ஜானகிராமனின் மரப்பசு நாவலில் நாயகி சமூக மரபுகளுக்கு முற்றிலும் மாறான வாழ்க்கையை எவ்வித மனச்சங்கடங்களுக்கும் ஆளாகாமல் வாழ்ந்து வருபவளாக இருப்பாள். இன்றைய காலத்தில்கூட மிக அதிர்ச்சியூட்டக்கூடிய வாழ்வுமுறை அது. அவள் மனதில் எல்லா மரபுகளயும் தூக்கி எறிய தூண்டுதலாக ஒரு நிகழ்வு கதையில் அமையும். அவள் மிகவும் மதிக்கும் ஆச்சாரசீலர் தன் மாணவன் போன்ற ஒருவர் செய்த சிறிய தவறுக்கு ஒரு துண்டு சீட்டில் என்னை இனி பார்க்கவோ பேசவோ செய்யாதே என குறிப்பெழுதி அந்த மாணவரை முற்றிலுமாக தவிர்த்துவிடுவார். அந்தப் பெரியவர் செய்ததில் அப்படி என்ன தவறிருக்கிறது. தன் கோபத்தை மிக மென்மையான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார் என தோன்றலாம்.
ஆனால் முற்றிலுமான உதாசீனம் என்பது ஒருவருக்கு இருப்பதிலேயே கடுமையான தண்டனையாக இருக்க முடியும். எதிராளிக்கு தன் பக்கத்தை விளக்க எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்காத முறை இது. நீ குற்றமிழைத்தவன் மன்னிக்கப்படும் தகுதியற்றவன். தன்டிப்பதன்மூலம்கூட சரிசெய்யமுடியாத தவறிழைத்தவன் என கூறும் ஒருதலைப்பட்சமான மறுபரிசீலனைக்கு உட்படுத்தமுடியாத தீர்ப்பு. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த தண்டனையை ஒருவனுக்கு அளிப்பவர்கள் அவன் வாழ்க்கையின் தவிர்க்க விரும்பாத அவன் மிகவும் மதிக்கும் நபர் அல்லது நேசம் வைத்த நபராக இருக்கும். உயிரை அறுக்கும் வேதனை அளிக்கும் தண்டனை இது.
கணவன் மனைவி உறவில் ஒருவருக்கொருவர் அவ்வப்போது அளித்துக்கொள்ளும் தண்டனையிது. பின்னர் ஒருவாறு சமாதானமாகி கோபித்துக்கொண்டவரே இறங்கிவரவேண்டும். இதுவே நீண்டுகொண்டே போகும் சமயத்தில் இருக்கும் காதலை வற்றவைத்து நிரந்தரபிரிவுக்கு காரணமாக ஆகிவிடுகிறது. ஒருவருக்கொருவர் திட்டி சண்டையிட்டுக்கொளவதைவிட, அடித்து சண்டை இட்டுக்கொள்வதைவிட ஒருவருக்கொருவர் உதாசீனம் செய்து கொள்வது மிக அபாயகரமானது என்று சொல்லலாம்.
தன் இணை தன்னை உதாசீனம் செய்வதை எத்தகைய மனத்திண்மை கொண்ட ஒருவராலும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு வகையில் அவன் துணை முடிந்தால் என்னை சமாதானம் செய்ய முயன்றுபார் என விடுக்கும் சவால். ஒரு ஆணுக்கு அவன் ஆண்மையையும், ஒரு பெண்ணுக்கு தன் பெண்மையையும் அவமதிக்கும் செயல். இதில் ஊடல் மற்றும் சிறு சண்டைகளால், பிரியமும் உரிமையும் கொண்டு காட்டும் சிறு சிறு உதாசீனங்களைப்பற்றி பேசவில்லை. அவை உதாசீனங்களே இல்லை. நான் சொல்வது வெறுப்போடு காட்டும் உதாசீனத்தை. அத்தகைய உதாசீனம் ஒருவர் இல்லறத்தில் அனுபவிக்க நேர்ந்தால் அது அவர் வாழ்நாளில் அடையும் பெருந் துயரங்களில் ஒன்றாக அமையும்.
கர்ணனை அவன் மனைவி விருஷாலி உதாசீனம் செய்வதை அதனால் கர்ணன் அடையும் மன வலியை நன்கு படம் பிடித்துக்க் காட்டுகிறது இன்றைய வெண்முரசு. அவள் கருவுற்றிருப்பதை ஒரு சேடிப்பெண் சொல்லி அவன் அறிந்துகொள்ள வேண்டியிருப்பது எத்தகைய அவமதிப்பு அவனுக்கு, அதுவும் எந்தக் காரணமுமின்றி. பதிலுக்கு விருஷாலினி என்ன எதிர்பார்க்கிறாள்? அவள் மேல் அவனுடைய உதாசீனத்தையா? அதன் மூலம் தன் வெறுப்பை நியாயப்படுத்திக்கொள்ள நினைக்கிறாளா? எல்லோருக்கும் எல்லாமும் கொடுக்கும் கர்ணன் அனைத்திலும் காண்பது இழப்பு ஒன்றே என இருப்பதுதான் இறைவன் வகுத்த விதி போலும்.
மனதின் உணர்ச்சிகளை உடலில் வெளிப்படுத்திக்கொள்வது இயல்பாகும். ஒருவன் கோபத்தில் இருந்தால் கையை சுவறில் அறைந்து தனக்கு வலி ஏற்படுத்திக்கொள்கிறான். துயரத்தில் உணவு உண்ணாமல் பசியுடன் இருக்கிறான். இங்கு கர்ணன் தன் மன இறுக்கத்தின் காரணமாக வசதியான இருக்கையை தவிர்த்து சிறிய இருக்கையில் அமர்கிறான். கர்ணனின் மன வலிமுழுதும் வெளிப்படுத்தும் உட்ல்மொழிதான் அவன் வசதியற்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பது. இந்த தருணத்தை தேர்ந்தெடுத்து அற்புதமாக ஷண்முகவேல் வரைந்திருக்கிறார். கர்ணனின் காத்திருப்பு, அவன் தனிமை, எல்லாம் வெளிப்படும்வண்ணம் ஓவியம் அமைந்திருக்கிறது. ஆசான் விருஷாலி பாத்திரத்தின் மூலம் புதிய உளச்சிக்கல் ஒன்றை நமக்கு கற்பிக்க தொடங்கியிருக்கிறார் என நினக்கிறேன்.
தண்டபாணி துரைவேல்