இனிய ஜெயம்,
ஒரு கொடுங் கனவில் சில ஆண்டுகள் வாழ்ந்தது போல ஆயாசம் அளித்தது அன்னை விழி முதல் இரண்டு அத்யாயங்கள்.
பாற்கடல் கடைந்தபின் எழும் நஞ்சும் அமுதும் போல சுய பலிகளுக்குப் பின் 'பிரசன்னம்' ஆகிறாள் திரௌபதி.
சுடுக்காட்டு வாயிலில் பிணங்களுக்காக காத்திருக்கிறான் ஜிவ்ஹன்னுடன் 'பெயரற்ற' சுடுக்காட்டு சித்தன்.
இப்போது யோசிக்கையில் ஏன் முது கணியன் அழுது தளர்கிறார்? ஏன் முதல் சுய பலியாளன் கஞ்சா மயக்கத்தில் வைக்கப் படுகிறானோ அதில் இருக்கக் கூடும் காரணம். ஆக உண்மையான சுயபலி இரண்டாவது நிகழ்வதே. அதற்க்கான ஊக்கியாக உருவாக்கப் படுபவனே முதல் பலி.
திரௌபதி ஆலயம் நுழைகையில் ஏனோ என் மனதிற்குள் எங்கள் ஊர் பக்கம் நிகழ்த்தும் திரௌபதி மயானக் கொள்ளை நிகழ்வு நினைவில் எழுந்தது.
திரௌபதியின் நிமிர்வைக் கண்டு கர்ணன் தன்னை உணர்ந்து மீசையை நீவிக் கொள்வது அழகு. ஆட்கள் அற்ற வீட்டின் வெற்று சாளரம் போன்ற பார்வை துரியனை கடந்து செல்கிறது.
பெண்கள் என்ன துரியன் போல ஆண்களே ரசிக்கும் பேரழகன் கர்ணன். துரியன் அங்கு கர்ணன் மீது கொள்ளும் பொறாமையும், கிருஷ்ணன் பெயர் அங்கு அளிக்கும் பதட்டமும், அழகு அழகு.
திரௌபதி மனதில் முதலில் கற்பனையாக பதிந்த கர்ணனை [திரௌபதி முதலில் கதை கேட்டு முடித்ததும் விசாரிப்பது கர்ணன் குறித்து தான்] திரௌபதி ஸ்தூலமாக காணும் இடம்
ஆலயப் பெண்கள் கர்ணனைக் கண்டு உடல் விம்மித் தணியும் இடம், துரியனின் நோக்கில் திரௌபதி அழகின் வர்ணிப்பு என மீண்டும் மீண்டும் நினைவில் மீட்ட வேண்டிய சித்திரங்கள் அடங்கிய அத்யாயம்.
சீனு