Sunday, January 4, 2015

வண்டு



இனிய ஜெயம்,

கிட்டத் தட்ட பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும்,  மனுஷ்ய புத்திரன்  உங்கள் அலுவலக எண்ணை எனக்கு தந்தார். ரொம்பநாள் அதை வைத்துக் கொண்டு உங்களிடம் பேசவேண்டியதை  கனவு கண்டு கொண்டே திரிந்தேன்.

ஒரு பொர்க்கணத்தில் உங்களுக்கு தொலைபேசி விட்டேன்.  ஒரு பெண் தொழி போன் எடுத்தார். என்ன எப்ப பாரு ஜெயனுக்கு போன் என மிரட்டினார். நான் அழாக் குறையாக  நான் செய்யும் முதல் போன் இதுதான் என்றேன். அவர் சிரித்தபடி இருங்க கூப்புடுறேன்  என்றார்.

அன்று துவங்கி இன்று வரை  உங்கள் குரல் கேட்கும் 'அந்த நொடி' எழும் உவகை  இப்போது வரை குறையவில்லை.  சாரமற்ற ஒரு சொல்லும் இதுவரை நீங்கள் பேசி நான் கேட்டதில்லை. உங்கள் உரையாடலில் விழும் ஒரு லீட் என்னை எங்கெங்கோ அழைத்து செல்லும்.

நேற்றும் அப்படியே. ஒரு நண்பர் கர்ணன் பாஞ்சாலியை நோக்கும்  கணத்தை பாரதி கவிதை ஒன்றுடன் இணைத்து எழுதி இருந்தார். அத்துடன் உங்கள் லீடும்  இணைந்தால்  பாரதத்ததின்  முக்கிய நிகழ்வு ஒன்று  துலக்கம் கொள்கிறது. அது கர்ணனின் 'ஆளுமை சரிவு' நிகழும் இடம்.

மொத்த காம்பில்யமே  கர்ணன் ஒருவன் இருப்பால் இந்திர விழா போல ஆகிவிடுகிறது. அனலே நீர்மயாகிய  கண்கள் கொண்ட, காமத்தில் நெக்குருக்கும் வெம்மை நதி சுழலின் மையமாக கர்ணன் இருக்கிறான். ஆல்பா மேல்கள்  பந்தயத்தில்  துரியன் தோர்ப்பது என்ன 'கண்டுக்கொள்ளப்' படக் கூட இல்லை.

திரௌபதியை தொடர்ந்து லட்சுமி கோவிலுக்குள் நுழையாமல்  கர்ணன் நதிப் படுக்கை நோக்கி நகர்கிறான். ஆம் அவன்  திரௌபதியை  எப்படி பார்த்தானோ அந்த அந்த சித்திரத்தை அவன் இழக்க விரும்ப வில்லை.

இத்தனை வருடம் கழித்து கர்ணன் துரியன் வசம்  வண்டு தன்னை துளைத்த அந்த கணத்தை சொல்வது இங்கு முக்கிய தருணம்.  இனி கர்ணனுக்கு திரௌபதியின் அந்தப் பார்வை  அந்த வண்டின்  குடைவுதானே?  நண்பன் அல்லவா துரியன் . உடனே புரிந்து கொள்கிறான். தன் நண்பனுக்காக, கர்ணனுக்காக  தனது 'ஷாத்ர' குணத்தையே விட்டுத் தருகிறான். [திரௌபதி கேட்கும் கதையில் வரும் நாயகன் விரும்பிய பெண்ணை இழப்பது என்பது ஒரு சத்ரியன் தன ஷாத்ர குணத்தை இழப்பதே என்கிறான்]. கர்ணனின் குருவுக்கு  கர்ணனுடனான உறவு இதே வண்டின் குடைவுதான். கர்ணன் எனும் வண்டு துளைத்து ''வெளியேறி'' விட்டது இனி அந்த இன்பம் மிகும் வலி தனக்கு இல்லை எனும் இழப்பே  குருவை கர்ணனை நோக்கி சாபம் இட வைக்கிறது.

மொத்த பாரத்திலும் கர்ணனின் ஆளுமை சரிவு நிகழ்வது  ஒரே இடத்தில் மட்டுமே. அது சபையில் திரௌபதியை அவமதிப்பது.   இப்பொது மொத்தமும் ஒரு வரிசையில் நிற்கிறது.  சபையில் கர்ணன் திரௌபதியை தன் தொடையைக் காட்டி தானே அழைக்கிறான். 

இனி பார்த்தனின் அம்பு மட்டுமே கர்ணனின் அந்த தினவை நிறுத்தும்.

சைதன்யா கேட்டார்கள் 'எப்படி தினமும் மகாபாரதம் வாசிக்கிறீங்க ரொம்ப சிரமம் ஆச்சே' என்று வினவினார்கள்.  மெய் தான்  இன்று பூரா மனம்  கர்ணனில்தால் சிக்கிக் கிடக்கும்.  உள்ளே மகாபாரதத்துடன் அன்றாட வேலையை  செய்வது என்பது கர்ணன் அனுபவிக்கும் அதே வண்டுக் கடித்தான்.   

கடலூர் சீனு