ஆஹா... எதிர்பார்த்தது நடந்தே விட்டது.... ஒளி வந்தது!!! நான் என்று இல்லை, பாரதம் தெரிந்த அனைவருக்குமே பிடித்த ஒரு நாயகன் கர்ணன். அவன் அனுபவித்த துயரங்களால் மட்டுமல்ல, அனுபவிக்காமல் விட்டவற்றைக் கற்பனையானால் நிரப்பி துயர் கொள்ளும் தன்மை கொண்டதாலேயே கர்ணனின் கதை அனைவருக்குள்ளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
அவன் தான் குந்தியின் மைந்தன் என்று தெரிந்த உடன் துரியனிடம் சொல்லியிருக்க வேண்டும் என்றும், அதற்காகவே துரியன் தன் அரியணையை விட்டுத்தந்து, அவன் தம்பியாக இருந்திருப்பான் எனவும், பாரதப் போரே நிகழாது போயிருக்கும் என்றெல்லாம் எண்ணியதுண்டு. எப்போதும் ஒரு அபாரமான மன எழுச்சியைத் தந்து, ஆற்றொண்ணா துயரில் தள்ளும் இவ்வெண்ணம் என்னை.
எப்போதெல்லாம் சூழ்நிலைக் கைதியாக உணர்ந்து, எண்ணியதை, விரும்பியவற்றை இழந்திருக்கிறேனோ அப்போதெல்லாம் கர்ணன் என் நினைவிற்கு வந்துள்ளான். அவன் சூழ்நிலையை உணர்ந்த எவரும் தமது துன்பம் ஒன்றுமே இல்லை என்ற நிலைக்கு எளிதில் வந்து விடலாம்.
காண்டவம் நின்றதில் பெருந்துயர் வந்ததன் முதற்காரணம் காண்டவத்தில் கர்ணனின் கதை வருமென்ற எனது எதிர்பார்ப்பு பொய்த்ததே. இதோ இப்போது நிறைவேறப் போகிறது. ஒவ்வொரு நாவலுக்கும் எதோ ஒரு வகை எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது. நாவல் வளர வளர அந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் தூள் தூளாய் உடைந்து நாவல் முற்றிலும் வேறு ஓர் தளத்தில் கம்பீரமாக எழுந்தும் இருக்கிறது.
பார்க்கலாம், எந்த அன்பில்லாதவனை காய்கிறான் இந்த வெய்யோன் என்று!!!
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.