சென்னை வெண்முரசு கூட்டத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போதுகூட நான் சொன்னேன்.. வெண்முரசில் எனக்கு ஒரு குறை மட்டும் இடறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அக்குறை என் தனிப்பட்டது. கர்ணன். ஒரு முழுமையடையா குழந்தையை அணுகுவதைப்போலவே அவனை அணுகுகினேன். பெரு வெள்ளம் வறண்ட தன் பாதையில் மெல்ல ஒழுகியே முகம் காட்டி வந்து பின் அதன் கரை உடைத்து எழுவது போல் வெண்முரசில் எழுந்த மாந்தர்கள் நிறைய. மகாபாரதத்தின் மிக முக்கிய பாத்திரமான துரோணர் வெண்முரசில் எழுந்து வந்த போது கண்ணீர் உகுத்தேன்.. அவனுடன் மெல்ல நடந்தேன்..உன் வலி எனக்கு புரிகிறது என்று சொல்லிக்கொண்டேன். கனவில் அவனை அரவணைத்திருக்கிறேன். அவனுக்கும் அவன் தந்தைக்குமான உறவும்... அவருக்கும் அவர் நண்பனுக்குமான உறவும் எங்கோ என்னை கர்ணனை நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தது..(பின்னால் துரோணருக்கும் கர்ணனுக்குமான கதையில் ஏன் என்று புரிந்தது) ..
கர்ணன் எங்கனம் எழுவான் என யோசித்துக்கொண்டே இருப்பேன். ஆனால் அதில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே இருந்தது.. கர்ணனுக்கு ஒவ்வொரு நாளும் காத்திருந்து, காத்திருந்து அவனை பெருக்கிக்கொண்டதாலோ தெரியவில்லை. நான் வெண்முரசில் கர்ணனில் சிறிது ஏமாற்றமடைந்தேன்.. பின் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டேன்.. அவன் பிறிதொரு தருணம் மீண்டும் எழுவான்..இப்பவே சொல்லிட முடியாதுல்ல என்று.. வெய்யோன் உதித்தான்
தனசேகர்