நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது சக மாணவர்கள்சிலர் பிட் அடிப்பதை பார்த்து அதைப்போல் ஒரு நாள் செது பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. . வேற்றுமை உருபுகள் என்னென்ன என்பது வரிசைப்படி மனதில் பதியாதிருந்ததால் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்ற அவற்றை அதை ஒரு சிறு துண்டு காகிதத்தில் பொடிபொடியாக சிரமப்பட்டு எழுதினேன். அதை மறைத்து தேர்வெழுதும்போது எடுத்துக்கொண்டு சென்றேன். அறை கண்காணிப்பாளராக ஒரு கண்டிப்பான ஆசிரியர் வந்திருந்தார். கேள்வித்தாளில் அக்கேள்வியும் வந்திருந்தது. அக்கேள்வியைப் பார்த்ததும் எனக்கு முழுவிடையும் ஞாபகத்திற்கு வந்து விட்டது, என்றாலும் வேண்டுமென்றே நான் அந்த காகிதத்தை மறைவாக எடுத்துப் பார்த்தேன். இந்தத் தவறை எந்த ஒரு தேவையும் இல்லாமல் செய்தேன். என் மீது பிரியம் வைத்திருந்த ஆசிரியர்களுக்கு தெரிந்தால் என்னாகும் என்றோ கண்டிப்பான என் பெற்றோர்களுக்கு தெரிந்தால் என்னாகும் என்றோ கொஞ்சமும் கருதாமல் எவ்வித பயனும் அற்ற அந்த செய்கையை ஏன் நான் செய்தேன் என நான் யோசித்துப்பார்க்கிறேன்.
விலக்கப்பட்ட பொருட்களின் அல்லது செய்கைகளின் மேல் நமக்கு ஏன் விருப்பம் ஏற்படுகிறது? கிடைப்பதற்கு அரிய பொருட்களையும் நாம் விலக்கப்பட்ட பொருட்களாக கருதலாம். ஆயிரம் கனிகளில் ஏன் விலக்கப்பட்ட கனி அதிக சுவை தருகிறது? பொருந்தாக் காமம் முறை தவறிய உறவுகள் என விலக்கப்பட்டவை அதிகம் எழுதப்பட்டு தெரிந்தோ அல்லது மறைத்தோ அதிகம் பேரால் ஏன் படிக்கப்படுகிறது? விலக்கப்பட்டதின் மேல் காவல் அதிகரிக்க அதிகரிக்க, அதை அடைவதின் அபாயம் அதிகரிக்க அதிகரிக்க, அதை அடைவதில் பெறப்போகும் இழப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அதன் சுவை அதிகரிக்கிறது, சிந்தனையில் அதன் தாக்கம் அதிகரிக்கிறது, அதை அடையும் ஆவல் அதிகரிக்கிறது. அதை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளின் தீவிரம் அதிகரிக்கிறது.
வெய்யோன் 2-ல் கியாதியின் பேரழகு சொல்லப்படுகிறது. ஆனால் உண்டு கழிவகற்றி வாழும் உயிர்களின் அழகுக்கு எல்லையுண்டு. அது அளவினால், காலத்தால், ஊழால் கட்டுபடுத்தப்பட்டது. அழகின்மையின் மேல் போர்த்தப்பட்டுள்ள மெல்லிய தோல்தான் அழகு. அதை அறியாதவர் எவராவது உண்டா? ஆனாலும் அந்த அழகை அடையமுடியாமை என்னும் அலங்காரம் பேரழகென அதிகரிக்கிறது. ஏனென்றால் அழகு பார்ப்பவர் மனதில் விழும் பிம்பம் அல்லவா. அழகை அடைவதற்கான தடைகள், அபாயங்கள், அறமீறல்கள் ஒவ்வொன்றும் உருப்பெருக்கும் கண்ணாடி வில்லைகள் போல ஓராயிரம் மடங்கு அந்த அழகை, அதன் மீதான ஆசையை அதிகரிக்கின்றன. கியாதி அடைய முடியாதவள், பெருந்தவ முனிவரின் பெருஞ்சாபமென்ற ஆயுதத்தால் காக்கப்படுபவள் என்ற நிலையே அவளின் அழகை பல்லாயிரம் மடங்கு பெரிதாக்குகிறது.
தம்சனுக்கு காணமுடியாமையே கியாதியின் அழகை பேரழகாக்குகிறது. அவளை அவன் தன் பிறந்தநாள் முதல் கண்டுவருபவனாக இருந்திருந்தால் அவள் அழகு அவனுக்கு ஒரு தாயின் அழகென பொலிந்திருக்கும். ஆனால் அவளை இதுவரை காணதிருத்தலால், அவளின் நிழலே அவன் மனதை கிளர்ச்சியடைய வைக்கிறது.
முனிவர் சென்று மறைந்தபின் அந்நிழலை நூறுமுறை தெளிவாக என்னுள்ளே கண்டேன். கணம் தோறும் வளர்ந்து அது பேரழகு கொண்டது. ஒவ்வொரு மயிர்க்காலையும் கண்டேன். ஒருகோடி அசைவுகளாக அதை பெருக்கினேன். இவ்வெழில்நிழல் எதன் மாற்றுரு என வியந்தது என் நெஞ்சம். தவிர் என்று என் ஆழம் தவித்தது. அத்தவிப்பே விழைவென எரிக்கு நெய்யாகியது. இளமுனிவனே, அழகென்பது பிரம்மம் மானுடருடன் விளையாடும் முறை.
மனிதனை மாயை என்ற கயிற்றால் கட்டி ஆட்ம் இந்த தோல்பாவை நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கும் தெய்வம் ஒன்றே அறியும் மன வினோதங்களை. அல்லது அதுவும் அறியாத ஒன்றோ? யாரறிவர் அதை
தண்டபாணி துரைவேல்