Thursday, December 31, 2015

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்-வெய்யோன்-6




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

எதுவும் எல்லைத்தாண்டுவதில்லை, எல்லைத்தாண்டினால் எல்லைத்தாண்டியது எதுவும் முன்போல் இருக்கமுடிவதில்லை. தனக்கான எல்லைக்குள்தான் உலகில் உள்ள அனைத்தும் வாழ்க்கை நடத்துகிறது.

வான்விட்டு மனிதனாக வந்த தெய்வங்கள்கூட மனிதன் என்ற எல்லையிலேயே வாழ்ந்து உள்ளன. மனிதனாக வந்ததாலேயே தெய்வங்களையும் ஐயம் அச்சம் பிடித்துக்கொள்வதைப்பார்க்கிறோம். தெய்வங்களும் தனது எல்லையை தாண்டமுடியாமல் தோற்றுப்போகின்றன. பரசுராமன் கதையும், கர்ணன் கதையும் பாடும் சூதன் // “வெல்லற்கரியோர் என்று இப்புவியில் எவருமில்லை. விண்ணிழிந்து மண் நிறைத்த இறைவடிவங்கள் கூட”// என்று பாடுகின்றான்.

வெற்றிப்பெறுதல்  என்பது எதிரியை வெல்வது மட்டும்தான் என்று நினைக்கையில் “தன்னால் மட்டுமே வெல்லப்படுபவன் நிகரற்றவன். தெய்வங்கள் அவனை மட்டும் நோக்கி புன்னகைக்கின்றன” என்று வெற்றியை திருப்பிப்போடுகின்றான்.

எதிரியை வெல்லுதல் என்பது அவன் புறத்தை வெல்லுதல், தன்னை வெல்லுதல் என்பது எதிரியின் அகத்தையும் வெல்பவனுக்கு மட்டுமே சாத்தியம்.

“இன்றுபோய் நாளைவா“ என்றபோதே இராமன் தன்னையும் வென்று இராவணனையும் வென்றுவிடுகிறான். இதற்குபிறகு இராவணன் ராகவனுடன் ஏன் யுத்தம் செய்தான். யுத்தம் செய்து வென்றாலும் அது வெற்றியாக இருந்து இருக்குமா? தோற்றவன் தன் உயிரையும் குலத்தையும் அழித்துக்கொள்ள அன்று மீண்டும் ராமனுடன் யுத்தம் செய்தான். எது வெற்றி? எது தோல்வி? என்பதை அறியாத ஒருவனானல் ஒரு மாபெரும் யுத்தம் நடந்து முடிந்தது இராமயணத்தில்.  

தோற்பதில்லை என்ற ஒற்றைச்சொல்லால் என்னை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் சிவதரேஎன்று இன்று கர்ணன் சொல்லும் வார்த்தைகளை முதலில் தவறாகப்புரிந்துக்கொண்டேன். ராவணன் ராமனை நினைத்துச்சொன்னால் எப்படி இருக்கும் அப்படி புரிந்துக்கொண்டேன். இதே வார்த்தையை மகாத்மா காந்திச்சொன்னால் எப்படி இருக்கும்? கர்ணன் புறத்தை வெல்வதைப்பற்றி இங்கு சொல்லவில்லை. எதிரியின் அகத்தை வெல்வதைப்பற்றிச்சொல்கிறான். எதிரியின் அகத்தை வெல்லும்போதே தன்னை வென்றவன் உருவாகிறான் என்பதை கர்ணன் வாழ்வில் இன்று அறிந்து ஒளிப்பெற்றேன்.

தன்னை வெல்வதற்கும் எதிரின் அகத்தை வெல்வதற்கும் எத்தனைப்பெரிய பொறுமையை கையாளவேண்டி உள்ளது. தந்தையையும், மனைவியையும் ஒரே நாளில் சந்திக்கும் உள்வலி இல்லை என்று கர்ணன் சொன்னபோது அது விளங்கவில்லை. இன்று கர்ணன் வாழ்ந்துக்காட்டும்போது அசர அடிக்கிறீர்கள்.  அதே நேரத்தில் மதுவை தொடமாட்டேன் என்ற மகாத்தமாவின் உள்வலியையும் நினைத்துப்பார்க்கிறேன். ஆனால் கர்ணனுக்கு மனைவி விஷாலினி, காந்திக்கு மனைவி கஸ்தூரி பாய். காந்திக்கு கொடைசெய்த தெய்வம் ஏன் கர்ணனுக்கு கைமடக்கிக்கொண்டது? 
.  
தேவகுமாரன் கல்வாரி மலைக்கு சிலுவைசுமந்துச்சென்று, அதே சிலுவையில் ஆணியால் அறையப்பட்டு   குருதி வடிய வடிய தொங்கும் தருணத்தில் “பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே! இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் மன்னித்துவிடுங்கள்” என்று இவர்களுக்காக பிராத்திப்பான் என்றால் அவன் எதிரி எத்தனை ஆழத்தில் இருளில் இருக்கிறான். அந்த எதிரியைத்தொட, அந்த எதிரியை கைத்தூக்கிவிட அவன் எத்தனை உயரத்தில் ஏறி நின்று உயிர் ஊசலாடியப்படி பிதாவிடம் மன்றாட வேண்டி உள்ளது. அந்த மன்றாட்டு அல்லவா அவர் முன் அவர் எதிரிகள் பிரியமானவர்களாகி மண்டியிட வைக்கிறது. ராஜியத்தில் இடமில்லாதவன் இதயங்களின் ராஜகுமாரனாய் பிறந்துக்கொண்டே இருக்கிறான்.

