Thursday, January 1, 2015

நிலங்கள்




அன்பள்ள ஜெ அவர்களுக்கு,


        வெண்முரசைத் தொடர்ந்து ஓராண்டாக வாசித்துள்ளேன் என்பதே எனக்கு பிரம்மிப்பளிக்கிறது.இதை எழுதும் தங்களின் பெருமையை எண்ணிப்பார்க்கிறேன்.

           வெண்முரசு என் வாழ்வில் எனக்கு கிடைத்த உன்னத வாசிப்பனுபவம்.முதற்கனலில் அன்னையர் ஒவ்வொருவரின் கண்ணீரையும் உணர்ந்தேன்.மழைப்பாடல்,வண்ணக்கடல் என்று நான் முழுவதுமாக நாவலினூடே வாழ்ந்தேன்.நீலம் சற்றே உணர்வுப்பூர்வமானதாய் இருந்தது.நீலத்தின் வாசக மறுவினைகள் அதன் வீச்சினை தெரிவித்தன.நானும் அப்படியான மன நிலையிலேயே அதனை வாசித்தேன்.ராதையின் பிரேமையை உணர்ந்தவளே நான்.அப்பொழுதெல்லாம் உங்களுக்கு எழுதத் தோன்றவில்லை.ஆனால் நீலம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பகுதியாகிவிட்டது.அதன் கவி மொழி என்னை பரவசப்படுத்துகிறது.

     அந்த மன நிலையிலிருந்து மீண்டு எப்படி பிரயாகையை வாசிப்பேன் என்று எண்ணியிருந்தேன்.ஆனால் மிக இயல்பான பிரயாகையின் ஓட்டம் என்னை இழுத்துக் கொண்டது.

    நன்றிஜெ சார்.மிக அற்புதமான வாசிப்பனுபவம்.நான் ஏற்கனவே எழுதியது போலவே எங்கள் குடும்ப திராவிட இயக்கப் பிண்ணனியினால் புராணங்கள் பற்றிய என் அறிவு குறைவானதே.கோவில்களுக்கே என் இளவயதில் சென்றதில்லை.

      என் தந்தையின் இலக்கிய ஆர்வத்தினால் வாசிக்க ஆரம்பித்தவள் நான்.பதின் வயதுகளிலேயே தமிழின் புகழ்பெற்ற எழுத்துகளை,வணிக எழுத்துகளைத் தாண்டிவிட்டேன்.கல்லூரி காலங்களில் தீவிர இலக்கிய வாசிப்பை அறிந்தேன்.ஆனாலும் நமது பாரம்பரிய இலக்கியங்களை ஒதுக்கியே வந்தேன்.அது என் மனதில் உருவாக்கப்பட்ட கருத்தென்று இப்பொழுது உணர்கிறேன்.நான் ஆங்கில இலக்கியத்தில் எம்.பில் வரை படித்தவள்.மேற்கத்திய இலக்கியங்களை அறிந்த எனக்கு கம்ப இராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய சரியான அறிமுகம் உங்கள் தளத்தின் மூலமே கிடைத்தது.தங்களின் தளத்தை வாசிக்கத் தொடங்கிய பின்னரே கம்ப இராமாயணத்தையும்,சங்க இலக்கியங்களையும் தேடித்தேடி வாசித்தேன்.என் நன்றியை எப்படி வெளிப்படுத்துவதென்று தெரியவில்லை.

   கடந்த ஓராண்டாக வெண்முரசு எனக்கு தரும் அனுபவ எல்லைகள் மிகப் பெரியவை.மகாபாரதம் பற்றி ஓரளவே அறிந்திருந்த எனக்கு இக்கதையாடல்கள அளிக்கும் உவகை மிகப் பெரியது.உங்களின் விஷ்ணுபுரம் உள்ளிட்ட எல்லா படைப்புகளையும் வாசித்த எனக்கு மிகவும் பிடித்தது வெண்முரசுதான்.உங்கள் படைப்புகளிலேயே மிகச்சிறந்ததாக எனக்குத் தோன்றுவது இது தான்.ஒரு நாளும் விடுபடாமல் இதனை வாசித்து வந்துள்ளேன்.அதுவே எனக்கு நல்ல அனுபவம்.

      நான் அதிகம் வாசிப்பவள்.தங்களின் இணைய பக்கங்கள் முழுவதையுமே வாசித்துள்ளேன்.ஜெ சார்  என்னால் இலக்கிய சந்திப்புகளில் கலந்து கொள்ள இயலாத ஏக்கத்தை போக்குபவை தங்களின் பதிவுகளே.முக்கிய இலக்கிய ஆளுமைகள் பற்றி உங்கள் எழுத்துகள் மூலமே நான் அறிந்துள்ளேன்.

         எனக்கு இன்னும் மகிழ்வளிப்பவை தங்களின் பயண அனுபவங்கள்.வசதிகள் இருந்தும் பெண்ணாக என்னால் பார்க்கவே இயலாத இடங்களையும்,தகவல்களையும் உங்கள் பதிவுகள் மூலமே அறிந்து கொள்கிறேன்.இமயம்முதல் ஆஸ்திரேலியா வரை உங்கள் அனைத்து கட்டுரைகளையும் வாசிப்பதே என் வேலை.


மோனிக்கா மாறன்