அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்லிலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
கல்லாள் பிறக்குங் குடி-நாண்மணிக் கடிகை
யார் சொல்லமுடியும் யார் எங்கு பிறப்பார் என்று, ஏன் இங்கு இவர் பிறந்தார் என்று எவர் சொல்லமுடியும். பெரும் இழிவுக்குள்தான் பெரும்புகழோன் பிறப்பானா? அல்லது பெரும்புகழோன் பிறப்பாதல் பெரும் இழிவுகள் என்னென்ன என்பதை அறிகின்றோமா? கர்ணனின் அண்ணாந்துப்பார்த்தும் அறியமுடியாத உயரத்தையும், குனிந்துப்பார்த்தும் இறங்கமுடியாத அவன் ஆழத்தையும் வடித்த விதத்தில் வெய்யோன்-4 கர்ணனின் புதிய சித்திரத்தை என்றும் அழியாத சித்திரத்தை நிலை நிறுத்துகிறது. . கர்ணன் என்றால் இனி வெண்முரசு கர்ணன்தான்.
தன்கதையை எவரும் கண்களால் பார்ப்பது இல்லை நெஞ்சத்தாலேயே பார்க்கிறார்கள். இங்கிருந்தாலும் அவர்கள் எங்கோ தொலைவிலேயே இருக்கிறார்கள். அவர்களை தொலைவில் வைக்கும் தெய்வம் அவர்களின் வாழ்க்கையை இரண்டாகப்பிரித்துப்போட்டுவிடு கிறது அல்லது இரண்டாக பிரிந்துவிடும் வாழ்க்கை வழங்கப்பட்டவர்கள் இங்கிருந்தும் எங்கோ இருக்கிறார்கள்.
அள்ளிக்கொடுக்கிறோம் என்பதை அறியாமலே அள்ளிக்கொடுக்கும் கர்ணன், கொடுத்தும் நிறையாமல் நெஞ்சிலிட்ட ஆரத்தை சூதனுக்கு சூட்டும் இடத்தில் அவன் கொடைக்கென்ற பிறந்த கற்பகவிருட்சம் என்று காட்டிவிடுகின்றான்.
புனைதல் என்பது வேறு, இயல்பு என்பது வேறு. புனைதல் என்பது புகழுக்காகவே கவச்சியாக்கப்படும். இயல்பு இயல்பாகவே இருப்பதால் கவரவும் செய்யும் கவராமல்போகவும் செய்யும். ஆனால் இயல்பு கவர்ந்தாலும் கவராமல்போனாலும் அகத்தை அசைத்துவிடுகிறது. கர்ணனின் கொடையும் இயல்பாகவே உள்ளது. அவன் கொடையை எதற்காகவும் புனையவில்லை. சூரியன் ஒளியோல அவன் கொடையும் இயல்பு. இயல்பு என்றதும் கர்ணனின் உண்மை உரைக்கும் செயலும் இயல்பாகவே உள்ளது. தன்னை புகழும் சூதனிடன், தான் புகழில் இருக்கும் அவையில் சூதன்மகன் என்றே பரசுராமனிடம் தன்னை அறிமுகப்படுத்தியதாக சொல்லும் இடத்தில் எத்தனை பெரிய உண்மைக்கு சொந்தக்காரனாகி உயரத்திலும் உயர்ந்து நின்றுவிடுகிறான். இழிவையே புகழாகச்சூடும்தோளன் என்பதை நிறுபிக்கும் இடம்.
உண்மையாக வாழ்தல் என்பது எளிதான காரியமா என்ன?. உண்மை பேசுகின்றேன் என்று சொல்லலாம் ஆனால் பேசிய உண்மைப்படி வாழ்தல் என்பது தவம். ஆன்மாவை உண்மையில் நிறைப்பவன் இடத்தில்தான் சொல்லும் செயலும் உண்மையாக இருக்கும். உண்மை மனிதனை அவன் புனைவுகளைக்கழற்றி நடுவீதியில் நிர்வாணமாக நிற்க வைத்துவிடுகிறது. அந்த நிர்வாணத்தை ஊர்ப்பார்த்துவிடும் என்பது அல்ல பிரச்சனை தன்னால் தன்னைப்பார்க்க முடியாது என்பதுதான் பிரச்சனை. தன்னைத்தான் பார்த்துக்கொள்ள புனைந்துக்கொள்ள தோதாக இருக்கும் சொற்களில் உண்மைகள் இருந்தால் மனிதன் உண்மைகள் பேசுவான், தான் பேசும் உண்மைகள் தன்னையே தோலுரி்க்கும் என்றால் அவன் உண்மையை உரித்துவிடுவான். கொடை வள்ளல்களில்கூட முதல்ஏழு, இடைஏழு, கடையேழு என்று இருபத்தோர்பேர் இருக்கிறார்கள் உண்மைபேசுவர்களில் அரிசந்திரன் மட்டும்தான் இருக்கிறான் எனவே அரிச்சந்திரனைத்தொட துடிக்காத மானிடர் அகம் ஒன்று மண்ணில் உண்டா? கர்ணன் இன்று அரிச்சந்திரனை தொட்டுச்செல்கிறான். உண்மைபேச பேச தெரிந்தால் மட்டும்போதாது தன்னை வெல்லத்தெரிந்து இருக்கவேண்டும். தன்னால் மட்டுமே வெல்லப்படுபவன் நிகரற்றவன் என்பது அதுதான். உண்மைபேசும்போது உலகுக்கு உண்மையை சொல்லவில்லை நம்மை நாமே வெற்றிக்கொள்கிறோம். தன்னோடு போர்த்தோடுத்து தன்னைக்கொன்றபின்பு தான் வாழ்தல் என்பது எளிதானதா? வாழ்வாங்கு வாழ்தலுக்கு உரியவர்கள் அவர்கள்.
கர்ணன் கொடையையும் உண்மை உரைக்கும் திறனையும் ஒரே இடத்தில் வைத்தவிதத்தில் காலைக்கதிரவனை பொற்கிண்ணத்தில் அள்ளுகின்றீர்கள் ஜெ.
அன்புள்ள ஜெ, இந்த திரௌபதி ஏன் இத்தனை பெரிய அரண்மனையைக்கட்டிக்கொண்டு இருக்கிறாள், இத்தனை பெரிய அரியனையில் அமர்ந்து இருக்கிறாள் என்று இன்று அறிந்தேன். யானையை கொல்லும் பெண்சிங்கம் யானையைவிட பெரியதுதான்.
ஆணவம்
ஆணவம்
எதிர் எதிரே வேண்டாத சிங்கப்பற்களாய் நீள்கிறது
சிரிக்கையில் அழகாகத்தான் இருக்கிறது
கடிக்கும்போதும்
கடிபடும்போதும்
மனிதமுகம் அங்கு இருப்பதில்லை
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்