Tuesday, September 9, 2014

காற்றும் குழலும்

இந்த அத்தியாயத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென்றே நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அகமழிதல்... அகமழிதல், இசையாதல்...மூங்கில் அழிந்து குழலாகி, குழல் இசையாகி இசை சுருளாகி சுருள்மையமாகி செவியாகி சிந்தையாகி சத்தாகி சித்தப்பெருவெளியாகி ஆனந்தநிலையாகி நீலமணியாகி நின்றிருக்கும் இக்கணம்.


கருவண்டு துளைத்த மூங்கில் பின் எப்போதும் குழல் மட்டுமே. இனி அது ஒருபோதும் மூங்கிலே அல்ல. துளைக்கப்படும் வலியும், வலியின் கண்ணீரும், வீசும் காற்றும் விசும்பலும் எல்லாமும் இசையாக மட்டுமே இருக்கவும் வெளிப்படவும் முடியும். மூங்கிலெல்லாம் மட்கி சரிய துளைபட்டது மட்டும் கீதமாய் நிறையும்.


பின்னர் ஒவ்வொன்றையும் ஒலியாக்கி உணர்ந்திருக்கும். மண்ணிலூறிய உப்பை. நீர் பெருக்கை. இலைகளறியும் காற்றை. கிளைகள் வளைந்தாடும் நடனத்தை. ஒளிபெருகும் வானை, வான் நோக்கிய மலர்தலை. மலர்கொண்ட கனிதலை. கனிவூறிய விதையை. விதை கொண்ட அமைதியை.. .



இருளுக்குள் ஓடும் காற்று சுழன்று கூந்தல் பறக்க திரும்பி வருகிறது. அதன் அகத்தேடலை ஒலியாக்குவது யாரென்று.

சொல்லற்ற கீதம். சொல்திரளும் கணத்திற்கு முற்கணத்தில் தேங்கிச் சுழன்று சுழன்றாடும் நாகம். நீலம், நீலவிஷம், விஷக்காலம், காலாகாலம், காலன் கழல், கழலாடும் நடனம், கருமை. கரிய சுழியாகி இசையாகிச் சுருளாகி சுருள்மையமாகி செவியாகி சிந்தையாகி சத்தாகி சித்தப்பெருவெளியாகி ஆனந்தநிலையாகி நீலமணியாகி நின்றிருக்கும் இக்கணமே இப்பிரபஞ்சம் உருவாகி வாழ்ந்து நீண்டு மயங்கி அழிந்து நீலமாகும் காலமென்றானது.
நீலத்தில் வலியென்று ஏதுமில்லை. வலியே கூட.


ஏ.வி.மணிகண்டன்