைசிறந்த சிறுகதைக்கான ஒருமையும், உச்சமும் கொண்டது. துரியோதனின் அகங்காரம் அடிபடுமிடத்தை உணர்ந்த தருணத்தை விவரிக்கும் சௌனகரிடம் தார்க்கிகர் கூறுகிறார் "அப்போது உன்னுள் எழுந்தது உவகை அல்லவா?" அப்போது சௌனகர் அதிர்ந்து நிற்கிறார். அனைத்து அறிதலும் அகங்காரமாய் மாறும் கணத்தை உணர்கிறார். "அறிதலெண்பது அறிதலின் விளைவுகளுக்காக மட்டுமே" என்கிறார் தார்க்கிகர். மேலும் "தர்க்கம் என்பது இருமுனைக்கூர் கத்தியாக இருக்க வேண்டும். அனைத்தையும் வெட்டி அறிந்து தன்னையும் வெட்டி வெறுமயில் நிற்க வேண்டும். காதலை மாயை என்றறிந்தவனே காதலின் அடிநுனி வரை சுவைக்க முடியும்" என்கிறார். பீமனின் மடியிலிருந்து ஓடும் அந்த விரைநெளி சிறுபாம்பு என்பது தான் என்ன? தர்க்க முட்களின் போதாமைகளினால் உருவாகும் இடைவெளிகளில் நெளிந்து செல்வது மானுட அகங்காரம் தானோ? ஒரு கோணத்தில் மொத்த நாவலையும் மானுட அகங்காரங்களின் ஆடல் எனக் கூறிவிடலாம் தான்.

அதே அத்தியாயதில் இவை எதுவும் தீண்டாமல் ஒரு கிழவர் வருகிறார். பீஷ்மப் பிதாமகர். பல வருடங்கள் கழித்து ஊர் திரும்பியவர் தன் ஆயுதச்சாலயின் எந்த ஆயுதங்களையும் தொடவில்லை. தன் வாரிசுகளின் மேல் எந்த தனிப்பட்ட ஈடுபாடுமில்லை. பீமனின் குழந்தைத் தனம் மட்டுமே அவரது கண்களை சிரிக்க வைக்கிறது. அனைத்து உடைகளையும் கழற்றி விட்டு தன்னுளிருக்கும் கங்கைச் சிறுவனை மீட்டெடுக்கவே முயல்கிறார். படைக்கலம் தொட்டுக்கொடுக்கும் சடங்கிற்கு வரும் பீஷ்மரின் நடவடிக்கைகள் மூலம் அவரது மாற்றம் உணர்த்தப்படுகிறது. அவருக்கு எவரின் பார்வையும் பொருட்டல்ல, அரச குலத்தின் நடத்தை முறைகள் எதையும் பின்பற்றுபவரல்ல. தனது இருக்கையில் கால் மேல் கால் போட்டு ஒரு ஓரத்தில் அமர்கிறார். தன் முன் ஒரு சிறுவன் தன்னை விட ஐந்து மடங்கு உயரமான வில்லை நானேற்றும் திறமையைக் கண்டு முகத்தில் துளியும் சலனமில்லை. திறமை என்பது என்ன? மற்றவரிடம் இல்லாத ஒன்றை தான் அடைவது. தன்னை பிறரிடமிருந்து வேறுபடுத்தி உணர்வது. மானுட அகங்காரத்தின் வேள்வித்தீயில் நெய்யென ஊற்றப்படுவதுதான் திறமையா? இதை தனக்குள் வைத்து அனுப்பிவைக்கும் ஊழின் கைப்பாவையே மனிதன் என பீஷ்மர் அறிந்ததிருப்பதனால் தான் சலனமற்று இருக்கிறாரோ?

வண்ணக்கடலின் சாரத்தை மொத்தமாக இப்படிக் கூறலாமென நினைக்கிறேன். தன்னுடைய அகங்காரத்தை கண்டடைந்து களத்தில் தனக்கான தரப்பைத் தேர்ந்தெடுக்கும் மாந்தர்களின் கதையிது.