Monday, December 28, 2015

தசையை துளைத்து உள்செல்லும் வண்டு (வெய்யோன் -3)


    இயல்பாக ஒருவர் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு வண்டு கடித்துவிடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வலியில் அவர் அதிர்ச்சியடைகிறார்.    அந்த வலி  இருக்கும் வரை அவரின் இயல்பான நடை மாறிவிடுகிறது.  இப்போது இந்த கோணலான நடைக்கு அந்த வண்டு கடி அல்லவா காரணம். பார்ப்பவர் யாருக்கும் அவர் பெற்ற வண்டுக்கடி தெரியாது. அவர் நடை மாறி விட்டது என்றுமட்டும் தெரியும். புதிதாய் பார்ப்பவர்களுக்கு அவர் விந்தி நடக்கும் அந்த நடையே அவருடைய இயல்பான நடை என எண்ணக்கூடும்.
     வண்டு கடிப்பதோடு மட்டுமல்லாமல் தசையை துளைத்து உட் செல்கிறது என்றால் அப்போது அதன் வலி மேலும் மேலும் கூடுகிறது. கடிபட்டவன் மனநிலையையும் மாற்றுகிறது. அவனுடைய சிந்தையின் பெரும்பகுதி அந்த வலியே ஆக்கிரமிக்கிறது.  தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்க அவனை தூண்டுகிறது.
    அதைப்போல  ஒரு பெரும்துயரம், ஏக்கம், ஆசை,  எதிர்பார்ப்பு, வஞ்சம், ஏமாற்றம்  அல்லது ஒரு கடும் கோபம் ஒரு விஷ வண்டென ஒருவர் மனதினுள் துளைத்து புகுந்துகொள்ளும்போது அவனுடைய இயல்பான மனம் மாறிவிடுகிறது. அப்போது அவன் மனம் கோணலாக சிந்திக்க ஆரம்பிக்கிறது. அப்போது அவன் மற்றவரை  தேவையின்றி காயப்படுத்தி இன்னலுக்குட்படுத்துகிறான். அறவழியிலிருந்து மாறி நடப்பதை சரியென சிந்திக்கிறான். தான் கொண்டிருந்த பெரிய ஆளுமையிலிருந்து சரிகிறான். வெண்முரசு காவியத்தில் எந்தந்த வண்டுகள் எவரவர் உள்ளத்தில் புகுந்து அவர்களை இம்சித்து அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களை மாற்றுகிறது என எண்ணிப்பார்க்கிறேன்,
  சாந்தனு -  கங்கையிடம் இழந்த காதலும் பிள்ளைகளும்
  பீஷ்மர் - காசி மகளிரைக் கடத்தல் போன்ற அவர் மனம் ஒப்பாத அறமற்ற அவரின் செய்கைகள்
  சத்தியவதி-  தன் சந்ததியை வாழவைக்கும் பேராவல்
  விசித்திர வீரியன் -  தீரா நோய்
  வியாசர் - விரும்பாப்  பெண்களை கூடியது 
  அம்பை - அவளின் முதற்காதலன் அவளை கைவிட்டது
  அம்பிகா, அம்பாலிகா -  தன் பிள்ளைகளின் உயர்ச்சி
  திருதராஷ்டிரன் - சிறுவயதில் பார்வையின்மை  பிறகு பிள்ளைப்பாசம்
  காந்தாரி - பிள்ளைப்பாசம்
  பாண்டு - தன் உடலின் பலஹீனம்
  குந்தி - அரசியல் எதிர்பார்ப்பு மற்றும் கர்ணனை கைவிடுதல்
  விதுரன் - குந்தியின் மீது கொண்ட காதல்
  சகுனி - அரசியல் எதிர்பார்ப்பு
  துரோணர் -  துருபதனின் அலட்சியம்
 துருபதன் - துரோணர் செய்த அவமானம்
  தருமன் -அறத்தின் வழிதான் நடத்தல் என்ற அவன் பிடிவாதம்
  பீமன்  -  துரியோதனின் நட்பு முறிவு
 அர்ஜுனன் - போதுமாக கிடைக்காத தாயன்பு
  துரியோதனன் - பீமன் அவனை மிஞ்சுவது
 துச்சாதனன் -  சகோதரப் பாசம்.
  திரௌபதி - பேரரசியாகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு
  கர்ணன் - கைவிட்ட தாய்,
 பரசுராமர் - தாயைக் கொல்லும் நிகழ்வு
  பலராமர் - எப்போதும் காணும் இரண்டாமிடம்
 கண்ணனின் மனைவியர் - கண்ணனுக்கு தானே முதன்மை என்ற நோக்கம்
கண்ணன் - பக்தர்களின் உள்ளத்தை துளைக்கும் ஒரு கருவண்டு இவன். மனமற்ற இவனை எந்தவண்டு துளைக்க முடியும்.
   (கதை வளர வளர இன்னும் புதிய வண்டுகள் தோன்றி பலருடைய மனங்களை துளைக்கலாம்.)