அன்புள்ள ஜெ ,
உங்களின் கம்பராமாயண சொற்பொழிவு கேட்டேன் , நிறைய விசயம் தெரிந்து கொண்டேன் . முக்கியமாக காவியத்தின் இயல்பு பற்றி , ஒரு முறை வெண்முரசில் இருந்த வேத வரிகளை எடுத்து பகிர்ந்திருந்த போது அது வேத பாடலின் மொழியாக்கம் ,அப்படியே எடுத்தாள பட்டுள்ளது என சொல்லப்பட்டது , அதாவது உங்களின் படைப்பில் இன்னொருவரின் அல்லது வேறு ஒரு படைப்பை உள் கொண்டு வந்தது சரியற்ற செய்கையாக முன்வைக்கப்பட்டது , இந்த உரையில் நீங்கள் காவியம் என்பது அதற்கு முன்வந்தவர்களின் தொகுப்பாக இருக்கும் என சொன்ன போது வெண்முரசில் வேத வரிகள் இருப்பது பற்றி ஞாபகம் வந்தது , அருகரின் புகழ் சொல்ல நீங்கள் திருக்குறளின் சில வரிகளை அப்படியே எடுத்தாண்டிருப்பதும் ( மலர்மிசை .. ) ஞாபகம் வருகிறது . கம்பராமாயணத்தில் நம்மாழ்வாரின் பாடல்கள் ,திருக்குறள் வரிகள் , சங்க இலக்கிய வரிகள் அப்படியே எடுத்தாள பட்டுள்ளதையும் நீங்கள் உரையில் சொன்ன போது மேலும் புரிந்தது , கம்பனில் இந்த பாடல் வரிகள் உள்ளது பற்றி ஊட்டி காவிய அரங்கில் நாஞ்சில் உரையாடியதாக ஞாபகம் .
இன்னொன்றும் முன்வந்த ஒரு உவமை மேம்பட்டு இன்னும் அழகாக அடுத்து உருவாகிய காவியத்தில் இருப்பது பற்றி, சங்க பாடலில் குறவன் சிறுவனும் குட்டியானையும் சுற்றி விளையாடுவது கம்பனில் குட்டி சிங்கமும் பிறை நிலவும் சேர்ந்து கொள்வது அழகாக இருந்தது , பிறைநிலவு யார் அதிகம் தவழ்ந்து சுற்றுகிறதோ அதன் பின்னால் தவழ்கிறது என்பது இன்னும் அழகாக இருந்தது .
இன்னொன்று , இது ஒரு வினா , சோழ சாம்ராஜ்யம் நிலையாக இருந்ததால்தான் , கலைகள் உச்சங்களுக்கு சென்றது , அதில் உச்சம் கம்ப ராமாயணம் என்கிறீர்கள் , அப்படியானால் நீங்கள் எழுதும் சூழல் அவ்வாறானதாக இருப்பதாக நினைக்கிறீர்களா ?!
இன்னொன்று ஓபரா மேடை நாடகம் பற்றி , அது இங்கு நிகழ வில்லை , காவியம் மட்டும்தான் நிகழ்ந்தது என்கிறீர்கள் , முன்பு சொல்புதிது குழுமத்தில் ஏன் நிகழவில்லை என நீங்கள் வினா எழுப்பி ஒரு விவாதம் நிகழ்ந்தது , இப்போது அவ்விவாதம் ஞாபகம் இல்லை , ஆனால் நீங்கள் இதில் சிற்பம் பற்றி அதிகம் பேசிய போது தோன்றியது ,அந்த நிகழ்த்துக்கலை சிலைகளில் நிகழ்ந்தது என , அநேகமாக எல்லா சிலைகளிலும் ஒரு அசைவு இருக்கும் , அந்த அசைவு ஒன்றை சொல்லும் , இது தாண்டி காவிய நிகழுவுகளும் அசைவுகளாக சிலைகள் அநேகம் உண்டு .
ஜெ , உண்மையாகவே உங்கள் உரை செவிநுகர்கனி தான் ! இந்த வார்த்தை உரையில் இருந்து எடுத்தேன் :)
தீபாவளி வாழ்த்துக்கள் ஜெ
ராதாகிருஷ்ணன்
அன்புள்ள ராதா
தமிழகம் - தமிழக வாசகர்களை கணக்கில் கொண்டால் பெரிய படைப்புகளை எழுதுவதற்கான சூழல் இல்லை. அதற்கான ஊக்கம் வெளியே இருந்து வருவதில்லை. நாமேதான் ஊக்கிக்கொள்ளவேண்டும்
ஆனால் இன்றைய உலகம் வேறு. இன்று உலக இலக்கியம் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இலக்கியப்போக்குகளும் உலகளாவியவையாக ஆகிவிட்டிருக்கின்றன. ஒரு பெரும்படைப்புக்கான பண்பாட்டுப்புலத்தை உலகளாவிய சூழலை பின்னணியாக உருவகித்துக்கொண்டு ஒர் எழுத்தாளன் அடைந்துவிடமுடியும்
ஜெ