Wednesday, September 10, 2014

ஆடிப்பிம்பம்


“கண்ணன் பாவம்” திருடியை பித்தி என்றுவிட்டு திருடப்பட்டவனைக்கள்வன் என்கிறது உலகம்.

“கண்ணன் பாவம்” திருடியளை வெறும் கையோடு அனுப்பாமல் திருட்டுப்பட்டமும் வாங்கிக்கொண்டு பொக்கிஷமாகவும் ஆக ஓடி வருகின்றான் கண்ணன்.

பக்தனும் இறைவனும் ஆடிப்பிம்பம்போல இறைவனை நோக்கி பக்தன் நடக்க தொடங்கையில் இறைவன் பக்தனை நோக்கி நடக்கிறான். மறந்தால் மறந்து, மறைத்தால் மறைத்து, நடந்தால் நடந்து, ஓடினால் ஓடி சிரித்தால் சிரித்து அழுதால் அழுது இத்தனைக்கு பிறகும் அப்பாலுக்கு அப்பாலாய் பூரணமாய் இறைவன். 

மூலதாரம்,சுவதிஸ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா என்னும் ஆறு சக்கரங்களில் மனம் நிற்கும்போது ஒவ்வொரு சக்கரத்தை பொருத்தும் ஒவ்வொரு வினையை செய்கின்றது மனம். ஒவ்வொரு பயனையும் அனுபவிக்கின்றது.

கீழ் இருக்கும் மூன்று ஆதரங்களில் மனம் நிற்கும்போது உலக காட்சியிலும், பயன்களிலும் உழல்கின்றது. மேல் மூன்று சக்கரங்களில் சுழலும்போது இறைவெளியல் இணைகிறது. அநாகத்தில் நின்று குழல்இசைகேட்கும் ராதை மனம். விசுத்தியில் நின்று மாயை தாண்டி உடல்உணர்வு இழக்கின்றது. இன்று ஆக்ஞாவில் நின்று உடல் மனம் அனைத்துமீதும் அதிகாரம் செலுத்தி அதை வென்று எங்கும் இறைகாட்சியை இறைவனை கண்ணனைக்காண்கின்றது. அவள் செவி சொற்களை தவிர்த்து இசையால் நிறைகின்றது. உடம்பு கண்ணன் கழல் பரிசத்தில் நிற்கின்றது. உடல் பசி அனல் அவிந்து ஆன்மீக அனலால் நிறைகின்றது. அவள் நாவில் இசையே இனிக்கிறது. நாசியில் கண்ணனே மணக்கின்றான். மண்ணில் இருந்த புலன்கள்தான் மண்ணில் இருந்தபடியே விண்ணில் எழுந்துவிட்டது. காரணம் அவள் நெற்றி நடுவில் ஒளிரும் எரிவிண்மீன். ஆக்ஞா சக்கரத்தின் இடம் அது. //என் நெற்றிப்பொட்டில் விழுந்த எரிவிண்மீன்//

எல்லா உயிர்களும்போல ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலத்தில் இருக்கும் ராதை, உறவுகள் அணைத்தையும் துறந்து மாயைக்கடக்கிறாள். பெற்றத்தாய் பின்னிருந்து அழும் அந்த காட்சி ராதை இறந்துபோவதையே காட்டுகின்றது. பால்காட்சும் (பால்போல் பொங்கும் கன்மம்) இடத்தில் அதைவிட்டு தேடுதல் தொடங்கும் இடத்தில் கன்மத்தை விடுகிறாள்.  குலம், குடி, பெயர் புகழ் பெண் என்பதையும் மறந்து பூட்டியவீட்டைக்கடந்து வனம்நாடுகையில் ஆணவம் விடுகின்றாள்.  அவள் நெற்றிப்பொட்டில் எரியும் விண்மீன் அவளை அதுவாக்காமல் விடாது. அந்த ஜோதி எழுந்தபின்பு இறைவனும் எழுந்துவருகின்றான். “அதுவாதல்” தலைப்பும் அதன் செல்லும் அத்தியாயமும் ஞானம் பூத்துக்குளுங்கும் வனம்.

அன்புள்ள ஜெ நீங்கள் ராதையின் பாத்திரத்தில் கண்டது பெரும்வெளி. பெரும் காதலும் பொருந்தா காமமும் நிறைந்த ஒரு பாத்திரத்தை எச்சில் மலராக்கி எரிந்துவிடாமல் மூலிகை மலராக்கி அதவும் பத்தாமல் தங்கபஷ்மமாகவும் செய்கின்றீர். தொட்டவிடமெல்லாம் மின்னுது.  மரபில் படிக்க ஒன்றும் இல்லை என்பவரும், புதிதாய் படிக்க ஒன்றும் இல்லை என்பரும்  விலகும் ஒரு புள்ளில் நின்று வேர்பரப்பி மலர்கின்றீர்கள். (அவர்களை நான் குறைவாக நினைக்கவில்லை, நீங்களும் குறைவாக சொல்லவில்லை அவர்களுக்கும் என் வணக்கம்)

ஞானம், பக்தி, இறைவனை அடைதல் என்று எல்லாம் இருந்தாலும் பெண் என்று வந்தபின்பு தாயாகமல் போகும் பெண்ணைப்பார்க்கையில் ஏதோ ஒன்று அவர்களுக்கு குறைவாகவே இறைவன் கொடுத்து இருக்கிறான் என்பதுபோல் ஒரு இரக்கம் தோன்றுகின்றது ராதைமேல். கடவுளையே அடைந்தாலும் பெற்ற பிள்ளையை வைத்திருக்கும் அன்னை ஆண்டவனையே அண்ணாந்துப் பார்க்கவைக்கின்றாள் என்று படுகின்றது எனக்கு.  

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்-அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே-பாரதியார்.

ராதை கண்ணனாகி விட்டாள் என்று புத்தி சொல்கின்றது. அதுவாதல் ஆனந்தம்தான். பார்வையாளனுக்கு? மனம் தனிமையில் ஓடும் ராதையை நினைத்து கலங்குகின்றது. தாய்மை இல்லாத மனம் எது?

நன்றி

அன்புடன்
ராம.மாணிக்கவேல்.