Monday, November 5, 2018

குருதிச்சாரல்



அன்புள்ள ஜெ,

குருதிச்சாரல் நாவலின் செம்பதிப்பு இன்று கூரியரில் வந்தது. வெளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியிலேயே கூரியர்க்காரர் என்னைக் கண்டு, புத்தகத்தைக் கையில் கொடுத்துவிட்டார். வெண்முரசு கொடுக்க வருவதால் ஏற்பட்ட முக அறிமுகம்.

புத்தகத்தில் முதலில் என் பெயரை எழுதி கீழே அன்புடன் என்று உங்கள் கையெழுத்து. அடுத்து புத்தகத்தின் உள்ளே "அருண்மொழிநங்கைக்கு அன்புடன்" என்று அச்சில் பார்த்ததும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உணர்ந்தேன். 

அட்டை ஓவியத்தில், வானில் விரியும் ஓநாயின் நிழலை முதலில் தவறவிட்டுப் பிறகு ஒரு திடுக்கிடலோடு  அடையாளம் கண்டேன். குருதிச்சாரலை நினைக்கும்தோறும் புருஷமேத யாகமும், அதற்காகப் பொன் பொரியினால் அடையாளம் காணப்பட்ட அவிரதனின் உணர்வுகளும் நினைவில் எழுந்து வருத்தப்படவைக்கின்றன. இப்போது திசைதேர் வெள்ளத்தில் ஒவ்வொரு நாளும் கணக்கில்லாத வீரர்களின் தலைமேல் பொன்பொரி விழுந்துகொண்டே இருக்கிறது.

குருதிச்சாரலில் மன எழுச்சியோடு படித்து நினைவில் பதிந்தது தங்களைப் பார்க்கப் புரவியின் மீதேறிவரும் விருஷசேனனை,  விகர்ணனும், விருஷாலியும், குண்டாசியும் காணும் இடம்:

//
புரவியில் காவலர்தலைவன் அவளை நோக்கி வந்து தேர் அருகே விரைவழிந்தான். “என்ன?” என்று விருஷாலி கேட்டாள். “அரசி, பட்டத்து இளவரசர் வந்துகொண்டிருக்கிறார். வேட்டைக்குச் சென்றவர் இங்கு அஸ்தினபுரியின் இளைய அரசர்கள் வந்திருப்பதை அறிந்து வழிதிரும்பினார்.” அவள் விழிகளை நோக்கியபின் “ஆம், சிறு முறைமை மீறல். ஆனால் அவர் அதற்கு முடிவெடுத்திருக்கிறார்” என்றான். விருஷாலி தெருவின் முகப்பில் கரிய குதிரையில் அறிவுப்புக் கொம்பை ஊதியபடி முதற்காவலன் வருவதை கண்டாள். பின்னர் வளைவு திரும்பி ஏழு புரவிகள் வந்தன. வெண்புரவியில் வெண்ணிற ஆடையும் தலையணியும் வெள்ளி அணிகளுமாக விருஷசேனன் அமர்ந்திருந்தான்.

முன்னால் சென்றுகொண்டிருந்த தேர் நிற்பதற்குள் அதிலிருந்து குண்டாசி பாய்ந்து தெருப்புழுதியில் வீசப்பட்டதுபோல விழுந்தான். மேலாடை நழுவ கையூன்றி எழுந்து இரு கைகளையும் விரித்து உடல் நடுங்க நின்றான். கைகளை தலைக்குமேல் கூப்பி “மூத்தவரே, அங்கரே” என்று கூவினான். “அஸ்தினபுரியில் கதிரவன் துணை வர அன்று நுழைந்த அதே கோலம்! ஆம், நீங்கள் என்றுமிருப்பவர். காலத்தை ஆக்கி விளையாடும் நாளவன் நீங்கள்!” என்றான். கைகள் பதற திரும்பி தேரிலிருந்து இறங்கிய விகர்ணனை நோக்கி “நோக்குக, அந்தச் செம்பொன்கவசம்! மணிக்குண்டலம்! அதே கதிரெழு பேரழகு!” என்றபின் “எந்தையே! எந்தையே!” என்று அழுதபடி ஓடினான்.
//

எதிர்காலம் கர்ணனுக்கும், விருஷசேனனுக்கும் என்ன அளித்தாலும், நினைவில் நிற்கும் பொற்கணங்களைக் கடந்தே அதை அடந்தார்கள் என்பதே ஆறுதலாக உள்ளது. 

நன்றி.

அன்புடன்
S பாலகிருஷ்ணன், சென்னை.