Thursday, December 24, 2015

வெய்யோன் எனும் காவியம்:



வெண்முரசின் ஒவ்வொரு நூல்களும் ஒவ்வொரு வகை. அதில் தனித்திருப்பது என்று இது வரை நீலத்தை மட்டுமே கருதினேன். வெய்யோன் அதையும் விஞ்சும் ஒரு காவியமாக மலரும். கமபனைப் பற்றிய பேச்சில் இருந்து கர்ணனின் கதை துவங்கிய தருணமோ என்னவோ, கம்பனின் காவியத் தலைவனுக்கு இணையாகவே இந்த வெய்யோன் வருகிறான். இன்றளவிலும் வெண்முரசில் ஒரு முழு அத்தியாயமும் ஒருவனுக்காக ஒதுக்கப்பட்டதில்லை. அப்படி ஒதுக்கப்பட்டும் இன்னும் இன்னும், மேலும் மேலும் என்று உள்ளம் கூவும் பிறிதோர் நாயகனும் வெண்முரசில் இல்லை. எப்போதுமே அடைமொழிகள் இல்லாமல் கர்ணன் வெண்முரசில் வருவதில்லை. முக்கியமாக அவன் உயரம். அனைத்துத் தருணங்களிலும் ஏதோ ஒரு பாத்திரம் அவன் உயரத்தைக் கண்டு வியக்கும். அதன் பிறகே அவன் பங்களிப்பு அத்தருணங்களில் நமக்குத் தரப்படும். வெய்யோனிலோ உவமை, உவமைக்கு உவமை என கம்பன் ராமனை வர்ணித்தது போல வந்து கொண்டேயிருக்கிறது. 
 
இன்றைய அத்தியாயம், தாழொலிக்கதவுகள் 1 முழுவதையுமே கண்களில் நீர்த் திரையுடன் தான் படித்தேன். இறுதியில் அந்த சூதன் அழுதது போல் அழவேண்டும் என்று தோன்றியது. காரணங்களை விளக்க முடியாத கண்ணீர் தான் எத்துணை இன்பம் தருகிறது. ஆம். உள்ளம் திறந்திருக்கிறது. தாழ் திறக்கையில் ஒலியெழுப்பும் கதவாக, ஒவ்வொரு முறை அவனைப் பற்றிய எண்ணம் தாழ் திறந்து ஒலி எழுப்பி நிறைகிறது. 'தன்னால் மட்டுமே வெல்லப்படுபவன் நிகரற்றவன்' என்ற சூதன் சொல் தான் எத்தனை உண்மை.  தன் நிழல் அல்லாமல் வேறு எது சூரியனை மறைக்கக் கூடும்! சூரிய மைந்தன் தன் சுயத்தால் மட்டுமே வெல்லப்படுபவன் தானே!! அருமையான, உணர்வுப் பூர்வமான அத்தியாயம். நன்றிகள் பல ஜெ.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்