கர்ணன் விருஷாலியை எத்தனை தாழ்நிலைக்கு சென்று மன்னிக்கிறான். அவன் தாழ்நிலைக்கு செல்லச்செல்ல எத்தனை உயரத்தில் அவளுக்காக சென்று மனதில் மன்றாட்டு நடத்துகிறான்.

எடுத்த எடுப்பிலேயெ விருஷாலினி இருக்கும் இடம் என்ன, கர்ணன் இருக்கும் இடமென்ன என்பதை செவிலிச்சொல்லிவிடுகிறாள். “//உடல்கொதிக்கிறது. தலைநோவுமிகுந்துள்ளது. விழிதிறந்துஒளிநோக்கஇயலவில்லை. உள்ளறைஇருளில்முகம்புதைத்துபடுத்திருக்கிறார்கள்.// விழிதிறந்து ஒளிநோக்க முடியாததுதான் பிரச்சனை. கண்ணோவு கொண்டவனுக்கு சூரியன்மீது கோபம் வரும். நோவுமீது அவன் கோவம் கொள்வதில்லை. பிரியத்தில் சூரியன் அவனை நெருங்க நெருங்க அவன் சூரியனையே வெறுப்பான். விருஷாலினியின் பிரச்சனையும் கண்நோவுதான். இதே வேறு ஒரு கணவனாக இருந்தால் எப்படி புரிந்துக்கொள்வான். அவன் அகம் பார்க்கமாட்டான் உடல் பார்த்து வெட்டி எறிந்து இருப்பான். “பாவிகளை வெறுக்காதீர்கள், பாவங்களை வெறுங்கள்” என்பதுபோல கர்ணன் விருஷாலினியின் பாவத்தை வெறுக்கிறானே தவிர விருஷாலினியை வெறுக்கவில்லை.

விருஷாலினியை அங்கமன்னாக சென்று கர்ணன் பார்ப்பதற்கு எது தடையாக இருக்கமுடியும். அவனை அங்க மன்னாக அவள் பார்க்கிறாள். அவன் அவளை மனைவியாகப் பார்க்கிறான். அரசனுக்கு மனைவியைப் பார்க்க கடமையென ஒன்றுண்டா? கணவனுக்கு மனைவியைப்பார்க்க கடமை இருக்கிறது.  ஒரு மனைவியை கணவன் பார்க்கப்பிரியப்படுகின்றான். ஒரு அன்பு அன்பைப்பார்க்க ஏங்குகின்றது. ஒரு தந்தை தாயைப்பார்க்க ஏங்குகின்றான். ஒரு செவிலியில் அன்னையைப்பார்பவன் இதயத்தை புரிந்துக்கொள்ள முடியாத மனைவி எத்தனை பெரிய இருட்டில் இருக்கிறாள். மனைவிக்கு பெரும் அரண்மனையை தந்தவன் அவளுக்காக எத்தனை சிறிய இருக்கையில்  அமர்ந்து இருகிறான்.

ஈடு இணையற்ற காதலர்களை கண்ட பாரதத்திருநாட்டில் கர்ணன் காதலுக்கு ஈடு இணை இல்லை. அவன் காதலைத் தாங்கும் காவியங்களும் கண்ணீர் விட்டுவிடும். ஷண்முகவேல் இந்த இடத்தை தனது ஓவியத்தை உயிர்பெறவைத்ததை நினைத்து நினைத்து அதிசயிக்கிறேன்.  ஒரு புள்ளியில் ஒரே நேரத்தில் இரண்டு அம்புகள் தைத்து ஆடிக்கொண்டு இருக்கின்றன.

தன்னால் மட்டும் வெல்லப்படுபவன் கர்ணன் என்பதை விளக்க இத்தனை பெரிய அகவிளையாடலை நிகழ்த்தி நெஞ்சில் அறைந்து தடவுகின்றீர்கள்.

எதிரி எப்போதும் ஒரு யுத்தத்தை உருவாக்குகிறான். அந்த யுத்தத்தில் கருவிகளைப்பயன்படுத்தி எதிரியை கீழேத்தள்ள  வெல்ல முயற்சி செய்கிறான். யுத்தம் செய்யாதவன் கருவிகளோடு யுத்தம் செய்வதில்லை. எதிரியோடும் யுத்தம் செய்வதில்லை. எதிர்ப்போடு மட்டும் யுத்தம் செய்கிறான். எதிரி என்று ஒருவன் உலகில் இல்லை என்றே அவன் நினைக்கிறான். தன்னோடு தன்னில் ஒருத்தன் என்றே நினைக்கிறான். யுத்தம் செய்யாதவன் பார்வைக்கு இரண்டாக தெரிந்தாலும் அவன் ஒன்றே ஆன மாதொருபாகன். 

தோற்பதில்லை என்ற ஒற்றைச் சொல்லால் என்னை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் சிவதரே”-என்ற வரியை மீண்டும் திருப்பி வாசிக்கையில் வாழ்க்கையையே இது புரட்டிப்போடுகிறது ஜெ. 

ராமராஜன் மாணிக்கவேல்