Tuesday, September 9, 2014

நாதத்தரிசனம்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

இலங்கை அண்ணன் கோவிந்தசாமி ஒரு நகைச்சுவை சொல்வார். மருத்துவர் “விரல்வெட்டுப்பட்டதற்கு ஏன்டா கத்தி கலாட்டா பண்ற, அதோ அவன பாரு தலையையே வெட்டி எடுத்தாச்சி கம்முன்னு கிடக்கிறான்”

நினைத்து நினைத்து சிரிப்பேன். நினைக்கும்போதெல்லாம் சிரிப்பேன்.

நீலம்-21 படிக்கும்போது இந்த நகைச்சுவை ஞாபகம் வந்தது ஆனால் சிரிக்க முடியவில்லை. முள் குத்தியவர்கள் எல்லாம் பேசுகின்றார்கள். நாகம் கொத்தி  நீலவிடம்ஏறும் ராதையால் பேசமுடியவில்லை. இப்படி ஒரு மனநிலை.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளில் இரண்டு காட்சிகள் இன்று காலையில் மின்னியது. காலரா சுரம் தாக்கி இறக்கும் ஒருவன். விஷசுரம் தாக்கி இறக்கும் மற்றொருவன்.

முன்னவன்  துடித்து சாகிறான். இரண்டாமன் செத்து துடிக்கிறான். ராதையின் தாய் அல்லது ராதையின் சுற்றமும் நட்பும்  துடித்து சாகிறார்கள். ராதை செத்து துடிக்கிறாள். இரண்டுமே இறைவன் நடத்தும் நாடகம். எங்கோ இருந்து ஊதுகின்றான் அவன், சிலருக்கு காதோடு போகின்றது சிலருக்கு உயிரோடு போகின்றது. ராதைகள் செய்த செய்யும் செய்யப்போகும் பாவம்தான் என்ன? கண்ணனை பார்த்ததா? நினைத்தா? தொட்டதா? தழுவியதா?

எல்லோரையும் செவிடுகளாய் ஆக்கிவிட்டு ராதையின் அகசெவியை மட்டும் திறந்து வைத்த கண்ணன் ராதையை இசையால் கொல்லும் கொடுமைதான் என்னே? நாதத்தரிசனம். //இன்றொருநாள் மட்டுமேனும் தலைகுனிந்தால் என்னடி? நாணமின்றி மணம் கொண்ட ஆயர்மகள் எவருண்டு?” என்றாள் ரங்கதேவி. “அங்கே குழலிசைத்தது யார்?” என்று மருண்ட விழி விரித்து ராதை கேட்டாள்//

கோவணம் இல்லாத ஊரில் கோவணம் கட்டியவன் பித்தன். செவிடுகள் வாழும் ஊரில்  செவிகொண்டு அதிலும் இசைகொண்டு நிறைப்பவள் பித்தி.

கண்ணா ராமனாய் வந்தபோது சீதைக்கு ஒருமுறைதான் அக்கினி பிரவேசம். கண்ணனாய் வந்தபோது ராதைக்கு அவள் உடம்பே அக்கினி பிரவேசம். தீ என்பது விறகில் எரிவது மட்டும்தானா? ராதையின் கணவன் விரல்கூட இனி தீயல்லவா? பைத்தியக்கார உலகம் தாங்கள் பைத்தியமாக இருப்பது அறியாமல் ராதையை அல்லவா பைத்தியம் என்று சொல்லி அக்கினியில் இறக்கிவிட்டுவிட்டது. அவல் நெருப்பை எரிக்கும் நெருப்புமலர் தன்னையும் எரிர்த்துக்கொண்டு உலகத்தையும் எரிக்கவேண்டும் //அக்கூட்டத்தில் எவரையோ தேடுபவள் என அவள் விழிகள் அலைந்தன. ஒவ்வொரு முகமாக சென்றமர்ந்து சென்றமர்ந்து மீண்டன// பாவம் அவன் கணவன் பூ என்று நினைத்து நெருப்புமலரை அல்லவா கொய்துவிட்டான். //கண் தூக்கி அவள் முகம் நோக்கிய அபிமன்யு அவள் தலைகுனிந்து வரவில்லை என்று கண்டு திகைத்தான்//

நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம், எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாதக் குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே-அபிராமிப்பட்டர்-இவரையும் உலகம் பித்தன் என்றுதான் சொன்னது.

நான் -கண்ணா ஏன் இப்படி ராதையுடன் விளையாடுகின்றாய்?
கண்ணன்-எல்லோரும் மீனாக இருக்க ஏன் ராதைமட்டும் மலர்மரமென நின்றாள்?


//கடம்பமரம் கனிந்ததுபோல் எழுந்த குழலிசையைக் கேட்டாள். அதைக்கேட்கும் தருணமெல்லாம் அவள் உடல் சிலிர்த்து அசைவிழக்கும். விழிதூக்கி கடம்பின் மலர்க்கிளையில் அமர்ந்து இசைபெருக்கும் கண்ணனை நோக்கி கதிரொளி வாங்கும் மலர்மரமென நின்றாள்//
//மீன்கூட்டம் துள்ளி விழுவதுபோல உடல் மறைத்த பெண்கள் நீரில் பாய்ந்து விழுமொலி கேட்டாள் ராதை. “பிச்சி, என்னடி செய்கிறாய்? வா இங்கேஎன அவள் கைபிடித்து இழுத்து நீரில் வீழ்த்தினாள் லலிதை//-நீலம்-20


விதி-ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.


எல்லாவற்றையும் அன்றெ உனதென்று அளித்துவிட்டாள் ராதை நன்றே வருகினும் தீதே விளைகினும் அவள் அறிவது ஒன்றும் இல்லை.

எல்லவற்றையும் அன்றே உனதென்று அளித்துவிட்டு ஊரார் கண்களுக்கு பைத்தியாமாக இருக்கக்கூடாது என்றுதான் எல்லாவற்றையும் பற்றிக்கொண்டு பைத்தியம்போல் இல்லாத பைத்தியாமாய் நடிக்கின்றேனோ வாழ்வில் நான்?

நன்றி
வாழ்க வளமுடன். 

RAMARAJAN MANIKKAVEL