Wednesday, September 24, 2014

காமயோகம்




ஜெ


மந்திரமெழுந்தது மனக்குகை இருளில். மின்னிஎழுந்தன என் முந்தையர் விழிகள். கடுவெளி நிறைத்த காரிருளானேன். காலமென்றான துடியொலி கேட்டேன். வெறுமை மிதித்து வெறிநடமிட்டேன். கிழிபடும் திசைகளில் இடியொலி கேட்டேன். கீழ்த்திசை வானில் ஒரு சொல் கேட்டேன்.

உடுக்கொலியை காதில் கேட்கவைக்கும்  இந்தப்பகுதியுடன் நீலம் முழுமையை அடைந்துவிட்டது. வைணவத்தின் ராஸலீலைக்குள் சிவனின் கடுந்துடி தாளமும் காளியின் கொடுகொட்டியும் சரியாக வந்து அமைந்துவிட்டன. யோசித்துப்பார்த்தால் எல்லா மதத்திலும் இந்த ஆடலை காணமுடியும் என்று நினைக்கிறேன்அஷ்டபதியில் இருக்கிறதுஅப்புறம் பெரும்பாலான கிருஷ்ணலீலா விலாசங்களிலே இருக்கிறது.செயிண்ட் ஜான் பாட்டிலும் சாலமோன் பாட்டிலும் இருக்கிறது.

நம்மூரில் குணங்குடி மஸ்தான் சாயபு மனோன்மணி என்ற நாயகி பாவத்தை எழுதியிருக்கிறார். நாயகிபாவம் பல்வேறு ஞானிகளில் இருந்திருக்கிறது. ஆனால் வைணவ ஸ்டிரக்சருக்குள் எப்படி சைவம்அதுவும் காளிவந்து அமைந்தது என்று ஆச்சரியம் நீங்காமலேயே இருக்கிறது

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் கயொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!

என்ற பாரதியின் வரிகள்தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்புறம் ரிக்வேதம். இந்த தன்னிச்சையான out of control ஆன intertextuality மலைக்கவைக்கிறது. இதில் உள்ள பித்து ஆட்டோபிக்‌ஷனை உண்டுபண்ணுகிறது. ஆனால் அதில் கல்வி தானாகவே வந்து அமைந்துகொள்கிறது.

அதேமாதிரி ஆடைமாற்றிக்கொள்வதும் ஆண்பெண் ஆவதும்.  அதெல்லாம் காமஸாஸ்த்ராவில் இருக்கிறதுசின்னவயசிலே வாசிச்ச ஞாபகம்.இங்கிருக்கிறான் பெண்ணன். அவனை ஆளும் ஆடவி. அபூர்வமான வார்த்தைச்சேர்க்கை.

கடைசியில் அந்த வரி.  இருந்த இடத்திலேயே இத்தனை தொலைவு ஓடலாமோ? அதுதான் உச்சம்மேலே சொல்ல ஒன்றுமே கிடையாது

சண்முகம்”



அன்புள்ள சண்முகம்,

காளியை பெண்ணாக எண்ணி செய்யப்படும் கிராதயோக முறைகளில் இதே உருவகங்கள் உள்ளன. பெரும்பாலும் ஒரேபோன்ற வரிகள், ஒரேபோன்ற மந்திரங்கள்

ஜெ