அன்புள்ள ஜெமோ,
தங்களின் உடனடி பதிலுக்கு நன்றி. என் தாமதமான கடிதத்துக்கு மன்னிக்கவும்.
மூன்றே கடிதங்களில் தங்கள் படைப்புகளை நான் எவ்வாறு அணுகுகிறேன் என எப்படி கண்டுகொண்டீர்கள்? தங்களின் கடிதத்தில் துரோணரின் அந்த மூன்று விரலை உணர்ந்தேன். தங்களின் இந்த பதிலுக்குப் பிறகு நீலம் அங்கங்கு எனக்கு திறக்கிறது. ராஜயோகத்தைப் பற்றிய ஓர் அடிப்படை புரிதலை அடைந்த பின்னர் மீதமும் திறக்கும் என நம்புகிறேன். இதுவரைக்கும் பின் தொடர தங்களின் இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள் மற்றும் உங்களை பின்தொடர்ந்து கொண்டிருக்கும் ஆறு வருடங்களும் பெரிதும் உதவுகின்றன.
உஙகள் வாசகர்களை அடுத்த கட்ட வாசிப்புக்கு அழைத்துச் செல்வதில் நீலம் பெரும்பங்கு வகிக்கப் போகிறது. ஏன், நீங்களே இதை மீண்டும் வாசிக்க நேர்ந்தால் பல பகுதிகளை ஒரு முறைக்கு இரு முறை வாசிக்க வேண்டியிருக்குமென நினைக்கிறேன். சில பகுதிகளெல்லாம் சன்னதம் வந்தவர் போல எழுதியிருக்கிறீர்கள். தங்கதடையின்றி, ஒரு வித வேக நடையில் வாசிக்கும் போது தமிழின் ஒலியழகு மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்று திருணவிருதன் காற்றிலிருந்து அடைந்தவற்றை வாசிக்கும் போது திருதராஷடிர மாமன்னரின் உள்ளே ஓடிய பண்ணைக் கேட்ட காநதாரியின் அனுபவம் கிடைத்தது. சில சமயம் ஒரே கதியில் சலசலக்கும் சிற்றருவி போல, சில சமயம் குறவஞ்சியின் நடையைப் போல. நீலம் அலாதியான அனுபவம். இன்னும் இன்னும் என்னைத் தெரிந்து கொள்ளத் தூண்டுகின்றது. மென்மேலும் தெரிந்து கொள்வேன். மீண்டும் நன்றி.
- அருணாச்சலம், நெதர்லாந்து