Tuesday, September 9, 2014

நயன தீட்சை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம். முதலிலேயே நன்றி சொல்லிவிடுகின்றேன். நீலம்-20 இன்று மலரும் என்பதற்காகவே இரண்டு ஆண்டுக்கு முன்னமே மலர்ந்த பூவிடைப்படுதலுக்காக.

காற்றில் வினோத நடனம்புரியும் இலைகளை கைவிரல்களால் பற்றுகிறேன். ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது. நடனம் மட்டும் எங்கோ மறைந்துவிடுகிறது-தேவதேவனின் இந்த கவிதையை கவிதை வாசிப்பிற்காக மேற்கோல் காட்டி இருந்தீர்கள் அதைத்தான் நீலத்திற்கும் நான் காட்ட முடியும். நீலம் எங்கு கவிதையாகிறது எங்கு நாவலாகிறது என்று யார் சொல்ல முடியும். யாராவது சொன்னால் அவர்கள் இலையைப்பற்றிக்கொண்டு நடனத்தை நழுவவிட்டவர்கள்தான்.  

நீலத்தில் நிகழும் நடனத்தை பற்ற முடியுமா? முடிந்தால் அப்புறம் என்ன சொல்ல இருக்கு? தீனிக்கிளி தின்றுஅறியும் சுகத்தைவிட, தின்னாக்கிளியின் தித்திப்பு பெரிது திகட்டுவதே இல்லை. இன்னநடனம் கண்டேன் இந்தப்பழம் தின்றேன் என்று சொல்லும்போது அந்த சுகம் அழிந்துப்போவதை அறிகின்றேன்.  

உடம்பு புலன்கள் அனைத்தும் இலைகளை பற்றுவதற்குதான் படைக்கப்பட்டு உள்ளது நடனங்களைப்பற்றுவதற்கு அல்ல. பற்ற முடியாததாலேயே நடனங்கள் இல்லாமல் இல்லை. பற்றிய இலைகள் சருகாகலாம் நடனங்கள் ஒளிக்குன்றுவதே இல்லை.
நீலத்தின் எழுத்துகளைத்தான் நான் எடுத்து வைக்கமுடியும், நடனத்தை எடுத்து வைக்கமுடியவில்லை.

கன்னியாகி மண்ணில் பாதம் பாவா நடைபயிலத்தொடங்கும்போது பெண்களுக்கு அலர் அலங்காரமாக ஆகிவிடுகின்றது. அலர்தூற்றும் பெண்கள் எல்லாம் ஒருநாள் அலர்புனைந்தவர்கள் அல்லது ஒரு நாள் அலர்புனைவார்கள். என்ன ஒரு விந்தை இது. வாழ்க்கை முரண். உளவளர்ச்சின் முரண்.

சங்க இலக்கியம்போல இன்று அலர் புனைந்து நிற்கும் நீலம் புதுமலர் இதழ்வழியாக வடியும் பழம்தேன் என்றால் இல்லை என்று யார் சொல்ல முடியும். இத்தனை அழகாக இத்தனை இனிமையாக அலர் காட்சிகள் எழுந்து வந்த நாவல் இதற்குமுன்உண்டா? நீங்கள்தான் சொல்லவேண்டும் ஜெ. ஐன்ஸ்டீன் கூற்றுப்படி மிகப்பெரியது உடன் ஒப்பிடும்போது சிறியது இல்லை என்றே கொள்ளவேண்டும். நான் சிறியவன்.
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரு மவனொடு மொழிமே. – குன்றியனார் (இந்த பாடலை பூவிடைப்படுதலில் மேற்கோள்காட்டிய ஜெ உங்களுக்கு  இன்று நன்றி)
//என்னுள் ஏதும் மாறவில்லையேடிஎன் கண் நிறைத்து கை ததும்பும் குழவியென்றே அவன் தெரிகிறான்” என்றுசொன்ன ராதையை நோக்கி குனிந்து லலிதை “எவரிடம் நீ விளையாடுகிறாய்உலகுடனாஉலகாகிஉன்னைச்சூழ்ந்த அவனிடமாஅவனைச்சூழ்ந்த உன்னிடமாஉன்னுள் உறையும் தனிமையிடமா?” என்றாள்.

