Monday, January 5, 2015

பிரயாகை-66-எண்ணெய்பட்ட கவிதைக்காகிதம்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஒரு சொட்டு எண்ணெய்யை ஒரு காகிதத்தில் விட்டால் அது காகிதம் முழுவதும் பரவிவிடுகின்றது. அந்த காகிதத்தை கழுவினாலும் அந்த எண்ணெய் காகிதத்தைவிட்டுப்போவதில்லை. அதன்பின் அந்த காகிதம் பழைய காகிதம் இல்லை. அந்த எண்ணெயுடன் இருப்பதே தனக்கு ஒரு குணாதிசயம் என்பதுபோல் அந்த காகிதம் வாழ தொடங்கிவிடும். கௌரவர்கள் அனைவரும் எண்ணெய்ப்பட்ட காகிதம்போல ஒரு வழுக்கு தன்மையோடு எழுதுவதற்கு பயன்படதேவை இல்லை என்று வாழ்கின்றார்கள். பாண்டவர்களை வாரணவதத்தில் தீவைத்து கொளுத்தியதை தங்களுக்குள் முழுதாக பரவவிட்டுக்கொண்டு அதுவாகவேதான் வாழ்கிறார்கள் ஆனால் அதுவே தங்களுக்கு ஒரு தன்மைபோல வாழ்கிறாாகள். 

குண்டாசியும் எண்ணெய்காகிதம்தான் ஆனால் அவன் ஒரு கவிதை உள்ளக்காகிதம். கலைந்த கவிதையாகிவிட்டான் ஜெ. குண்டாசிப்போன்ற கவிதைக்காகிதங்கள் எண்ணெய்ப்படும்போது கவிதை பொருளற்றுப்போவதுதான் கொடுமை. கவிதைகள் நெளியும்போது அந்த காகிதமே நெளிந்து  சுருண்டு தவிக்கிறது. காகிதம் பயன்படாமல்போவதை தாங்கிக்கொள்ள முடியும் ஆனால் கவிதை பயன்படாமல்போவதை தாங்கமுடியுமா? குண்டாசிக்குள் இருந்த அந்த பெரும்பாசம் இன்று ஏளனமாய் அடிவாங்கும் நினைக்கும், குடிகாரனாக்கும் நிலைக்கும் கொண்டு சென்றதை நினைக்கும்போது ஆட்சிக்கட்டிலின் விஷப்பல் தெரிகிறது. 

குண்டாசிக்கும் திருதராஷ்டிரனுக்கும் என்ன வித்தியாசம். பாண்டவர்கள் இறப்பு நிஜம் என்று அழும் திருதராஷ்டிரனுடன் ஒப்பிடும்போது, பாண்டவர்களின் இறப்பு சதி என்பதை தெரிந்தும் அழமுடியாமல் அழும் குண்டாசி உள்ளத்தால் திருதராஷ்டிரனை மிஞ்சி நிற்கின்றான். அவன் திருதராஷ்டிரன் வித்து என்று நிருபிக்கின்றான்.  ஒட்டுமொத்த கௌரவர்களையும் எங்கோ ஒரு மூலையில் குத்திக்கிழிப்பான். 

கணிகன்போன்றவர்கள் இலக்குகள்மீதே கண்வைக்கிறார்கள் அதனால் பாதைகள் அவர்களுக்கு ஒரு பொருளே அல்ல. ஆனால் துரியோதன்? துரியோதன் போன்றவர்களுக்கு இலக்குதான் முக்கியம் என்றாலும் பாதைகள் இல்லாமல் அவர்களுக்கு பயணம் இல்லை. பாதைகள் இல்லாத பயணம் அவர்களுக்கு மரணம்போல்தான். குண்டாசியை கொன்றுவிடலாம் என்று கணிகன் சொன்னபோது கணிகனை கொன்றுவிட அவன் கழுத்தில்  வாள்வைக்கும் துரியோதன் தனது இலக்கு தம்பிகளுக்காகவும் என்று காட்டுகின்றான்.

