Friday, November 9, 2018

தாமரையும் இரட்டை புழுவும்



ஜெ வணக்கம்

இன்று பிருகத்பாலன் அத்தியாயம் படித்தவுடனே முதலில் மனதில் "பத்ம வியுகம் - மகாபாரத கதைகள்" புத்தகம்தான் நினைவில் தோன்றியது.

திசை தேர் வெள்ளத்தின் அடுத்து சில அத்தியாயங்களில் "விரித்த கரங்களில்" வர இருக்கிறது. பிருகத்பாலனுக்கும் அபிமன்யூ விற்கும் பூர்வ ஜென்ம பந்தம் என்றால், அபிமனயுவிற்கும் ஜயத்ரதனுக்கும் என்ன பந்தம்?

இன்று திரும்பவும் இந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டி கொண்டிருந்தேன். வெண்முரசு எழுதுவதற்கு முன் சிறப்பான முன்னோட்டம். 2014ல் பதிபிக்கபட்ட புத்தகம்.  எங்கள் தொழில் மொழியில் ஒரு சிறப்பான "Proof-of-Concept". பெரிய கட்டங்களின் மாதிரியயை அந்த கட்டிடங்களின் முகப்பில் வைப்பது போல. ஏன் இந்த புத்தகம் அதிகம் பேச படுவதில்லை என்று தெரியவில்லை.

 இந்த ஒரு சிறிய புத்தகம் வெண்முரசு - மகாபாரத மறு ஆக்கம் ஏன்? நவீன காவியத்தின் - இணை வரலாற்றை எழுதுதல் என்ற தன்மையை சிறப்பாக வெளிபடுத்துகிறது. முதல் கதையான "அதர்வம்" பிரயாகை வரிசையில் வந்து விட்டது. கடைசி கதையான "இறுதி விஷம்" முதற்கனலில் வெண்முரசுவின் தொடக்கம்.

"நதிக்கரையில்" கதையில் கதாபாத்திரங்களில் templateயை உருவகித்து கொள்கிறீர்கள். பீமனின் கசப்பு, தருமனின் கையறு நிலை. அதே கதையில் வியாசர் வாயால் "காலத்தின் விரல்கள் புதுபுது கற்பனைகளை கணம்தோறும் எழுதிக் கொண்டிருக்கின்றன" என்று மறு ஆக்கத்திற்கு ஒரு விசையும் உருவாக்கிவிட்டீர்கள்.

உங்கள் புத்தங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று பத்ம வியூகம். குறிப்பாக பதுமை நாடகம், உணர்ச்சி உச்சத்தை நாடகமாகவே எழுதி இருக்கமுடியும்.

அன்புடன்

சதீஷ் கணேசன்