Monday, September 1, 2014

பீலி

ஜெ,

திருணவிரதன் வரும் அத்தியாயம், பூதனை வரும் அத்தியாயம் இரண்டையும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். வாசித்து முடியாத இலக்கியம் ஒன்றின் மேல் ஒன்றாக வந்து விழும் படிமங்கள். ஒரு மாதிரி பித்துநிலையோ கிறக்கமோ வந்துவிடுகிறது. தியானம் செய்யும்போது ஒருமை கூடி வராத நிலையில் வரக்கூடிய அதே மயக்கமும் கனவும் கலந்த நிலைமை. அற்புதம்

நீங்கள் சொல்லவில்லை என்றால் யோகக் குறியீடுகளை நோக்கி மனசு போயிருக்காதென்றாலும் நானும் அதை உணர்ந்துகொண்டுதான் இருந்தேன். தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. முதற்பூதமான மண். அன்னமயகோசம். அவள்தான் பூதனை. சீண்டப்படுகிறாள். சினம்கொண்டு விஷமாகிறாள். அவள் ரசத்தை உறிஞ்சி அவளை சமனப்படுத்துகிறது இறையம்சம். அவள் சகோதரர்களைப்பற்றிய குறிப்பும் சிறப்பானது.

மூலாதாரக்கனல் பூதனை. அதை ஊதிப்பற்றவைக்கும் பிராணன் திருணவிரதன். காமக்காற்று. அது முனிவரின் ஆன்மாவிலும் கற்புக்கரசியின் அந்தரங்கத்திலும் நுழையக்கூடியது. கனசியாமனின் மயில் பீலியின் ஒரு இதழைக்கூட அசைக்கவில்லை. காரணம் அது பிரேமை

அற்புதம் ஜெ

சுவாமி