ஜெ
ஓர் உத்தியாகவே இந்த பிரிமானிஷன் வந்துகொண்டிருக்கிறது. இந்த நாட்களை சஞ்சயன் சொல்வதுதான் வியாசகாவியமாகிறது. இன்றுவரை அழியாமல் இருக்கிறது. வெண்முரசாகவும் சொல்லப்படுகிறது. இது மெட்டாஃபிக்ஷன் என்னும் வடிவம்தான்
ஆனாலும் இந்த விந்தை மனதை ஆக்ரமிக்கிறது
முதல்நாள் மாலையில் விந்தையானதோர் நுண்ணுணர்வை அவன் அடைந்தான். அவனுடைய சொற்களை எங்கோ எவரோ அறிந்துகொண்டிருப்பதாக. ஒவ்வொரு மாத்திரையையும், ஒவ்வொரு உணர்வுத்துளியையும். அவருடைய நினைவிலிருந்து அவை பதிவாகும். அவை அள்ள அள்ளக் குறையாத பெருங்காவியமாகும். இம்மானுடர் முற்றழிவார்கள். இந்த நதிகள் திசைமாறி பெயர் திரிந்து பிறிதாகும். இந்த மலைகள்கூட சற்றே கரைந்தழியக்கூடும். ஆனால் அச்சொற்கள் இருக்கும். அவற்றை தலைமுறைகள் பயில்வார்கள். ஒவ்வொரு சொல்லும் முளைத்துப்பெருகும். இச்சொற்களிலிருந்து இவையனைத்தும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து விரிந்து அலையடிக்கும்
எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இங்கே இது சொல்லப்படப்போகிறது என நினைக்கும்போது பெரிய கனவு ஒன்றைக் காண்பதுபோலிருந்தது
சிவா