அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
பகவான்
ஸ்ரீராமகிருணரிடம் பக்தர் ஒருவர் “பவஹாரி
பாபா தன் அறையில் உங்கள் புகைப்படத்தை வைத்திருக்கிறார், பார்த்தேன்” என்று
சொல்லும்போது, குருதேவர் தனது உடம்பை தொட்டுக்காட்டி “இந்த உறையையா?”
என்று சிரிப்பார். பின்வரும் நாளில் ம-விடம் தனது நெஞ்சை தொட்டு “இந்த
உறைக்குள் ஏதோ இருக்கிறது” என்பார். குருதேவர் சொல்வது மகாபூரணம் அடைந்த
நிலை.
மகாபூரணம் ஆகாத எளிய மனிதர்களின் உடம்பு வெறும் உறைமட்டும்தானா? சுபகையின் உடம்பு கேள்வியை எழுப்புகின்றது.
இந்த உடம்பு ஒரு உறை, சுளைகளை தாங்கி இருக்கும்
தோல், நெய்யை சுமந்து செல்லும் தேங்காய், பூரணத்தை பொதிந்த வைத்திருக்கும்
கொழுக்கட்டை, அவ்வளவுதான் அதற்கு மதிப்பு. அந்த உடம்பைத்தான் “நான்” என்று
நினைத்துக்கொண்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நினைத்துக்கொள்ளவும் முடியும்,
உடம்பைத்தாண்டுதல் என்பது பெரும் சிந்தனை செயலுக்கு பின்னால் நடக்கக்கூடியது.
எளிதாக எளிய மனிதர்களுக்கு அது வாய்த்துவிடுவதில்லை. உடம்பு இல்லாமல் நான் இல்லை
என்பது ஒரு மாய நிஜம், அந்த மாயத்தை தாண்டிய நிஜத்தில் நிற்பவர்களால் உடம்புக்கு
அப்பால் உள்ள நானை அறியமுடிகின்றது. அந்த நான் நானாக இல்லை, எது எல்லாமாகி
இருக்கிறதோ அதுவாக இதுவும் இருக்கிறது என்ற ஞானம் வருகின்றது.
தாயாலே வந்தது
தீயாலே வெந்தது
மெய்யென்று மேனியை யார் சொன்னது? என்பது வாழ்வே
மாயம் படப்படால். .
தாயாலே வந்தது
நோயாலே நொந்தது
தீயாலே வெந்தது
மெய்யென்று மேனியை யார் சொன்னது? என்று
இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தாயாலே வந்தது நோயாலே நொந்து
நொந்து தீயிலே வேகுகின்றது. தாயாலே வந்தது நோயாலே நொந்ததும் தீயாலே வெந்ததும்
கண்களால் காணும் நிஜம். அந்த நிஜயங்களின் வளர்சிதை மாற்றங்களை உடம்பு
நடித்துக்காட்டுகின்றது. இதைத்தானே நான் என்று எண்ணமுடியும்.
சுபகைப்போன்ற எளிய பணிப்பெண்ணுக்கு இருப்பென்று
இருப்பது உடமை என்று இப்பது அவள் உடம்பன்றி வேறு என்ன? அதுதான் இளமையில் அழகாக
இருந்தது, அதுதான் கேளிக்கு உரிய பொருளாக இன்று ஆனது. அந்த கேளிக்கு உரிய
உடம்புதான் அவளுக்கு உரிய உடமைப்பொருளாக இப்போது அவளிடம் உள்ளது. அதுதான் அவள்,
அது அன்றி அவள் இல்லை, அது அன்றி அவளிடம் என்ன இருக்கு என்று அவளுக்கு தெரியாது.
அவள் திருமூலர் இல்லையே. அவள் திருமூலராக இருந்தால் “உடம்புக்குள்ளே உறு பொருள்
கண்டேன்” என்று வாழ்ந்து இருப்பாள்.
அப்படி வாழ்வதால் அவள் அடையும் நன்மைதான் என்ன?
