Monday, December 21, 2015

வண்ணங்களின் வழி



இனிய ஜெயம்,

இன்ப அதிர்ச்சி . நேற்றுதான் ஒரு நண்பர் வசம் அம்பை செல்லும் படகை மாநாகமாகி துரத்தும் கங்கையின் ஓவியத்தை காட்டி பேசிக் கொண்டிருந்தேன்.  தனிப்பட்ட முறையில் ஒரு வாசகராக பிறர் யாருக்கும் சேகறமாகாத தனித்துவமான முறையில் வெண்முரசு நண்பர் ஓவியர் ஷண்முகவேல் அகத்தில் கலைச் சேகரம் ஆகிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடே அவரது ஓவியங்கள். ஒரு எல்லையில் அவர் மேல் எனக்கு எழும் பொறாமையை எதைக் கொண்டும் மாற்றி வைத்துவிட முடியாது.

அவர் ஓவியங்களில் உருவாக்கி உலவவிட்ட அரவங்களை மட்டுமே தனியாக நோக்கினால் அது மட்டுமே தனி ஒரு உலகமாக விரிகிறது.  அது போக இயற்க்கை, நகரங்கள், குழந்தை, தாய்மை,தந்தைமை என ஒரு தொட்டு மீட்டிய ஒவ்வொன்றிலும் பல நாள் இரவுகளில் உறங்காமால் கிடந்தது திளைத்திருக்கிறேன்.

தனித்துவமானவை அவரது ஓவியங்களில் துலங்கி வரும் கொலை ஆயுதங்கள். வில், வேல்,குத்துவாள், கதாயுதம் என  ஒவ்வொன்றும் அவற்றின்  தனித்தன்மையும் அடிப்படை குருரமும் விவரிக்கவே இயலா அமானுஷ்யமும் கொண்டு கூர்மையான குளிர் உலோகம் ஒன்றின் தொடுகை போல ஒரு உணர்வை அளிப்பவை. அதிலும் இன்றைய வெய்யோன் நாவலின் முதல் அத்யாத்துக்கான முதல் ஓவியம் இணையற்றது.

“சூரியனின் மைந்தா, இவ்வுலகாளும் விரிகதிர்வேந்தனுக்குரிய தீயூழ் என்னவென்றறிவாயா? அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன. நிழல் கரந்த பொருட்கள் அனைத்தும் அவன் முகம் நோக்கி ஒளி கொள்ளும் விந்தைதான் என்ன? இங்குள அனைத்தையும் ஆக்குபவன் அவனென்றால் இந்நிழல்களையும் ஆக்குபவன் அவனல்லவா?”

நாவலின் இந்த வரிகளை  முற்றிலும் புதிய எல்லையில் நிறுத்தி  புதிய கோணத்தில் இருண்மைகொண்டு  விரிகிறது இன்றைய பரசுராமர் ஓவியம். பரசுராமனின் பின்னால் அஸ்தமன சூரியன்  விரிகதிர் வேந்தனின் தீயூழ், அவனது பின் நிழல் அவன் முன் விஸ்வரூபமாக நிற்கிறது . அந்த எதிரி முன் பரிதியின் ஒளி கூர் முனையில் பட்டுத் தெறிக்கும் மழுவுடன் நிற்கிறான் பரசுராமன். [அந்த சூரியனை உதயமாகக் கொண்டால் முற்றிலும்  வேறு உவகை பிறக்கிறது]. குறிப்பாக எழுத்தால் தொட இயலாத ,தூரியிகையால் மட்டுமே தொட முடிந்த ஒன்று இன்றைய ஓவியத்தில் துலங்கி வந்திருக்கிறது. வியாசனின் பாரதம், வெண் முரசை மாட்டி வைக்கும் முளைக்குச்சி மட்டுமே. இது உங்கள் ராஜாங்கம். அது போல இன்றைய அத்யாத்தில் உங்கள் சொற்களில் உலவும் பரசுராமன், ஷண்முகவேல் அவரது பரசுராமனை மாட்டி வைக்கும் முளைக்குச்சி மட்டுமே. இந்த பரசுராமன் அவரது ராஜாங்கம்.

அது போக சகுனியின் தாயம், கர்ணனின் கவசம் போன்ற வணிக வார இதழ் தொடர்களில் ஷண்முகவேல் உருவாக்கிய பாணி பின்பற்றப்பட்டது அவரது கலை ஆளுமையின் தாக்கம்.   
 
நண்பர்கள் ஷண்முகவேல் மணிகண்டன் கூட்டணிக்கு என்றும் என் வாழ்த்துக்கள்.