Wednesday, December 30, 2015

அங்கிக்குள் இருக்கும் உண்மையான அதிரதர் (வெய்யோன் 7 - 8)சிலர் எப்போது ஒரே மாதிரியான உடை அணிவார்கள்.  எனக்கு தெரிந்த ஒருவர் எப்போதும் வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் அனிவார். அதைத்தவிர அவர் வேறு ஆடை அணிந்து நான் பார்த்ததே இல்லை. அவர் பணி ஓய்வு பெற்று நீண்ட நாட்கள் கழித்து அவரை மீண்டும் பார்த்தேன். அப்போது காலை நடைப்பயிற்சியில் இருந்தார். அப்போதும் அவர் அதே உடையில்தான் இருந்தார். இதைப்போல் தன் உடையமைப்பை தன் அடையாளமாகக் கொண்ட  அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் துறவிகளைக்கூட கண்டிருக்கிறோம். அவர்கள் அதை சமூகத்திற்கான தன் அடையாளமாக அதை கைக்கொண்டிருக்கிறார்கள்.
  

அவ்வாறே மனிதர்கள் அங்கியைப்போல ஒரு ஆளுமையை கைக்கொண்டு அதை தன் அடையாளமாக வெளியில் காட்டுகிறார்கள்.  ஒருவர் தன்னை சகஜமாக பழகுபவராக, நகைச்சுவையாளராக,  எளிதில் நட்பு பாராட்டுபவராக,  எதைப்பற்றியும் கவலைப்படாதவராக, உலக விவரம் தெரியாதவராக, அதிகம் பேசாதவராக,  கூச்சசுபாவம் கொண்டவராக, சிடுமூஞ்சியாக, கோபக்காரராக, அறக்கோபத்தோடு சமூகத்தை சதா விமர்சிப்பவராக, காரியமே கண்ணாயிருப்பவராக என பல்வேறு ஆளுமை அங்கிகளை அணிந்தபடி சமூகத்தில தன்னை
வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.   ஆனால் அப்படி ஒருவர் வெளிக்காட்டும் ஆளுமையை மட்டும் வைத்து நாம் தவறான
முடிவுக்கு வந்து விடக்கூடாது. உறுதியான நபர் எனத் தோற்றமளிக்கும் ஒருவர் பலவித குழப்பங்கள் கொண்டவராக இருக்க நேரிடும். ஒரு நகைச்சுவையாளர் ஒரு சிறிய கிண்டலுக்கு  கோபித்துக்கொள்பவராக இருப்பார். யாரும் என்னை புகழ வேண்டியதில்லை என அறிவிக்கும்
ஒருவர் உள்ளத்தின் அடியாழத்தில்  யாராவது புகழமாட்டார்களா என்ற தனியாத வேட்கை இருக்கலாம்.
   

அதிரதன் ஒரு எளிய மனிதர், மற்றவர்   கைப்பாவை, மனைவியின் சொல்லுக்கு அடங்கியவர், தேரோட்டுதல் குதிரைகள் பராமரிப்பைத்தவிர வேறெதிலும் ஆவலற்றவர்  என்ற ஓர் ஆளுமை  அங்கியை  அணிந்திருக்கிறார்.  ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தில் தானாக சிந்தித்து ஒரு உறுதியான முடிவெடுப்பவராகவும் அந்த உறுதியை யார் வற்புறுத்தலுக்கும் விட்டுக்கொடுக்காதவராகவும் இருக்கும் அதிரதர் நமக்கு புதியவராக தெரிகிறார். இந்த அதிரதர்தான் உண்மையான அதிரதர். இதை அவர் மனைவி ராதைக்கு தெரிந்திருக்கிறது.  அதிரதரும் ராதையும் இப்படி ஆடைகளற்ற ஒருவரையொருவர் அறிந்திருக்கின்றனர். அதனால்தான் ராதைக்கு அதிரதர் தன் சொல்லுக்கு கட்டுப்படும் எல்லை தெரிந்திருக்கிறது. அந்த எல்லை மீறாமல் அவள் நின்றுகொள்கிறாள்.  
“ஒவ்வொரு சொல்லுக்கும் மறுசொல் உரைத்தும் இளிவரல் நகை செய்தும் நான் அவரை எதிர்கொள்வதை இதுவரை கண்டிருப்பாய். ஆனால் என் நெஞ்சுக்குள் என்றும் கொழுநனின் கால்களை தலையில் சூடும் பத்தினியாகவே இருந்திருக்கிறேன். இது அவரது உயிர்வினா என்றறிவேன். இதற்கு என்னிடம் ஒரு விடையே உள்ளது. இவ்வுலகே அழியினும் சரி, என் கணவர் வெல்ல வேண்டும்” என்றாள் ராதை.

