ஜெ,
வெண்முரசின் பரிணாமங்களில் ஒன்று அர்ஜுனன் துரோணர் மாதிரி ஆவது. அவன் சித்ராங்கதைக்கும் சுபத்திரைக்கும் அம்புவித்தை பயிற்றுவிக்கும் இடங்களை அவனுக்கு துரோணாச்சாரியார் அம்புவித்தை சொல்லிக்கொடுக்கும் இடங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தேன். [நாவல் முடிந்து அடுத்த நாவல் வருவதுவரை இதைச்செய்வோமே என்றுதான்] பல நுட்பங்கள் ஆச்சரியகரமானவை
இருவருமே அம்புவித்தையை ஒரு ஆன்மீகப்பயிற்சியாகவே எண்ணுகிறார்கள். ஆனால் துரோணர் நேரடியாக இயற்கையில் இருந்து அம்புவித்தையைக் கண்டுபிடிக்கிறார். மாறாக அர்ஜுனன் வெளியே பார்ப்பதில்லை, தன் உள்லே இருந்து மட்டுமெ அவன் அம்புவித்தையைக் கற்பிக்கிறான். அதற்கு வெளியே சில உதாரணங்களை கண்டுபிடிக்கிறான்
அக்னிவேசர் அம்புவித்தை சொல்லிக்கொடுக்கும்போது ஆகா என்று தோன்றியது,துரோணர் அம்புவித்தை சொல்லிக்கொடுக்கும்போது இதுக்குமேல் என்ன சொல்லிவிடமுடியும் என்ற எண்ணம் வந்தது. அர்ஜுனன் சொல்லிக்கொடுக்கும்போது அற்புதம் என்று தோன்றியது. மேலுமேலும் வித்தை வளர்ந்துகொண்டேதான் செல்கிறது. ஆசான்கள் மாணவர்கள் மீண்டும் ஆசான்கள்...
சண்முகம்