'செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு இருளன்றி ஒளிவிடம் ஏது? விழிமுனைகளன்றி பகையேது? ஆடியன்றி கூற்றமேது?' - இந்த முதல் வரியிலேயே கர்ணனின் வாழ்வைத் தீர்மானித்த முப்பெரும் விசைகளான துரியன் - திரௌபதி - அர்ஜுனன் மூவரும் வந்து விட்டார்கள்.
'வெய்யோன் மகனே, எரிதலே மாமனிதர்களை உருவாக்குகிறதென்று அறிக! எரியாது எஞ்சுவது தெய்வங்களுக்கு. எரிதலின் ஒளியே இவ்வுலகுக்கு.' - இந்த இறுதி வரி, காலமெல்லாம் அவமதிப்பில், இயலாமையில், இழிவில் எரிந்தெரிந்து மாமனிதனாய் வாழ்ந்த, என்றென்றும் நிலைக்கும் ஒரு விழுமியத்தின் (அதைச் செஞ்சோற்றுக் கடன் என்று என்னால் சுருக்க இயலாது... அதுவல்ல) ஒளியை இவ்வுலகிற்குத் தந்த கர்ணனை மொத்தமாக வரையறுக்கிறது.
கர்ணனின் மொத்த வாழ்வையும் இரு வரிகளில் நிறுத்த இயலுமென்றால் நேற்று வரை நம்பியிருக்க மாட்டேன். ஆனால் அது நிகழ்ந்துவிட்டிருக்கிறது.
அன்புடன்.