Tuesday, December 29, 2015

பிறப்பின் காரணமாக சிறுமை செய்யும் பெருங்குற்றம் (வெய்யொன் -4)      எனக்கு மூக்கு பெரிதாக இருக்கிறது என்பதால் நான் மற்றவரை விட உயர்தவன் என நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அந்த அளவுக்கு முட்டாள் தனம் வேறெந்த காரணத்திற்காகவும் தன்னை மற்றவரை விட உயர்ந்தவன் என நினைப்பது. ஒருவன் மற்றவரை விட ஏதாவது ஒரு திறமையில் அதிக தேர்ச்சியுடன் இருக்கலாம். அதற்கு  அவன் மட்டும்தான் காரணம் என அவன் நினைத்துக் கொள்வது வெற்று அகங்காரம்.  அவனுடைய சூழல், வளர்ப்பு, மற்றவர்களின் உதவி, இயற்கை, காலம் என பல கூறுகளின் உதவியோடு தான் ஒருவன் ஒரு திறமையை அடைகிறான்.


     ஆக தன் திறமையின் காரணமாகக் கூட ஒருவன் தன்னை மற்றவரை விட உயர்வாக கருதுதல்  முட்டாள்தனம் எனும்போது, வெறும் பிறப்பின் காரணமாகமட்டும் ஒருவன் மற்றவனைக் காட்டிலும் உயர்ந்தவன் எனக் கருதுவது  மிகக் கேவலமானது. தன்னுடைய கீழ்மையை வெட்கும் அவன்  மனம் இப்படி தன்னை செயற்கையாக உயர்த்திக்கொள்வது ஒருவித உளச்சிக்கல் மட்டுமே. ஆனாலும் இப்படிப்பட்ட மனதினோடு கூடிய பலரை சமூகத்தில் பார்க்கிறோம். தன் வாழ்வில் திருப்தியும் மனச் சாந்தியும் இல்லாததால்தான் ஒருவன் இப்படி தன்னை கருதிக்கொள்கிறான்.


   தான் மட்டும் இப்படி இல்லாமல் ஒரு கூட்டமாக இப்படி மக்களுக்
கிடையில் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்து வாழ்வது  மனிதர்களுக்கு எளிதாகவும் எதிர்ப்பை சமாளிக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக மனிதர்கள், தங்களை மதம், சாதி, இனம், தொழில், என்ற வகையில் தன்னை ஒரு உயர்ந்த  பிரிவாகவும் மற்றவரை தாழ்வாகவும் 
கற்பித்துக்கொள்கின்றனர். பின்னர் அந்த தாழ்த்தப்பட்ட பிரிவினரை தம்மைவிட எந்தவகையிலும் பொருளாதாரத்தில், திறன்களில், பதவியில், அதிகாரத்தில் முன்னேறவிடாமல் முடிந்தவரை தடுக்கப்பார்க்கின்றனர். அப்படியும் அவர்களை மீறி எவனாவது வளர்ந்துவிட்டால் அவன் மேல் வஞ்சமும், பொறாமையும் கொண்டு பொதுவெளியில் ஒன்று கூடி அவனை அவதூறு கற்பித்து தூற்றுகின்றனர். அவனை அற்ப காரணங்களை சொல்லி எள்ளி நகையாடுகிறார்கள். எப்போது அவன் சிறிது சறுக்குவான் எனப் பார்த்துக்கொண்டிருந்து அச்சமயத்தில் அவன்மேல் பாய்ந்து குதறி கிழித்துப்போட வெறியுடன் காத்திருக்கிறார்கள். தன் இனத்தைச் சார்ந்தவனுக்கும் அவனுக்கும் ஏதாவது பிரச்சினை என வரும்போது எவ்வித அறத்தையும் மனதில் கொள்ளாமல் தன் இனத்தைச்சாந்தவனுக்கு ஆதரவளிக்கின்றனர். தன் இனத்தவன் குற்றத்தை சாதுரியமாக மறைத்துக்கொள்கின்றனர். ஆனால் தான் தாழ்த்தும் ஒருவனின் குற்றத்தை நிரூபிக்க அவன் அந்த பிரிவைச் சார்ந்தவன்  என்பதே போதும் வேறு எவ்வித சான்றும் தேவையில்லை என்ற நிலையை எடுக்கின்றனர்.  இப்படிக் கூட்டாக  இந்த இழிச்செயலை செய்வது மனித இனத்தில்மட்டுமே நடக்கிறது.