சுஜயனுடன் மாலினியை சந்திக்க செல்லும் சுபகை
படகில் இருந்து கரைக்கு செல்ல முடியாமல் தவிக்க அவளை ஒருவன் கையைப்பிடித்து
இழுக்கவும், ஒருவன் அவள் பின் பக்கத்தை அழுத்தி உந்தித்தள்ளுவதும் என்று வரும்
காட்சி ஒரு விலங்கை படகில் இருந்து கரைக்கு ஏற்றுவதுபோன்று ஏற்படுத்தும்
மனச்சங்கடம் எழுத்தில் வடிக்க முடியவில்லை அன்று சுபகை என்னப்பாடு பட்டு
இருப்பாள். இந்த உடம்பையா? அன்று அர்ஜுனன் விரும்பினார். இந்த உடம்புதானே நான்
என்று நொந்து இருப்பாள். இந்த உடம்பை சுமந்துக்கொண்டு ஏன் வாழவேண்டும்? என்றும்
நொந்து இரு்பாள்..
இதே உடம்பு உடைய சுபகையைத்தான் காண்டீபம்
கோயிலுக்கு சென்று திரும்பும் போது தேரில் ஏறிக்கொள் என்று அர்ஜுனன் தன்
கைக்கொடுக்கிறான். இங்கு அர்ஜுனன் அவளை ஏற்ற கைக்கொடுப்பது அந்த உடம்பை ஏற்றவா?
அன்று பணியாளர்களால் படகில் இருந்து ஏற்றப்பட்ட உடம்பு, இங்கு அர்ஜுனனால்
ஏற்றப்படுவது அகம். பெண் என்னவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம் ஆனால் ஒரு
இடத்தில் அவள் அன்னை என்றே ஆகி இருக்கிறாள். அந்த அன்னை அவளை பிரபஞ்ச
அன்னையாக்கிவிடுகிறது. எங்கு வேண்டும் என்றாலும் சுற்றித்திரியலாம், வீட்டில்
அன்னைக்காத்திருப்பாள் என்ற நினைவுவே ஒரு விடுதலையாக மைந்தனுக்கு அமைகிறது.
விடுதலை என்பது இங்கு அச்சம் இன்மையாகவும் இருக்கிறது. நான் இருக்கிறேன் என்ற
அகமகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த அக மகிழ்ச்சியை பாஞ்சாலியோ, சுபத்திரையோ
அர்ஜுனனுக்கு வழங்கமுடியாது. வழங்கக்கூடாது என்று அவர்கள் நினைக்கவில்லை, அவர்களின்
அகம் விரிந்த விதம் வேறு வகையாக இருக்கிறது. சுபகையின் அகம் விரிதலை
நொக்கிச்சொல்லாமல் தாயின் மனமென குவிந்து உள்ளது. அதையே அர்ஜுனன் கண்டடைந்து
அவளுக்கென ஒரு இடத்தை, அவளுக்கா மட்டும் ஒரு இடத்தை ஒதுக்குகின்றான்.
அன்று கன்னியாக இருக்கையில் அர்ஜுனனைத்தேடிச்சென்ற
சுபகை உடம்போடு செல்லவில்லை உள்ளத்தோடு சென்றால் அவள் உள்ளத்தில் இருந்தது காதல்
தாய்மை அன்பு அர்ப்பணிப்பு, அதை இன்றும் அவள் பொத்தி பொதிந்து வைத்து உள்ளால் அந்த
பூரணம் நிரம்பிய கொழுக்கட்டைதான் இந்த உடம்பு, இந்த கொழுக்கட்டையின் வடிவம்
மாறிக்கொண்டே இருக்கிறது ஆனால் அந்த பூரணம் அப்படியேத்தான் இருக்கிறது. தன்னையும்
அர்ஜுனனையும் இணைத்தது இந்த பூரணம்தான் இந்த கொழுக்கட்டை இல்லை என்று இன்று சுபகை
அறிகிறாள். அன்று அர்ஜுனனுக்கு சுபகை அளித்து பூரணத்தை என்பதை அவன் சுட்டும்போது
அறிகிறாள். அங்கு கழன்றுவிழுகிறது சுபகையின் உடம்பு இல்லை உடம்பின் தேவை. இப்போது
சுபகையும் திருமூலர்தான்.
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண் டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டா னென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகி ன்றேனே.
சுபகையும் தவத்தில் இனி நிற்பாள்.
பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று
தாமிருக்கும் தாம்-என்று பட்டினத்தார் சொல்லும் உடம்புக்குள் உள்ள
பூரணத்தை அறியும் வாழ்க்கையில் இருக்கிறது வாழ்ந்தன் அர்த்தம். சுபகை
என்னும் பூரணத்திற்கு வாழ்க்கையின் அர்த்தம் இன்று அர்த்தப்படுகிறது.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.