ராதை காலைஒளிநிறைந்த நீலமலர் போல விழிவிரித்து “நீ சொல்லும் ஒரு சொல்லும் எனக்குப்பொருளாகவில்லையடி” என்றாள்லலிதை சீறி முகம் சிவக்க “பால்மணம் மாறி அவன் உடலில் புதுமழைபட்டமண்மணம் எழுவதை நீ அறியவில்லையாஇளம்பிஞ்சு கைகால்கள் இறுகுவதைபைதல் குறுமொழிமணியோசையாவதை கண்டதேயில்லையாசொல்அவன் கண்ணிலெழும் சிரிப்பைசொல்லில் எழும் குறும்பை நீஇன்னுமா அறியவில்லைஅகநாடகம் ஆடுவதை நிறுத்துநீ அடியெடுத்துவைத்த நாள்முதலே உன்னை அறிந்தவள்நான்” என்றாள்// முழு அத்தியாயத்தையும் வெட்டி ஒட்டினாலும் தீராது எனக்கு இதுபோதும் என்பதால் இதோடு நிறுத்திக்கொள்கின்றேன்.

அலர் பேசும் வாயாக இருந்தால் இனிக்கிறது. அலர்பேசுபவர் வாயில் விழுபராக இருந்தால் கூசுகின்றது. என்ன மனம் இது.
கண்ணன் நெஞ்சில் ஏறி நிற்கின்றான். ராதை ஏறி நெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள் நீலம்-20 நெஞ்சில் கனக்கிறது. ஆரம்ப வரியிலேயே சுருண்டது நான் இருதி வரியில் நத்தைபோல் ராதை சுருண்டால் என்று ஜெ எழுதி இருப்பதுதான் பொன்னகை.
//“முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணேஅக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீகாணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை//

சிவனுக்கு மூன்று கண். அன்னை மீனாட்சிக்கு மூன்றுதனம்.  

கருத்தன எந்தைதன் கண்ணென வண்ண கனகவெற்பின்
பெருத்தன பால் அழும்பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தனப் பாரமும் ஆரமும் செங்கை சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன்நிற்கவும்-அபிராமிப்பட்டர்.

கண்ணன் முகக்கண்ணும் ராதையின் தனக்கண்ணும் சந்திக்கின்றன. கண்ணுக்கு கண் கண்ணாகிறது. நடனம் ஆடலாம் ஜெ. நடனமே பூச்செண்டா? போதை ஏறி விழுகின்றேன்.

இன்று கண்ணன் கண்டது கண். கண்ணுக்கு கண்ணானவன் என்பது இதுதானா? குருவைக்கண்ட கண்போல உடம்பு மட்டும் ஒரு ஜடமாகி வினைவழிப்பட்டு அது அழிந்துப்போகத்தான் வேண்டும் என்பதை ராதை அறிந்துவிட்டாளா? ஆடைபோல, நாணம்போல இந்த உடம்பும் கழன்றுப்போகவேண்டியதுதான் என்பதை அந்த ஒருப்பார்வை ராதைக்கு உணர்த்திவிட்டதா? இதுதான் நயனதீட்சையா?

//ராதை அவள் விழிநோக்காது “நீ பார்த்த ஆய்மனையில் மணம்கொள்ள சித்தமானேன்செய்தி சொல்லி அனுப்புஎன்று சொல்லி நிலத்தமர்ந்து முழங்காலில் முகம் வைத்து நத்தையென இறுகிக்கொண்டாள்//

எழுத்தாளர் மணியன் இலங்கைக்கை சென்று இருந்தபோது நடந்தது.  சுவாமி தரிசனம் செய்ய சட்டையை கழட்டிவிட்டு கருவறைக்கு அருகில் சென்று வணங்க கூசி அவர் சட்டையை கழட்டாமல் இருக்க அருகில் இருந்த அடியார் ஒருவர் “இந்த சட்டையை கழட்டிவிட்டு இங்கு போகவே அஞ்சுகிறாயே அந்த சட்டையை கழட்டிவிட்டு எப்படிப்பா அங்குபோவாய்” என்றதும் மணியன் முகத்தில் ஒளி. சட்டையை கழட்டிவிட்டு சென்று சாமி தரிசனம் செய்தாராம்.

நிர்வாணம் இல்லாமல் நீலனை எப்படி தழுவுவது. தழுவினால் என்ன சுகம். மீண்டும் பூவிடைப்படுத்தல்தான்.
பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
டுடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவே மாகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நா முயற்கே-சிறைக்குடி ஆந்தையார்


நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ராம.மாணிக்கவேல்