  ஒரு சமூகமாக மனிதர்களின் இந்தக் குணம் கெட்ட வாடையாக வீசிக்கொண்டிருக்கிறது.  அறிந்தே இதை இக்காலத்திலும் பின்பற்றும் அநீதியாளர்களை, அற்பர்களை, அகம்பாவிகளை நான் புறங்கையால் தள்ளிவிடுகிறேன்.  நான் ஒருவனை என்னைவிட கீழானவன் எனக் கருதுகிறேன் என்றால் இப்படி பிறப்பின் காரணமாக சிலரை கீழாக நினைப்பவனை மட்டுமே. அவர்களிடமிருந்து முற்றிலுமாக  என்னை நான் விலக்கிக்கொள்ளவே விழைகிறேன். அவர்களின் கூட்டோ நட்போ தொடர்போ எனக்கு வேண்டாம் என இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன்.

    நம்மிடமும் இது இருக்கலாம். ஏனென்றால் இந்த சேற்றில் பிறந்து வளர்ந்தவர்கள்தாம் நாம். பொதுவாக நான் இப்படி இல்லை என தன்னை நினைத்துக்கொள்வோம்.  ஆனால் நம்மை அறியாமல் இது நம்மிடம் இருக்கலாம்.  இதை எப்படி அறிவது? நாம் வெறுக்கும், புறக்கணிக்கும் அல்லது விமர்சிக்கும் மனிதர்களை மறூபரிசீலனை செய்யவேண்டும். அவர்கள் வேறு குழுவை சார்ந்தவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே அப்படி செய்கிறோமா? இதைப்போன்ற செயல் செய்யும் நம் குலத்தைச்சார்ந்தவரை இந்தளவுக்கு விமர்சிக்கிறோமா எனப் பார்க்கவேண்டும்.  நம் குலத்தவரின் குற்றத்தை நம்புவதற்கு எந்த அளவுக்கு தயக்கம் காட்டுகிறோம் என்பதையும், மற்றவரின் குற்றம் செய்தார் என்ற செய்தியை எவ்வளவு எளிதாக நம்புகிறோம் என்பதையும் கவனித்துப்பார்க்கவேண்டும். நம் மனதின் ஆழத்தில் ஊடுருவி  இருக்கும் இந்த கொடிய குணத்தை கவனமாக வேருடன் பிடுங்கி எறியவேண்டும்.

    நாங்கள் பிறாரல் தாழ்த்தப்பட்டவர் எனக் கருதப்படுகிறோமா என ஆய்வதற்கு முன் நாம் வேறு பிரிவினரை அப்படி கருதுகிறோமா என கவனிக்க வேண்டும். இன்னமும் ஏதாவது காலாவதியான மத , சமூக விதிகளை காரணம் காட்டிக்கொண்டிருக்காமல் அவற்றை புறந்தள்ளி நம்மை சுத்தப்படுத்திக்கொள்ளாத சமூகம் அழுகி நாறிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அதை சுகந்தம் என்று சொல்லிவரும் ஏமாற்றுக்காரர்களை நான் சமூக அயோக்கியர்கள் என்றே கருதுகிறேன்.

    இன்று கர்ணனை பிறப்பின் காரணமாக அவன் நாட்டு மக்களே தூற்றுவது வெண்முரசில் சொல்லப்பட்டது. இதைக்கேட்டு சூதன்கொள்ளும் அறச்சீற்றத்தில் அவன் தெய்வம் என உயர்ந்து நிற்கிறான். அந்த அறக் கோபத்திற்கு முன் நாமும் தலைவணங்கி நம்மிடம் கொஞ்சமேனும் ஏதாவது ஒரு உருவில் அச்சிறுமை இருக்குமானால் களைந்து  நம்மை சுத்தப்படுத்திக்கொள்வோமாக.

        முடிவற்றவை அனைத்தையும் தங்கள் சிறுவிரல்களால் மட்டுமே எண்ணி எண்ணி அளக்க வேண்டுமென்ற இழிவை இங்குள ஒவ்வொருவர் மேலும் சுமத்திய படைப்புத் தெய்வம் எது? மானுடரே, சிறியோரே, ஒவ்வொரு முறையும் நாம் ஏன் தோற்கிறோம்? ஒவ்வொரு முறையும் பெருந்திரளெனப் பொருளழிந்து நாம் ஏன் இழிவை சூடிக் கொள்கிறோம்?” என்றான் சூதன். அவன் குரல் மூதாதையர் உறங்கும் காட்டிலிருந்து எழுந்த தொல்தெய்வமொன்றின் குரலென அந்தத் தெருநடுவே ஒலித்தது. “தெய்வங்களே! மாறாச்சிறுமையை மானுடம் மீது சுமத்தினீர்கள். அதைப்பார்க்கும் விழிகளை என் முகத்தில் அமைத்தீர்கள். கருணையற்றவர்கள் நீங்கள். சற்றும் கருணையற்றவர்கள்.”     வெய்யொன் -4

தண்டபாணி துரைவேல்