 

 அதிரதர் கர்ணன் திருமண விஷயத்தில் ஏன்  இந்த தீவிர நிலை எடுக்கிறார். என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அது வெறும் முரட்டுப்பிடிவாதமா? கர்ணனின் தந்தை என்பதால் அவர் அரசரின் தந்தை என்ற வகையில் செல்வந்தராக ஆகியிருக்கலாம். பெருவீரனை மகனாக பெற்றவர் என்ற புகழ் கிடைத்திருக்கலாம். ஆனால் கர்ணன் அவன் முதுகுக்கு பின்னால் சூத மகன் என இகழப்படும்போதெல்லாம் உண்மையில் அவமதிக்கப்படுபவர் அதிரதர் அல்லவா? அவர் அப்போது தான் பிறந்த குலத்தின் காரணமாக வெட்கப்படவேண்டியவராக ஆக்கப்படுகிறார். கர்ணனின் தந்தையாக இல்லாத காலத்தில் யாரும் அவரை இகழ்ந்திருக்க மாட்டார்கள். அவர் ஒரு சிறந்த தேரோட்டி, குதிரைவளர்ப்பின் நிபுணர் என்ற  பெருமையுடன் வாழ்ந்திருப்பார். ஆனால் இப்போது கர்ணன் மேல் எய்தப்படும் இகழ்ச்சி அம்புகளால் அடிபடுபவர்களாக அவரும் ராதையும் இருக்கின்றனர்.
    

கர்ணன் ஷத்திரியப் பெண்ணை மணந்தால் அவள் மூலமும் அவர்கள் அந்த அவமானத்தை அடைய வேண்டியிருக்கும். கர்ணனின் பிள்ளைகள் அடையப்போகும் இகழ்ச்சிகளுக்கான பழி இவர்கள் மீதே விடியும் என்று அதிரதர் நினத்திருப்பார். அவரின் கவலை இயல்பானது. கர்ணன் ஒரு சூதப் பெண்ணை மணந்துகொண்டு பெறும் பிள்ளைகள்மட்டுமே வாரிசு என சொல்லிக்கொள்ளமுடியும். கர்ணனுக்கு ஷத்திரிய மனைவிமூலம் பிறக்கப்போகும்
பிள்ளைகளுக்கு இவருக்கு எந்த உரிமையும் இருக்காது என அவர் எண்ணியிருப்பார். ராதையும் கர்ணனிடம் அதையே சொல்கிறாள்.
ராதை “அவர் சொல்வதில் ஓர் உண்மை உள்ளது. அவர் மைந்தனென்றே நீ எப்போதும் இருப்பாய். ஆனால் உன் மைந்தர்கள் அவருக்கு பெயரர்களாக எப்போதும் இருக்க மாட்டார்கள். ஒரு சூதப்பெண்ணுக்கு பிறக்கும் மைந்தனே என்றும் அவர் பேர் சொல்ல இப்புவியில் வாழ்வான்” என்றாள்.
    

அவர் அப்படி எண்ணினால் அது ஒன்றும் தவறில்லை. விதுரர் எப்படி தன் சூத தாயிடமிருந்து பிரித்து  வளர்க்கப்பட்டார் என்பதையும், அதனால் அந்தத் தாய் மனங்கலங்கியவராகவே தன்  வாழ்நாள் முழுதும் கழித்து மறைந்தார் எனவும் நாம் பார்த்திருக்கிறோம். ஆக அதிரதர் சிந்திப்பது அவர் வகையில் சரியாகவும் நியாயமாகவும் தோன்றுகிறது. இந்த ஷத்திரியர் உலகில் கர்ணன் புகாமல் வெறும் தேரோட்டியாகவே இருந்திருப்பதையே அவர் உள்ளம் விரும்பியிருக்கும். அவர் நினைப்பது சரிதான் என கர்ணன் அடையும் அவமதிப்புகள், தோல்விகள், துயரங்கள் நமக்கு சொல்லிவருகின்றன. அதிரதன் ராதை காணூம் இம்முடிவை பார்க்கும்போது  நூறு நாற்காலிகள் கதைநாயகனின் தாய் என் நினைவில்வந்து  என் கண்கள் கலங்குகின்றன.

தண்டபாணி துரைவேல்