Monday, December 28, 2015

தீக்குள் தேன்.-வெய்யோன்-3



அன்னையை வெட்டியவனும், அன்னையால் வெட்டப்பட்டவனும் குருவும் சீடனாகவும் அமைய யார் அமைத்தது? காலமா? விதியா? கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தும் வாழ்க்கையா?

இணைந்த இருவருக்கும் இடையில் துளைசெய்ய வந்த வண்டு தெய்வத்தின் ஆடல் என்றால் மண்ணில் மனிதன் எத்தனை பெரிய ஆற்றல் நிரம்பியவனாக இருந்தும் என்ன பயன்?

அன்னைக்கு மகளுக்கு மருமகளுக்கு உரியது வலதுத்தொடை. மனைவிக்கு உரியது இடதுத்தொடை. கனவில் கண்ட காலடி அன்னையின் திருவடி  என்று தேடி அலைந்து  கண்டுக்கொண்டபோது கைக்கெட்டியது சிறுமகவு. சிறுமகவை மகளென்று அறிந்தும் இடைத்தொடையில்  அமர வைத்தது எது? ஆணவமா?

அன்னை என்று அறிந்தும் அவள் இடத்தொடையில் விரல்வைக்க   அளர்க்கனை இழுத்துப்போனது காமம் என்றால், மகளென்று அறிந்தும் இடைத்தொடையில் அள்ளி வைக்க இழுத்தது  கர்ணனின் ஆணவம்.
பரசுராமனைச்சுற்றி சுற்றி வந்தும் அவரைக்கடிக்க முடியாத வண்டு, கர்ணனைக்கடித்தது ஆச்சர்யம். கோபத்தைக்கண்டு காமம்கூட தள்ளியே நிற்கிறது, ஆணவத்திற்கு காமமே வலியாகவும் நிற்கிறது.

தாய் எழுதிய எழுத்தை அறிந்தும் பிருகிடம் சொல்லமுடியாத அளர்க்கனும், தாய் யார் என்று அறிந்தும் பரசுராமரிடம் சொல்லமுடியாத கர்ணனும் தீச்சொல் சுமந்து அலைவதைக்காணும்போது மகன்களின் உடல் மாறினாலும் உள்ளங்கள் மாறவில்லை என்பதைக்காண முடிகிறது. மகனாக பிறந்தாலேயே அவர்கள் வாழ்க்கை சாபங்கள் ஆகினவா?

அன்னையையே வெட்டி எறிந்த பரசுராமன் கர்ணன் ஷத்ரியன் என்பதை அறிந்தும் வெட்டி எறியாமல் செறுசினத்துடன் மண்ணல்லி வீசி சபிக்க நினைத்தும் அதை நிகழ்த்தாமல் //ஷத்ரியருக்கு என நீ களத்தில் எழுந்தால் நான் கற்பித்தவை உனக்கு உதவாது போகட்டும்என்றே சொல்லமுடிந்தது. மண்ணை நிலத்திலிட்டுதீராப்புகழ் கொள்க! விண்ணுலகில் வாழ்க!” என்று வாழ்த்தியபடி முகம் திருப்பிக்கொண்டார்.// என்று கூறுமிடத்தில் ஒரு அன்னை என்றே ஆகி நிற்கின்றார். தீக்குள்  எப்படித்தேன்?

தீக்குள் விரலை வைத்தால்
உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!

வானத்து சூரியனுக்குள் தண்ணீர் தாமரையை மலரவைக்கும் கனிவை வைப்பவன் வாழ்க!

அன்புடன் 

ராமராஜன் மாணிக்கவேல்