ஜெ
வண்ணக்கடலில் அகோரிகள் சூலத்தில் விழுந்து சாவதைப்பற்றிய அத்தியாயத்தை வாசித்து திக்பிரமை அடைந்தேன். அதே போன்ற அத்தியாயம் பிரயாகை 72. இருண்ட பெரிய அனுபவம் என்று சொல்லவேண்டும். இன்றைக்குள்ள நம்முடைய வாழ்க்கையில் இதை வைத்துப்புரிந்துகொள்ளமுடியாது. அன்றாடம் தற்கொலைப்போர்களும் மதவெறித்தாக்குதல்களும் நடக்கும் ஆப்கானிஸ்தானில் இதைப்புரிந்துகொள்வார்கள்
அன்றையசமூகம் போர்ச்சமூகம். போர்வீரர்கள் செத்தே ஆகவேண்டும் . மரணபயம் இருக்கக்கூடாது. அதற்காகவே அந்த மனநிலையை உருவாக்குகிறார்கள். ’இட்டெண்ணித் தலை கொடுக்கும் எயினர்’ பற்றி சிலப்பதிகாரம் சொல்கிறது. இதே காட்சிதான். இதேபோல ஊன் கலந்த சோறை நாலுபக்கமும் வீசும் காட்சியும் சிலம்பிலே வருகிறது. அது முத்ரா ராட்சசம் நாடகத்திலும் வருகிறது என்று ஞாபகம்.
பலி என்பது அன்றைக்கு நடந்துகொண்டே இருந்தது. போர்க்களத்தில் தன் மைந்தர்களைப் பலிகொடுத்துக்கொண்டுதான் அச்சமூகமே வாழமுடிந்தது. அதிலிருந்துதான் கொற்றவை உக்ரசாமுண்டி போன்ற போர்த்தெய்வங்கள் உருவாகி வந்திருக்கவெண்டும். அன்றைக்கு பயத்தை ஜெயிப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கக்கூடும்
ஆனால் அந்தக்காட்சியை இத்தனை துல்லியமான தகவல்களுடன் நேரில் பார்ப்பதுபோல பார்ப்பது பயங்கரமான அனுபவமாக இருந்தது. அதிலும் ஒருவன் பலியாகவே வருகிறான். அந்த உக்கிரக்காட்சியில் இன்னொருவனும் பலியாகிறான். அந்த இடம் புனைவு எந்த எல்லைக்குப் போகும் என்பதற்கான ஆதாரம். மூளைக்குள் ஒரு நரம்பு வீணைத்தந்தி போல அறுந்ததை உணரமுடிந்தது
சண்முகம்