அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
வானளந்தோன் கருணையால் வான்புகழ் கொண்ட ஒருவன் மண்காண, மக்களை காணவரும் நன்நாள் இன்நாள். வானந்தோன் வந்த திருநாள். திருவோண திருநாள். இந்நாளில் வந்த நீலம்-19 வானம் அளக்கின்றது.
//வான்சூழ் சிறுமலர்// அற்புதமான தலைப்பு. திருவோண திருநாளுக்காகவே வந்த மலர்ந்த தலைப்பு.
வெள்ளத் தனைய மலரநீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு-என்னும் திருக்குறள் உள்ளத்தால் உயர்வு உண்டாகும் என்று கூறுகின்றது. உயர்வு என்பது ஒரு உணர்வுப்பொருள் அருவப்பொருள், அதை ஒரு பருப்பொருளாக ஆக்கிக்காட்ட முடியாது. நீலம் என்ற நூலை உயர்வின் உருவப்பொருளாகக்காண்கின்றேன். உயர்ந்த ஒரு உள்ளத்தால் ஒரு நூல் உயர்ந்து நிற்பதை கண்டு வியக்கின்றேன். நித்தம் நித்தம் உயரும் நீர்மட்டத்தின் மலர்போல நித்தம் நித்தம் உயர்ந்து மலர்ந்து நிற்கின்றது நீலம். அழகான நீரோட்டம் போன்ற நாவல் என்று இதை சொல்ல முடியவில்லை அடுக்கு அடுக்காய் மலர்ந்து மலர்ந்து உயர்ந்து செல்லும் நூல்.
இறைவனை பிரமத்தை இரண்டு வகையில் அறிந்தவர்கள் இருக்கின்றார்கள். ஒருவகை கொண்டாடிக்கொண்டாடி வியந்து வியந்து ஒளியாகி ஒளியாகி விரிந்து கண்டவர்கள். இந்தவகை பக்தி மார்க்கம். ஆயர்பாடி பெண்கள் எல்லாம் இந்தவகை. பழம்தின்னும் கிளி.
இரண்டாம்வகை கண்டது தெரியது பேசியது தெரியது அறிந்தது தெரியது உணர்ந்தது தெரியது. கலந்தது தெரியாது கரைந்ததும் தெரியாது தெரியாது. ஆ!..அவரா? என்று உலகம் வியக்கும். அவர் மறைவாய் இருந்து மறைபொருள் அறிந்து மறைந்தும்போய்விடுவார். அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்கூடத்தான் நேற்றுவரை இருந்தார் என்பார்கள் உலக்தார். அந்த வகை நந்தகோபாலன். பழம் தின்னாத கிளி.
பழம் தின்னும் கிளியையும் பழம் தின்னாத கிளியையும் பார்த்துக்கொண்டு வானத்தில் இருக்கும் அந்தக்கிளி. வானும் மண்ணும் எங்கும் நிறையும் பரபிரமக்கிளி. பழம் தின்பவர்க்கு பழமாகும் கிளி. பழம் பார்த்துக்கொண்டு இருப்பவர்க்கு பார்த்துக்கொண்டு மட்டும் இருக்கும் கிளி. இரண்டு கிளியாகவும் இருக்க காரணமான அந்த மூலக்கிளி.
பக்தியில் ஒவ்வொரு படியிலும் இன்பம். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களாலும் இன்பம் தருகின்றான் இறைவன் கோபியர்களுக்கு.
கண்டு, கேட்டு உண்டு, முகர்ந்து, தழுவி பெரும் இன்பத்தில் நிலைக்காமல் மௌனம் என்னும் மோன இன்பத்தில் மூழ்க நினைக்கும் நந்தகோபனுக்கு உள் உறங்கும் சகடங்களை உதைத்து உருட்டி விடுகின்றான் கண்ணன். அங்கம் உறையும் ஆறு சக்கரங்களையும் மூலதாரத்தின் ஒரே உதையில் உதைத்து உருளவைக்கும் கண்ணன். சின்னக்குழந்தை. எவரும் அறியா ஏதும் அறியா சிறு குழந்தை. நந்தன் காண்பது மனோன்மணி தரிசனம். //ஒன்றுக்குள் ஒன்றாக ஓராயிரம் இதழ்விரியும் முடிவிலித்தாமரை. அதில் ஆயிரம் கோடி ஒளிநிழல்கள்.ஒவ்வொன்றிலும் எழுந்தமரும் நீலமலர் முகம்//
உடம்பு ஒரு வண்டி. வண்டிக்கு ஆறு சக்கரம் ஆறு சக்கரமும் சுழன்று ஆனந்த பெருவெள்ளத்தில் மூழ்கையில் தோன்றும் ஏழாவது ஆயிரம் இதழ் மனோன்மணி சக்கரம். கள்ளக்கண்ணனோடு கனி தின்னும் கிளியாகாமல், நல்லக்கண்ணனோடு நாளும் மௌனத்திருந்தால் அவன் இயங்க வைக்கின்றான் மனோன்மணி சக்கரத்தை அதில் நின்று அவனே காட்சியும் தருகின்றான்.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே!-அபிராமி அந்தாதி. உமைவேறு கண்ணன்வேறா?
யசோதை எந்தவழியில் கண்ணனை அடைந்தாள்? நந்தகோபன் எந்தவழியில் கண்ணனை அடைந்தான்? யசோதை பக்தியாள். நந்தகோபன் யோகத்தால்.
இங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் என் அகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்னம் விசாரம் எதுவுமவன் பொருப்பாய்ச்
செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவயோகம்
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றனகாண்
கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன்
கண்ணனை ஆட்கொள்ள காரணமும் உள்ளனவே-பாரதியார்
//அலைச்சுழியின் மலர்வளைய மையத்தில் மலர்ந்து நின்ற நீலத்தாமரை சிறு மொட்டு ஒன்றைக் கண்டு அங்கேநின்றிருந்தவன் நான். குயிலொன்று புதர்மறைந்து கூவிக்கூவி ஒரு சொல்லையே காட்டின் குரலாக்கி நிறைக்கக்கேட்டவன் அவன். கற்றறிந்ததெல்லாம் மறந்து கருத்துறைந்ததெல்லாம் இழந்து முற்றழிந்த மனம் கொண்டு நின்றபேதை. பின் காலமென்று கூவியது கருங்குயில். காடென்று கூவி கருத்தளித்தது. குலமென்று கூவி நினைவளித்தது.பகலென்றும் இரவென்றும் கூவி அனைத்தையும் படைத்தளித்தது//
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புள்ள
ராம.மாணிக்கவேல்