Wednesday, December 23, 2015

நிழல்மீது நிற்றல்-வெய்யோன்-2




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஒரு பூவின் பலவிதழ்களும் அந்த பூப்போலவே பூத்து பூத்து அந்த பூத்த பூக்களின் இதகளும் பூப்பூவாய் பூத்துக்கொண்டு இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது வெய்யோன். ஒரு சொல்லும் வெறும் சொல் என்று சொல்லிச்செல்ல முடியவில்லை. ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் உள்ள பொருள் வெடித்து வெடித்து மலர்ந்துக்கொண்டு செல்கிறது.  நவமணி மழையில் நனைவதுபோல் உள்ளது. அற்புத அனுபவம். வெய்யோன்-2இ  இரவு 1.30க்கு ஏன் விழித்தேன் தெரியவில்லை, விழித்ததும் மொபைலைத்திறந்து வெய்யோன் படித்துமுடித்தேன்.  எனது நெஞ்சும் வெய்யோன் சொற்களும் மட்டும்தான் இருக்கிறது உலகம் எதுவும் இல்லை இது புது அனுபவம். எந்த சொற்களைக்கொண்டு எழுதுவது என்று எதுவும் தெரியவில்லை.

விளையாட்டே போர்களமாக இருக்கும்போது விளையாட்டை உருவாக்கும் வாழ்க்கை விளையாட்டாக இருக்குமா?  வாழ்க்கையை விளையாட்டாய் விளையாடி சென்றுவிடமுடியுமா? வாழ்க்கை போர்க்களங்களின் விதை. எந்த மண்ணிலும் முளைக்கும், எந்த மண்ணும் இல்லாமலும் முளைக்கும். 

அழகிகளில் எல்லாம் பேரழகியை மனைவியாக அடைந்த பிருகு முனிவரை  ஐயம் என்னும் காற்றடைத்த பந்தாய்  வாழ்க்கை உருட்டி விளையாடுவதும், அவரின் விளையாட்டுக்கு பிரபஞ்சமே விளையாட்டு களமாகி அவரை ஆட்டுவிப்பதையும் கண்டபோது முனிவனும், முனியாதவனும் ஆண் என்றே ஆகிநிற்கும் தருணத்தில் அதிர்கின்றேன்.


முப்பது வயது உடம்பில் ஐம்பது வயது துக்கத்தை சுமந்துப்போதும் பெண்ணைப்பார்த்து. அவள் ஏன் இப்படி உருகுலைந்து இருக்கிறாள்? என்று கேட்டதற்கு கிடைத்தப்பதில் புருஷன் சந்தேகப்படுகிறான் என்பது. எண்ணெய்த்தடவி தலைசீவி பூவைத்த ஒருநாள் விடியும்வரை தலையில் கொட்டிக்கொண்டு இருந்திருக்கிறான்.அன்றைக்கு தலை சீவுவதை விட்டுவிட்டாள்.  அடுத்த தெருவுக்கே அறியாத பெயர் படைத்த அந்த பெண்ணின் கணவனை ஐயம் ஆட்டிப்படைக்கும் என்றால் பெரும் புகழ் படைத்த கியாதியின் கணவனை ஆட்டிப்படைக்கும் ஐயம் எத்தனை பெரியது. ஏழு சுற்று வேலி எம்மாத்திரம். 

சிறைக்காக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கம் காப்பே தலை.
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்து ஒரு பொம்மை செய்தன தான் விளையாட

விளையாட்டுக்காக செய்த பொம்மை வினையாவதுதான் விதி என்பதா?   காமத்தால் காமத்திற்காக செய்யப்படும் அனைத்தும் காமம்தானா? 
அளர்க்கன் கியாதியின் நிழலைக்கண்டு காமம்கொண்டு காமம் கொள்கிறான். பிரம்மன் சொல்வதுபோல எந்த ஒரு வேலிக்கும் ஒரு வாயில் இருக்கும் என்பதுதான் உண்மையாகிவிடுகிறது. உண்மையில் இது அளர்க்கன் காமமா? அல்லது கியாதியின் முடியில் இருந்த காமமா? ஒரு முடியை பிரணவம்நதிரம் சொல்லி ஊதி ஊதி உயிராக்கிய பிருகுவின் காமமா? யாருடைய காமம் இது?. 

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தி்ன் விளிம்பிலிருந்துதானா? 
அல்லது அதன் அடியிலிருந்தா?
பூமியில் காலூன்றி நிற்கும்போது
நிழல்மேல்தான் நிற்கிறோமா?
காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்
அந்த யோசனையை நான் ஏற்கவில்லை
பூமியில் நிற்கும்போது
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்கு தெரியவேண்டும்-சுரா

உயிர்க்கொண்டு மண்ணில் நிற்பதாலேயே இந்த காமம் மனிதனின் நிழலாகிவிடுகிறதா? முன்னும் பின்னும் வளர்ந்தும் தேய்ந்தும் அலைக்கழிக்கிறதா? நிழலின்மேல் நிற்பதுபோல் காமத்தி்ன்மேல்தான் உயிர்கள் நின்றுகொண்டு இருக்கின்றனவா? 

காமம் கால் இருந்தும் நடப்பதில்லை, பறக்க செய்கிறது. கோபம் இடமிருந்தும் அமர்வதில்லை, அலைந்து  திரிகிறது. அலைந்து திரியும் ஒன்றும், பறந்து திரியும் ஒன்றும் இணையும் இடத்தில் வந்து மாட்டும் சீவன் படும்பாடு எத்தனைக்கொடியது. கர்ணா நீ வெய்யோன்தான்.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.