Thursday, November 1, 2018

ருக்மி




ஜெ

ருக்மியின் மனமாற்றத்தை நான் எதிர்பார்த்திருந்தேன். அதற்கு மூலக்கதை என்னவென்று தெரியும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அவனுடைய குணமே ஊசாலாட்டம்தான் என்பதும் காரணம். ஆனால் அந்த ஊசலாட்டத்தை ஒரு குணக்கேடாக எளிமையாகச் சொல்லிவிடாமல் உண்மையிலேயே நம்பி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஆடிக்கொண்டிருப்பவனாக அவனைக் காட்டுகிறீர்கள். அவன் கிருஷ்ணனிடமும் தன் ஆணவத்திடமும் மாறிமாறிச் சென்றுகொண்டிருக்கிறான்.

வைஷ்ணவ பிரசங்கங்களில் ருக்மியின் இந்தக்குணம் அடிக்கடிச் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும். அவனுடைய ஊசலாட்டம்தான் இருபதாம் நூற்றாண்டின் இயல்பான மனநிலை. நன்மையிலும் தெய்வத்திலும் ஊன்றி நிற்கமுடியாது. ஏதாவது ஒன்று வந்து வெளியே இழுக்கும். ஆணவம் தடுக்கும். இங்கே அவனுடைய ஆணவத்தின் வெளிப்படாக இருப்பது குலம். ஏன் குலம் என்றால் அவனுக்கு மெய்யாகவே குலமேன்மை கிடையாது. அதைக்கொண்டுதான் அவனுக்கு அவ்வளவு பதற்றம் ஏற்படுகிறது. அதிலிருந்து அவனுக்கு விடிமோட்சமே கிடையாது. ஒருகணம் பகவானின் காலடியில் பணிந்தான் என்பதை மட்டும்தான் அவனுடைய நல்ல வாய்ப்பாகக் கொள்ளவேண்டும்

சுவாமி