Wednesday, December 30, 2015

சிரித்து அழ வைப்பவன்-வெய்யோன்-8சிரிப்பும் அழுகையும் மனிதனை மனிதனோடு இணைக்கிறது அல்லது மனிதனை மனிதனாக்குகிறது. அதே சிரிப்பும் அழுகையம் மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கிறது அல்லது மனிதனை மனிதனல்லாமலும் ஆக்குகிறது.

எப்போது சிரிப்பது? எப்போது அழுவது? என்பதுதான் மனிதன் படிக்கவேண்டியப் பாடம். சிரிக்க ஒரு கணம் கிடைக்குமா? என்று ஏங்கும் மனிதனிடம் வாழ்க்கை அழவொரு கணத்தை உருவாக்கும் என்றால் மனிதன் வாங்கிவந்த வரமெல்லாம் சாபமாகிவிடும்.

வரங்களை சாபங்களாக்கிவிட  படைத்தவன் யுத்தம் நடத்தினால் யுத்தத்தை யாருடன் செய்வது? படைத்தன்  இடம் அல்ல தன்னுடன்.  படைத்தவனை வெல்ல அதைவிட பெருவழி இல்லை. யுத்தம் செய்யாமல் யுத்தம் செய்யும் வழி அது. அது வலிதாங்க வழிச்சொல்லும். நகைபூக்க நலம் செய்யும். தன்னை வென்றவன் என்று தெய்வம் புன்னகைக்கும்.  

இடுக்கன் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வது அஃதொப்ப தில்-திருக்குறள். 

சூதர் தெருவில்தான் தான் இருப்பேன் என்று சொன்ன ராதை கர்ணனை வீட்டுக்குள் வைத்து அடிக்கிறாள். சூதன் மகளைத்தான் மணம்முடிக்கவேண்டும் என்று சொன்ன அதிரதன் ஊர் அறிய வைத்து அடிக்கிறான். இருவரும் கர்ணனை அடிக்கும் விதம்மாறியதே தவிர அடித்த இடம்மாறவில்லை. இதயத்தைக்கிள்ளி இதயத்திற்கே படையல் வைக்கும் வன்மையும் அன்பும். 

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்-என்று சொன்ன கவிஞர் கண்ணதாசன்.
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்- என்பார். வெண்முரசில் கர்ணன்படும்பாட்டை அன்றே அறிந்து பாட்டாக பாடிவிட்டாரோ?

கர்ணன் தான் கேட்கும் கதைகளில் சூதன் சொல்வழியாக மனிதர்களின் எல்லை ஐயம் அச்சம் என்பதை அறிகின்றான். அந்த சொற்கள் இங்கு பொருளாவதை தெளிகின்றான். ஐயமும் அச்சமும் கொண்ட பெற்றவர்களின் எல்லை கர்ணன் எல்லையை சுருக்கிவிடுகிறது. தோற்றுவிட செய்கிறது. தோற்பவன் அழும்போது தோற்றது உரிதிப்படுத்தப்படுகிறது. கர்ணன் தோற்பதில்லை என்று தன்னை தொகுத்துக்கொண்டு உள்ளதால் தோல்வியை தோல்வியுற சிரிக்கிறான். 

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் 

 இளம்குதிரைக்கு முதல்சேனம் பூட்டும் சடங்கில் அதிரதன் வெல்கின்றான், ஆனால் இளம்குதிரையின் வலியை அவன் அறிந்திருக்க வாப்பில்லை. ராதை அறிந்து கண்ணீர்விடுகின்றாள். இங்கு வலியில் துடித்து கண்ணீர்விடவேண்டிய இளம்குதிரை சிரிக்கிறது. கண்ணீர் மூலம் ராதையும்,  சிரிப்பின் மூலம் கர்ணனும் இன்னும் பிணைந்துவிடுகிறார்கள்.

சிரிப்பும் அழுகையும் மனிதனை மனிதனோடு இணைக்கிறது அல்லது மனிதனை மனிதனாக்குகிறது.

சிலர் சிரிக்கும் கணத்தில் அழவைத்துவிடுவார்கள். இங்கு கர்ணனின் சிரிப்புதான் அழுகையை வரவழைக்கிறது. கர்ணனைப்படைத்தவன் தோற்றுப்போகும் இடம்.

தன் அழகுக்கு நிகரான அழகுடைய அல்லது தனது வீரத்திற்கு நிகரான குலமுடைய ஒரு பெண்ணை மணக்கமுடியாமல் தவிக்கும் கர்ணன். நின்றும் நடந்தும் கிடந்தும் திருமணம் செய்துக்காண்டு இருக்கும் கண்ணனுக்கு தனது தாய் கன்னியாகி காதலியாகட்டும் என்ற இடத்தில் கண்ணனின் விரிவில் வியக்கிறான் கர்ணன். எல்லோரையும் அசைக்கும் கண்ணன் கர்ணனை இப்படி ஒரு அசைப்பு அசைப்பது அற்புதம். இல்லாமையை இருப்பதில் வைத்துதானே அளந்தரிய முடியும்.

கர்ணன் கர்ணன் என்று மனம் அவன் படும் பாட்டுக்கு வருந்தினாலும், அவன் துன்பத்தையே மீள மீள மீட்டிச்சுகம் கண்டாலும் தாயாய் ராதையின் சொல் அற்புதம்.

//ஆண்மகனாக அஸ்தினபுரியின் அவையில் எழுந்து நின்று என் தந்தை எனக்கிட்ட ஆணையே முதன்மையானது என்று சொல். அஸ்தினபுரியின் முடிசூடிய மாமன்னனும் தொல்குடியினர் அமைந்த அவையும் அரசனின் குலமகளும் சொல்லும் சொல்லைவிட உன் தந்தையின் சொல் உனக்கு பெரிதென்றால் அது உனக்கு பெருமையே அளிக்கும். தயங்கி சிறுமை கொள்வதைவிட துணிந்து பெருமை கொள்வதே வீரனுக்கு உகந்ததென்றுணர்” என்றாள்.//

அன்னைகள் யாராக இருந்தாலும் மகனை தந்தைச்சொல் கேட்கும் கோசலை ராமனாக்கவே முயல்கிறார்கள். அது ஒரு அற்புதம். ராமனை அள்ளி வளர்த்த கைகேயியால் அது முடியாமல்போனது விதி. 

பெண்களின் தலைவிதி. மகனுக்காக கணவனையோ அல்லது கணவனுக்காக மகனையோ தலைவெட்டும் வாளேந்திய காளியாக படைத்த விசும்பின் துளி எது?  

நன்றி
அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்