Tuesday, December 29, 2015

விடுபடல்கள்




அன்புள்ள திரு.ஜெயமோகன்,

எழுத்தில் பேராண்மை கொண்டவர்களுள் நீங்களும்  ஒருவர். வெண்முரசு அதற்குச்  சான்று. வேகத்திலும், பாதையிலும், சொல்லாட்சியிலும் பல படிகள் உயர்ந்து  நிற்பது கண்கூடு. பாரதம் எழுதிப் பின் இராமாயணமும்  தங்கள் எழுத்துக்கள் மூலமாகப்  படிக்க விரும்புகிறேன்! 

எனக்குச் சில சந்தேகங்கள்.. 
1.காண்டவ வன  எரிப்பு மகாபாரதத்தில் முக்கியமான  இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக நாகங்களின் பழியுணர்ச்சிக்கு இதில் ஆரம்பம் கிடைக்கிறது. தக்ஷகனின் மனைவி கிருஷ்ணப்பிரானின் தூண்டுதலால் அருச்சுனனால் கொல்லப்படுவது தக்ஷகனின் தீராத கோபத்துக்குக் காரணமாகிறது. இவனே பரீக்ஷத் மகாராஜனைத் தீண்டுகிறான்.(சில இடங்களில் 'தக்ஷன்' மற்றும்' தக்ஷகனை' நீங்கள் ஒரே ஆளாகக் காட்டுகிறீர்கள். இருவரும் ஒருவர்தானா? ) அசுரன் மயனின் அருச்சுன அடைக்கலமும், இந்திரப்பிரஸ்த நகர் மயனால், துரியோதனன் அவமானப்படும்  அளவுக்கு, அமையும் விதமும் இப்பகுதியில் வருகின்றன. மிகச் சுருக்கமாக  காண்டவ  வன எரிப்பைக்  கூறி  விட்டீர்கள்.கிருஷ்ணர் நற்காட்சியைப் பெற்றதும் இந்தப் பகுதியில்தான். இவை எல்லாம் பிறகு சொல்லப்படுமா?

2.ஒரு பாணன் அஸ்தினானபுரத்தைக் காண விழைந்து  தென் தமிழ் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக  சில பகுதிகள் வந்தன. பிறகு அவனைக்  காண வில்லையே!

3.சகுனியின் திருமணம் அவர் மகன் உலூகன் பிறப்பு இனிமேல் தான்  வருமா?

4..மகாபாரதத்தை -வெண்முரசை ஒரு  உண்மையான வரலாற்றுக் காவியமாகவே எழுதி  வருகிறீர்கள்.கண்கூடாக ஆதாரங்கள் இருந்தாலும் கூட மகாபாரதத்தை ஒரு 'MYTH' அதாவது நடந்தே  இருக்க முடியாத ஒரு கற்பனைப் புராணக் கதை என்று கூறும் உள்நோக்கம் கொண்ட  பலருக்கு நல்ல பதிலாக தங்கள் காவிய அமைப்பு இருந்து வருகிறது.எனது மனம் கனிந்த நன்றிகள். ஆனால் வரலாறாகக்  காட்டும் போது  சில இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நிகழ்வுகளை நடந்தவையாக  எழுத  முடியாது என நினைக்கின்றீர்களோ  என (எனக்குத்) தோன்றுகிறது. தவறென்றால் மன்னிக்கவும். திரௌபதியின் சேலை  வளர்ந்தது  கூட மாய நிகழ்வுதான். மிக முக்கியமான இந்த நிகழ்வையும் சூதனின் கற்பனையாகச் சொல்லிச் சென்று  விடப்  போகிறீர்களோ என்று  அச்சமாக இருக்கிறது. நீலத்தில் ஸ்ரீகிருஷ்ண மாயலீலா  வினோதங்கள் மற்றொரு நினைவுத் தளத்தில் நடந்தன போன்ற மாயையை உருவாக்கியது உங்கள் எழுத்து வன்மை! வியாசர்பிரானுக்கு அருளிய  எல்லாம் வல்ல ஸ்ரீ  விநாயகப் பெருமானின்  ஆசி, இந்தக் காவியத்தை நற்புகழுடன் முடிக்க, தமிழ் கண்ட இந்த சிறந்த  எழுத்தாளனுக்குக் கிடைக்கட்டும்.

அன்புடன்,
இராஜேஷ்கண்ணன்.இராம.
 
அன்புள்ள ராஜேஷ்

பொதுவாக தீர்மானமகா வரையறுத்துவிட்டு மேலே எழுதுவதில்லை. ஆகவே வரும் என நினைக்கிறேன்
 
இதில்தான் ஃப்ளாஷ்பேக்குக்கு ஆயிரம் வழிகள் உள்ளன இல்லையா?
 
ஜெ