Friday, September 5, 2014

மருதத் திணை

ஓம் முருகன் துணை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

படிக்கப்படிக்க படித்தது ஒன்றும் இல்லை என்பதுதான் கல்வியின் அற்புதமா? சொன்னக்கதைப்பெரியது சொல்லும்கதை மிகப்பெரியது என்பதுதான் வெண்முரசின் அற்புதமா? ஒவ்வொரு நாளும் இதழ்விரித்துக்கொண்டே போகும் பெரும் மலர் வெண்முரசு. நீலம் அதன் மகரந்தம்.  

நீலம்-17, கதை அகஉணர்ச்சி ஞானம் என்று மூன்று அடுக்கு கோபுரமாக்கப்பட்டு, கோபுரங்கள் ஒவ்வொன்றும் சிற்பங்கள் செதுக்கி நிறைத்துவைத்த கலைக்கூடம்.

கதை என்றுப்பார்த்தால், கண்ணன் தயிர்ப்பானையை உடைத்தான் யசோதை உரலில் கட்டினால் அவன் உரலை இழுத்போய் மருத மரத்தை சாய்த்தான். சம்பவங்களால் பெரிது பெரிதான காட்சிகள் இடம்பெறும் கதை.

உணர்ச்சி என்றுப்பார்த்தால், அன்னையாகிவிட்ட யசோதையின் கன்னிப்பருவ உணர்வுகள் அகமும் புறமும் ததும்பி அலையடிக்கும் பெரும்கடல். கூட்டித்தள்ளத்தள்ள வந்து குவிந்து குவிந்து குப்பையாகும் உணர்ச்சியும், காமம், காதலும் //கண்மூடி பல்லிறுக்கி என் துடைப்பத்தால் கூட்டி ஒதுக்கி குப்பைக்குள் தள்ளுவேன். நீர்மருது பூக்கும் இளவசந்த காலத்தில் மதம் மணக்கும் மலர்க்குவைகள் என் குடிலின் கூரை நிறைத்து காற்றில் உதிரும். சாளரவிரிசலில் புகுந்து வந்து இருள்நிறைந்த இரவுகளை நிறைக்கும். நீர்மருதை நினையாமல் நான் ஒருநாளும் வாழ்ந்ததில்லை//

ஞானம் என்றுப்பார்த்தால், அறிந்திருக்கவேண்டிய அன்னை அறியாமல் இருப்பதும் அறிய பசும்குழவி அறிந்திருப்பதும் ஒன்றி ஒன்றாகி திரண்டு வெண்ணையாய் வழியும் சொற்கள் சிரித்து கையசைத்து சுற்றி விரைந்தோடும் அவனை சுழன்றுசென்று பற்ற இயலாது மூச்சிளைத்தேன். சின்னஞ்சிறுகாலில் கன்றும் இளமானும் குடிகொள்வதை அறிந்தேன். இளைத்து இடையில் கைசேர்த்துகண்ணா நில்நில்என்று சொன்னேன். “போ, நீ நனைந்திருக்கிறாய்என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று திகைத்தேன். “நீ நீரோடை!” என்றான். அறிந்து சொல்கிறானா அறியாப் பிழைமொழியா? என்னவென்றறியாமல் விழிதிகைத்து அங்கே நின்றேன் “அம்மரம் இம்மரம்…அம்மரம் இம்மரம்” யசோதை திகைப்பதும், கண்ணன் சிரித்து கையசைத்து ஓடுவதும். பக்தனும் பகவானும் விளையாடும் கண்ணாமூச்சி காட்சி.  



கன்னியர் மனதில் கண்ணென்னும் விதையாகி விழுந்து காதல், காமம் என்னும் மரமாகி முளைத்து மதுநீர்பெருகி மலர்வடி நிற்கும் மரங்கள் காமம் என்னம் இருளனாவும, காதல் என்னும் ஒளியனும் இல்லாமல் இல்லை. கணவனும் அதை அறிவதில்லை அறிய வேண்டியதும் இல்லை.  மகன் அறிகின்றான் மகன் அறிந்தான் என்பதை அன்னையும் அறிகின்றாள். அன்று விழுகின்றது அந்தமரம் மண்ணில். அதன் பின்பு அந்த மரத்தின் பூக்கள் அவள் கையில் இருந்தாலும் மணப்பதில்லை. ஒரு பெண் மகனைப்பெற்றதாலேயே பரத்தை தொடும் பரிசுத்தம் அடைகின்றாளா? மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்யவேண்டுமம்மா என்பது இதுதானா? தவம் செய்யாமலே தவமாகிவிடும் அன்னைகளின் அழகுதான் எத்தனை அற்புதம். யசோதையின் வார்ப்பு ஒளியியால் வரைந்த ஓவியம். //அங்கே விழுந்துகிடந்த ஒற்றை மருதமலர் எடுத்து முகர்ந்தேன். வெற்றுமலராக என் விரல்கொண்டிருந்தது. வீசிவிட்டு கண்ணனைக் கையில் எடுத்து நெஞ்சணைத்து நின்று அம்மருதின் ஓங்கிய வெண்தடிகளை நோக்கினேன். வேர்கொண்டு உண்டதெல்லாம் வான்கொண்டு அறிந்ததெல்லாம் நீர்கொண்டு செல்ல நிறைந்து கனத்து அங்கே கிடந்தன அவை. தண்மணிக்கழுத்தனும் தாமரைஎழிலனும் விண்ணகம் புகுந்திருப்பர் என்று எண்ணிக்கொண்டு புன்னகைத்தேன். திரும்பி நடக்கையில் என்னுள் இருந்து எப்போதும் கனத்த எடைமிக்க கரும்பாறைகளெல்லாம் உதிர்ந்திருப்பதை அறிந்தேன். அக்கா, நாளை விண்ணகம் ஏறுகையில் வெறும் சிறகிரண்டு போதும் எனக்கு. முகில்வெளியில் பறப்பேன். விண்ணொளியில் கலப்பேன். விரிவானின் எல்லையில் விழிபூத்தெழுந்த என் நீலமணிவண்ணனின் நிலவுமுகம் காண்பேன்//

கண்ணன் இதோ மண்ணில் யசோதையின் கையில் இருக்கிறான் அவனை வைத்துக்கொண்டு நாளை விண்ணகம் ஏறுகையில் நீலமணிவண்ணனின் நிலவுமுகம் காண்பேன் என்பதுதான் தவத்தின் உச்சம்.

நன்றி

வாழ்க வளமுடன்.

அன்புடன்

ராம.மாணிக்கவேல்.


அன்புள்ள மாணிக்கவேல்

நம் மரபில் மருதம் என்பது ஊடலையும் கூடலையும் பேசுவது.. 

உண்மையில் மருதமலர் விந்துவின் மணம் கொண்டது. அரக்கும் பூவாசமும் கலந்தது போல.

இந்த அத்தியாயம் நீராலானது. மண்[ பூதனை] காற்று[ திருவரதன்] ஆகியவற்றுக்குப்பின் வருவது.

இன்னொரு கோணத்தில் அன்னமய கோசம், பிராணமயகோசத்துக்கு பின் வரும் மனோமய கோசம்

காமம் மனம் நீர் எனும் மூன்று புள்ளிகள்

இதுதான் குறிப்பு

ஜெ