அன்பான ஜெயமோகன்
”கருணையுள்ள அறம் என ஒன்றில்லை.”
இந்த வரிகளை மீறிச் செல்லாமல் நின்று விட்டது மனம்.
அன்பு, கருணை, நம்பிக்கை, காதல் என வெறும் பேச்சுப் பேசி வாழ்வதில் இருந்து அறம் கொண்டு வாழ்வதற்கு, அதை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளில் தோற்றுப் போகிற சிறியதிலும் சிறியதான வாழ்க்கை.
பழி பாவம், முற்பிறப்பு, கர்மவினை என்று செயல்களை நியாயப் படுத்துவது கடந்து அறம் கொண்டு மட்டும் வாழ முடியுமா என்று ஏங்கிப் போகிறது நெஞ்சம்.
ரவிச்சந்திரிகா
அன்புள்ள ஜெ
அறம் கருணை அற்றது என்று எழுதிய வரிகளைத்தான் வாசித்துக்கொண்டே இருந்தேன். அதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் திடீரென்று நினைத்துக்கொண்டேன். இந்த உலகத்திலே பெரிய அநீதி இழைக்கப்பட்டவர்கள் எல்லாரும் குரூரமாக ஆகிவிடுகிறார்கள். ஆசிட் ஊற்றப்பட்டு செத்துப்போன பெண்ணின் அம்மா அந்த ஆளை தூக்கிலே போடவேண்டும் என்று கூவி அழுததைப்பார்த்தேன். நீதி கொலைவாளுடன் தீராத கோபத்துடன் வரவேண்டும் என்பது எளிமையான சாமானியர்களின் ஆசை அல்லவா? நீதியும் அறமும் கருணை காட்டவேண்டியது பாதிக்கப்பட்டவர்களிடம்தான். அநீதி இழைபப்வர்களிடமும் அறம் மீறக்கூடியவர்களிடமும் அல்ல. அப்படி நீதியும் அறமும் கருணை காட்டினால் அது சமரசம் என்றுதான் அர்த்தம். சமரசம் நீதியாக இருந்தால் அங்கே அநீதிதான் வளரும். வலிமையற்றவர்களுக்கு நீதி கிடைக்காது. நாம் எப்போதுமே ஆசைப்படுவது கருணை இல்லாத நீதிமானைத்தானே? சினிமாவிலேகூட. கிருஷ்ணன் கீதையிலே சொல்வதும் அதைத்தானே?
பிரபாகர்