Thursday, September 11, 2014

ஆயிரம் திருநாமங்கள்





அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

ஆயிரம் திருநாமங்கள்போல் சொல்லாயிரம் இங்கு. ஒரு வாயால் ஆயிரம் ஆயிரம் முறைச்சொல்லி்  ஒருவேனே ஆயிரமாகுதல்.  ஆயிரம் வாயால் ஒருவனை மட்டும் சொன்னால் ஒருவனே ஆயிரமாதல்.விதையில் இருந்து பூவாக, பூவிலிருந்து விதைகயாக எல்லாம் கண்ணன்.
ஒருவன்போலவே மண்ணில் ஏழுபேர் இருப்பார்கள் என்று சொல்வார்கள் எப்படி?....

நடையால், உடையால், உருவத்தால், குரலால், நோக்கால்,சிரிப்பால், செயலால். ஆயர்பாடியில் எல்லோரும் கண்ணனாய். கண்ணனை எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் பிரதிபளிக்கின்றார்கள்.
//ஆடிப்பாவைக்கு முடிவே இல்லையடி” என்றாள் மஞ்சரி//
//காட்டுக்குள் மீளும்முன் கரியமுகம் விரிய அக்காடன் அளித்த நகை கண்ணனைப்போல் இருந்தது என்றான்//

நூலில் கட்டடிய காந்தத்தை மண்ணில் போட்டு இழுத்தால் மண்ணில் உள்ள சிறுசிறு இரும்பும் துரும்பும்கூட காந்தமாகி விடுகின்றது. கண்ணன் என்னும் காந்தம் எல்லாக்குழந்தையையும் இழுத்து கண்ணாக்கி விட்டது.  கண்ண குழந்தை அனைத்தும் காந்தமாகி அன்னைகளை இழுக்கிறது. அன்னையரை மட்டுமா இழுக்கிறது பிரமதேவனையே இழுக்கிறது. காரணம் கண்ணன் உள்ள இடம் வைகுந்தம்தானே. வைகுந்தத்திற்கு இருப்பர் எல்லாம் பிரமலோகம் செல்வது கடினமா என்ன?  மண்ணில் பிறந்தாலும் தேவர்கள் அவர்கள். கண்கள் இமைப்பதில்லை, கால்கள் தரைப்படுவதில்லை, தூங்குவதும் இல்லை விழிப்பதும் இல்லை. பசியும் தாகவும் இல்லை. உடல் அங்கு இருந்தாலும் எங்கும் நிறைக்கின்றார்கள் எங்கும் சென்று வருகின்றார்கள்.

//அன்னம் உருட்டி அவர் வாயில் ஊட்டுகையில் வெற்றிடத்தில் அவை சென்று விழுவதையே நாமறிந்தோம். அவர் கண்களால் நோக்கவில்லை. காதுகளால் கேட்கவில்லை. அங்கே உடல் இருக்கையிலும் எங்குமென சென்றுவந்தார். கால்வைத்து நடக்கையில் ஓசையேதும் எழவில்லை. ‘என்னாயிற்று? ஏனிந்த மனமயக்கம்?’ என எத்தனை முறை கேட்டோம். பதிலேதும் சொல்லாமல் அவர்புரிந்த இளநகையில் கண்ணனை அல்லவா கண்டு மனம் நிறைந்தோம்?//

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதுபோல் கப்பல் காந்தப்பாறைக்கு அருகில் வரும்போது கப்பலின் கட்டுகள் அணைத்தும் தெரித்துவிடுகின்றது. ஆனந்த பெருவெள்ளம் பொங்கி வரும்போது மேடு பள்ளம் எதுவும் தெரிவதில்லை எங்கும் வெள்ளம் வெள்ளம் மட்டும்.  எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாரதி குத்தாடுவதும் இதுதானா?
எங்கும் கண்ணன் எதிலும் எல்லோரும் கண்ணன்.

ஒருவனுக்கு ஆயிரம் பேர்
ஒரு பெயரில் ஆயிரம்பேர்
சொல்லாயிரம் சொன்னாலும் சொல்லாகாதது ஆயிரம் நீலத்தில் உள்ளது. நன்றி ஜெ.

வாழ்க வளமுடன்
அன்புடன்
ஆர்.மாணிக்கவேல்