கர்ணன் தன் மண நிகழ்வின் முடிவை அறிவிக்கும் அத்தியாயத்தின் (வெய்யோன் 9) நாயகர் எனத் தாராளமாக விதுரரைச் சொல்லலாம். ஒருவகையில் அவன் குழப்பங்களை மிக எளிதாகத் தீர்த்து வைப்பவர் என்றும் கூறலாம். கர்ணனின் முடிவு அவையில் ஏற்படுத்தும் கொந்தளிப்புகளை அவரும் பானுமதியுமே திறமையாகச் சமாளிக்கிறார்கள். இறுதியாக அவர் கர்ணனிடம் பேசுமிடம் அவரைச் சிறந்த மதியூகியாகவும், பேரமைச்சராகவும் காட்டுகிறது. அவர் கர்ணனிடம் பேரறத்தால் அலைவுறுகிறான் என்கிறார். ஆனால் ஒரு அரசனாக அவன் குல அறத்தில் இருந்து கோல் அறம் வரை காணும் எட்டடி பார்வை அவனுக்குப் போதும் என்கிறார். பேரறம் என்பதை ஞானியருக்கும் யோகியருக்கும் விட்டுவிட்டு அரசனாக, நிலையானவனாக அங்க மண்ணிற்கு உகந்தவற்றைச் செய்ய வேண்டும் என்கிறார்.
இந்தச் சொற்களை அவர் அமைச்சராக மட்டும் சொல்லியிருந்தால் கர்ணனின் உள்ளத்திற்கு இவ்வரிகள் சென்று சேர்ந்திருக்காது. சொல்லியவர் விதுரர் என்பதால் மட்டுமல்ல, அவரும் ஒரு சூத புத்திரர் என்பதாலும், அவரின் இருப்பும் திருதா என்னும் வேழத்தினால் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருப்பதாலும் அவர் விழிகளை நோக்கும் கர்ணனுக்கு அங்கு கிடைக்கும் ஆதூரமான அரவணைப்பு, அந்த அன்பு, அந்த உள்ளார்ந்த பாசம், கிட்டத்தட்ட தான் வாழும் வாழ்வை தனக்கு முன்பே வாழ்ந்து முடித்த அனுபவம் வாய்ந்த தந்தைமை தரும் அறிவுரை என அனைத்தும் தான் அவனை விழித்தெழச் செய்கிறது. கணவனாகத் தூங்கியவன் அரசனாக எழுகிறான். அவைக்குச் செல்கிறான்.
மீண்டும் விதுரர் கர்ணன் பால் தான் கொண்ட பாசத்தை வெளிப்படுத்துகிறார். அதற்கு அவர் அவனில் தன்னையும் கண்டது மட்டும் தான் காரணமா? அது மட்டும் அன்று, அவன் குந்தியின் புத்திரனும் கூடத் தானே! அவர் அவனிடம் கூறும் இறுதிச் சொற்களைப் பாருங்கள், “பெருங்கருணையால் நோயுற்றிருக்கிறீர்கள் நீங்கள். ஊழ் உங்களை வீழ்த்தியிருக்கலாம். அதன் மறுகையில் உள்ளதென்ன என்று நாமறியோம். விண்ணளவு தூக்குவதற்காக இவ்வீழ்ச்சியை அது நிகழ்த்தியிருக்கலாம். நீங்கள் உதிர்ந்த மரத்தின் முறிகாம்பு பாலூறிக் கொண்டிருக்கலாம்…”. அங்கும் கூட பாலூறிய முறிகாம்பினை அவர் நினைவு கூறுகிறார். விண்ணளவு தூக்குவதற்காக இவ்வீழ்ச்சியை நிகழ்த்தியிருக்கலாம் என்னும் போது அவர் ஒரு தந்தையாகவே இருக்கிறார். இறுதியாக ‘“இதற்கப்பால் ஒரு சொல்லும் எடுக்கலாகாது என்றே என் உதடுகளுக்கு சொல்லிக் கொள்கிறேன்’, என்று சொல்லும் போது மீண்டும் அவருள் ஊறித் திளைத்து, அவரின் ஆளுமையின் பாகமாகவே மாறிப்போன பேரமைச்சர் எழுந்து வருகிறார். ஏனென்றால் சொல்லும் சொல்லை வெல்லும் பிறிதோர் சொல் இல்லாமலே பேசுபவர் அல்லவா!!
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.