Tuesday, December 22, 2015

பொற்கணம்




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

வெய்யோன் தருவதற்காக இதயம் கனிந்த வாழ்த்துக்கள். வெய்யோனுக்காக சொன்னாலும் இது  எங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்துவதற்கு. அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவேண்டும் என்று மனதின் விசைமுனைகளை  திருப்பி இயக்குவதற்கு. வெண்முரசு வழியாக  வாழ்வின் பெரும்வெளி இசையை அகக்கடல் ஆடலை சொற்களாக்கி இதயத்தில் பதியம்போடும் உங்கள் உழைப்புக்கு  நன்றி.

வாழ்க்கையில் எதிர்ப்பார்க்கும் அனைத்தும் பதில் மட்டும்தான். பதில் கிடைத்துவிட்டாலே வாழ்க்கையை முழுதாக வாழ்ந்துவிட்ட நிம்மதி ஏற்படுகிறது. பதில் கொண்ட அனைத்தும் வெளிச்சம் பட்டு ஒளிர்வதுபோலவும், பதில் இல்லா அனைத்தும் இருட்டாகி அச்சுருத்துவதுபோலவும் உள்ளது. பெறவேண்டிய அனைத்திலும் பெரியதாக இருப்பது ஞானம்தான். ஞானம் வந்தால் விடைக்கிடைக்கிறது. ஒளிப்பிறக்கிறது. ஞானம் வருவதற்கு தளைகளை அறுக்கவேண்டும். ஒவ்வொரு கேள்வியும் ஒரு தளையாக தடையாக நிற்கிறது. ஒவ்வொரு தடையும் தளையும் ஒரு கேள்வியாக முளைக்கிறது. தளைகள் இருக்கும்வரை கேள்விகள் இருக்கிறது. கேள்விகள் இருக்கும்வரை மனிதன் எரிந்துக்கொண்டு இருக்கிறான். வெய்யோன் மைந்தனாகிய கர்ணன் வாழ்க்கையை கூரும் நாவல் கேள்வியில் முளைப்பது அர்த்தம் நிறைந்தது. எல்லோர் கேள்விகளும் இறப்பில் தீர்ந்துவிடுகிறது அல்லது மறந்து தீர்த்துக்கட்டப்படுகிறது ஆனால் இறப்புக்கு பின்னாலும் தீர்க்கப்படாத மறக்கமுடியாத கேள்வியை சுமப்பவன் கர்ணன். சூரியன் மகனெனப்பிறந்து ஒளியென திகழ்ந்து உலவிய கர்ணன் வாழ்க்கை கேள்வியால் இருண்டு இருப்பதுதான் படைத்தவன் காட்டும் கவிதைத்தருணமா? அதை பரசுராமன் வாழ்க்கையோடு இணைத்து அர்த்தப்படுத்தும் விதத்தில் அகத்தில் ஒளிவீச வைக்கிறீர்கள்.  பரசுராமனால் வெட்டப்பட்டு சிலையின் விழியென நிலைத்து நின்றுப்பார்க்கும் ரேணுகையும், பெற்றமகனைப்பார்க்கும்போதும் உயிர்க்கொண்டும் சிலையனி் விழியென நின்றுபோகும் குந்தியும் ஒன்றென ஆகி நிற்கும் நிலையில் பரசுராமனும் கர்ணனும் ஒன்றென ஆகி வருவதைக்காட்டும் விதத்தில், இருவேறு கால எல்லையில் வாழும் மனிதர்களின் இதயம் படும் பாடு ஒன்றென அதிர்ந்து அசர அடிக்கிறது. காலம் மட்டும்தான் வாழ்க்கையில் மாறுகிறது. தாயின் மகனுக்கும் இடையில் இன்மையின் பெருநதியை ஓடவைத்த விதியை என்ன என்பது? ஒருவன் வாழ்வில் திட்டமிட்டும் ம்றறொருவன் வாழ்வில் திட்டமிடாமலும் நடக்கம் இந்த சூச்சும நாடகத்தைத்தான் விதி என்கிறோமா? 

//“ஆம், உணர்கிறேன். நீ பேச முடியாது. நம் இரு உலகங்களுக்கு நடுவே பாய்கிறது இன்மையின் பெருநதி. இங்கு ஆற்றுவன முடித்து அச்செயல் அனைத்தையும் கடந்து அங்கு நான் வரும்போது உன்னிடம் சொல்ல என ஒரு சொல் கரந்து இவ்வுள்ளத்தில் வைத்துளேன். அதுவரை நீ என் நிழல். இரவில் என்னைச் சூழும் இருள். என் சொற்களை உண்ணும் ஆழம்.”//

நீந்தும் மீனும், நெளியும் புழுவும், தாவும் மானும், பறக்கும் பறவையும் அவையவைகளுக்கு உள்ள எல்லையில் நிற்கமுடிவதாலேயே அவைகளின் கேள்விகளே பதிலாகவும் அமைந்துவிடுகின்றன. எல்லை இல்லாத மனிதனுக்கு அச்சமும் ஐயமும் எல்லையாக அமைவதாலேயே  கேள்வி கேள்வி என திரைகள் விழுந்து அவன் மூடப்படுகின்றான். அங்கே தொடங்குகின்றது அவனின் எரிதல். எரிதல் மூலமே அவனை சூழ்ந்த இருளை அவனால் விலக்கமுடிகிறது. எரிந்து எரிந்து ஒளியாகி தன்னை வெய்யோன் என ஆக்கிக்கொள்கிறான். அதனால் அவன் உலகம் ஒளிக்கொள்கிறது. அவன் வழங்குகின்றான் எளிய உயிர்களுக்கு  அன்னம், இறகு கொண்டவைக்கு இன்பம், எழுந்து அமைந்தவைக்கு ஞானம்.

எரியாது எஞ்சுவது தெய்வங்களுக்கு என்ற இடத்தில் வந்து  நிற்கும்போது கேள்வி இன்மையின் பூரணம் வந்து நெஞ்சில் நிறைகிறது ஜெ. இந்த மூன்று சொற்றொடர்களை “எரியாது எஞ்சுவது தெய்வங்களுக்கு“ என்பதை வழங்காமலே சென்று இருந்தாலும் இந்த கதையின் அர்த்தம் அற்புதமானதுதான். ஆனால் அந்த மூன்று சொற்கள் அல்லவா பூரணத்தின் மகிமை இங்கு சொல்லிச்செல்கிறது. அந்த சொற்கள் விழுந்த நேரம் பொன் கணம்.  

காலிடைக்குழியில் ஈன்று முலைக்குழியில் அழுத்தி இப்புவியில் வைத்த அன்னையிடம் தொடங்குகின்றது பரசுராமன் கேள்வி. என்ன ஒரு ஆச்சர்யம் கர்ணன் கேள்வியும் அன்னையிடம் இருந்ததான் தோன்றுகின்றது.

கேள்வியின்னையில் இருப்பது எளிதல்ல ஆனால் கேள்வி இல்லை என்று இருப்பது எளிது. எளியவர்கள் கேள்வியில்லை என்று இருந்துவிடுகிறார்கள், மேலோர்கள் கேள்வியின் வழியாகவே கேள்வியின்மைக்கு செல்கிறார்கள். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.