இடும்பனுக்கும் பீமனுக்கும் சண்டை நடக்கும் இடத்தில் தனது தம்பி இறந்தால் நான் இறப்பேன் என்று சொல்லும் தருமனுக்கும் துரியோதனனுக்கும் என்ன வேற்றுமை. தருமன் தனது தம்பிகளை தனது அங்கமாக நினைக்கிறான். துரியோதனனும் தனது தம்பியை அங்கமாக நினை்க்கிறான். சகோதர பாசத்தில் தருமன் பகலில்தெரியும் சூரியன் என்றால், துரியோதனன் இரவில் தெரியும் நிலா.
//கணிகர் அவன் நமக்கெதிரான முதன்மை சான்றுகூறி என்றார்.அவனை கொன்றுவிடலாமென்று ஒருமுறை சொன்னார்வாளைஉருவி அவர் கழுத்தில் வைத்து மறுமுறை அச்சொல்லை அவர்சொன்னாரென்று நானறிந்தால் அவரது தலை கோட்டைமுகப்பில்இருக்கும் என்றேன்திகைத்து நடுங்கிவிட்டார்” என்றான்துரியோதனன். “அவருக்கு தார்த்தராஷ்டிரர்களைப்பற்றிதெரியவில்லைவாழ்வெனில் வாழ்வு சாவெனில் சாவுநாங்கள்தனித்தனி உடல் கொண்ட ஒற்றை மானுடவடிவம்.”//

கர்ணனை தொடவந்த குண்டாசியை சுபாகு ஓங்கி அறையும்போது எதுவுமே சொல்லாமல் செல்லும் கர்ணன். மஞ்சத்தில் சுருண்டு படுத்திருக்கும் குண்டாசியின் கால்களை மெல்லத்தடவினான் என்பதை படிக்கும்போது வெளிப்படும் கர்ணனின் அகவடிவம் நின்று  கவனிக்கவைக்கிறது. அறிந்தோ அறியமலோ கர்ணன் வெளியே பாதி உள்ளத்தையும், உள்ளே பாதி உள்ளத்தையும் வைத்து திண்டாடுகின்றான். எதார்த்தமாக செல்லும் கதைதான் என்றாலும் கர்ணனின் இந்த சித்திரம் துள்ளியமாக வளர்ந்து வடிவெடுத்து உள்ளது.
” என்று கன்னத்தைப் பொத்தி அலறியபடி குண்டாசி நிலத்தில் குந்திஅமர்ந்தான். “எல்லோரும் என்னை அடிக்கிறார்கள்அம்மாஎன்னைஅடிக்கிறார்களேஅம்மா!” என்று அழத்தொடங்கினான்கர்ணன்திரும்பி நோக்காமல் நிமிர்ந்த தலையுடன் நடந்தான்.

//கர்ணன் அவன் மஞ்சத்தின் விளிம்பில் அமர்ந்தான்குண்டாசியின்மெலிந்து மூட்டு வீங்கிய கால்களை தன் கைகளால் மெல்லவருடினான்சிடுக்குபிடித்த முடி விழுந்து கிடந்த சிறிய மெலிந்தமுகத்தை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்//

ஒருவன் அடிபடும்போது அகம் வலிக்காமல் அதற்காக எந்த அக கூச்சமும் சுளிப்பும்கொள்ளாமல் நிமிர்ந்த தலையுடன் சென்ற கர்ணன் இப்போது அடிப்பட்டவன் காலைப்பிடித்துக்கொண்டு முகம்ப்பார்த்து அமர்ந்து இருக்கிறான்.  கர்ணன் ஒவ்வொரு பிழைக்கும் பின்னால் பின்னால் வருந்தும் எளிய அகம்படைத்த மனிதனாக வரும் காட்சியின் அடையாளம்.

ஒரு செயலை செய்வதற்கு முன்னமே அறம் என்ன என்று கேட்கும் தருமன் ஒருபுறம். ஒரு செயலுக்கு பின்னால் அறம் என்ன என்று நினைக்கும் கர்ணன் ஒருபுறம். இருவரையும் சுமக்கும்போது குந்தியின் மனநிலை என்ன என்பதை இருவரும் பிரதிபளிக்கின்றார்கள். யாராக இருந்தாலும் அறம் கூர்ப்பார்ப்பது இதயத்தில். கர்ணனின் இன்றை படைப்பு அற்புதம் ஜெ. நன்றி

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.