Tuesday, September 25, 2018

புதுவை வெண்முரசுக்கூடுகை – 19 (நாள்: 20.09.2018 / வியாழக்கிழமை)


 
அனைவருக்குமென் வணக்கம்

இந்த கூடுகைக்கு சிறப்பு விருந்தினராக நமது குழுமத்தின் தேசிய அடையாளம், முதன்மை வாசகர், சிறுகதை எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர், ஊடக பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், காந்தியத்தின் மீது பற்று கொண்டவர், இரு இணைய இதழ்களின் ஆசிரியர் இவற்றுக்கிடையே ஓர் ஆயுர்வேத மருத்துவருமாக பணிபுரிந்து கொண்டிருக்கும் யாவர்க்குமினிய நமதருமை நண்பர் திரு சுநீல் கிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டது எங்களது வெண்முரசுக் கூடுகையின் மீதான ஆர்வத்தையும் உற்சாகத்தையும்  மேலும் மெருகேற்றி அதிகப்படுத்தித் தூண்டும் செயலாக அமைந்ததென்பது மிகையல்ல. 

மேலும் துபாயிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் ஓவியர் ரமேஷ் சுப்பிரமணியம் நிகழ்வில் பங்கேற்றது எதிர்பாரா ஆனந்தம்.

இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதியான இருள்வேழம் பற்றி நானே தொடங்கிப்பேசும்படியாக அமைந்துவிட்டதில் எக்கச்சக்கமான நடுக்கம் கொண்டிருந்தேன்.  பழகியவர்கள் மத்தியில்தானே என மனம் சமாதானம் சொன்னபோது முன்னமிருந்ததைவிட நடுக்கம் ஏனோ இருமடங்காகியது.  நல்லவேளை காலத்தின் பெருங்கருணையாக ஒரு சிறிய சிலபஸ் தான் அளிக்கப்பட்டிருந்தது.  இருந்தாலும் இந்தக் குருவித்தலைக்கு அதுவே பனங்காய்தான்.


இருள்வேழம் எனும் இந்தப் பகுதியை கூடுகையின் பொருட்டு மீண்டும் வாசித்து முடித்தபோது சட்டென்று என் நினைவுக்கு வந்தது TRUTH HAS MANY FACES என்ற புகழ்மிக்க வரியை சாராம்சமாக கொண்ட அனைவருக்கும் பரிச்சயமான பள்ளிநாட்களில் கேட்டறிந்த ஒரு நீதிபோதனைக் கதைதான். 

முன்னொரு காலத்தில் ஒரு வணிகன் வெளியூரில் இருந்து ஒரு யானையை வாங்கிக்கொண்டு அந்தியில் வீடு வந்து சேர்கிறான்.  அது வரையில் அந்த ஊரில் உள்ள ஒருவர் கூட யானை என்ற ஒரு விலங்கைப் பற்றி அறிந்திருக்கவில்லை.  எனவே மிகுந்த ஆர்வத்தோடு அந்த விலங்கு எப்படி இருக்கும் என்பதை உடனே கண்டுவிட வேண்டும் என்பதற்காக அந்த ஊரில் இருக்கக்கூடிய மற்ற வணிகர்கள் ஒரு நாலைந்து பேர்கள் ஒன்று சேர்ந்து அவன் வீட்டுக் கொட்டிலில் இருட்டில் நின்றிருக்கும் அந்த யானையைத் தொட்டுப் பார்த்து தங்கள் கைகளின் மூலம் யானை எப்படிப்பட்டது என்பதை உணர முயல்கிறார்கள். 

ஒவ்வொருவரும் அதன் வெவ்வேறு பாகங்களைத் தொட்டுத் தடவிப் பார்த்து தங்கள் அனுபவத்தின் மூலமாக யானை இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சிலர் தத்தமது அறிவைக்கொண்டும் கற்பனையைக் கொண்டும் விருப்பத்தைக் கொண்டும் முடிவு செய்து வர்ணிக்கிறார்கள். 

இதில் ஒருவரது தனிப்பட்ட அனுபவம் அவரளவில் உண்மையாக இருந்தாலும்.. முழுமையான உண்மையை உணர்த்த இயலாது என்பதையே இக்கதை சுட்டுகிறது.  ஏனெனில் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஒருவர் எடுக்கும் நிலைப்பாடு பிறர் தரப்பு பார்வைகளையும் உண்மையின் பன்முகத்தன்மையினையும் கணக்கிலெடுக்கத் தவறிவிடுகிறது.


இந்த இருட்டில் நின்ற யானை போலத்தான் காந்தாரி பெற்றெடுத்த வேழக்கருவான துரியோதனனை நான் பார்க்கிறேன் எனத் தொடங்கினேன்.

அச்சம் பேரழிவு வஞ்சம் பொறாமை அரண் பாசம் பெருமிதம் என்று அஸ்தினபுரியின் வெகுமக்கள், அரசியர்கள், சகுனி, திருதராஷ்டிரன், காந்தாரி தீர்க்கசியாமர் ஆகிய அனைவரின் மத்தியில் நிலவும்  துரியனின் பிறப்புப்பற்றிய அனுமானங்களையும் அபிப்ராயங்களையும் மீறி அவனது முழுமுதலாளுமை எவராலும் உணர்ந்து கொள்ளப்படாது எஞ்சி நிற்பதாகவே கருதுகிறேன் என்றேன்.  வேண்டுமானால் காந்தாரியின் எண்ணமான இந்த வரியையே நானும் உடன் மொழிகிறேன்.. துரியன் ஒட்டுமொத்த மானுடதுக்காகவும் பிரம்மம் ஆணையிட்ட மீறலை தான் ஏற்று நடத்துபவன்.. என்று வாதத்தை முன்வைத்தபோதே இதுவொரு தீவிர துரியோதனாதிப் பார்வை என்ற முத்திரை அனைவராலும் என் மீது குத்தப்பட்டது.  அதை மறுப்பதற்கு மனமின்றி மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்.      

மயிலாடுதுறை பிரபுவின் வரிகளில்..

கம்பராமாயணத்தில் கம்பன் யானையைக் குறிப்பிடும் போது ‘’மத மா கரி’’ என்கிறான். ஜெயமோகன் வெண்முரசில் ’’இருள்வேழம்’’என்கிறார். கருமையான இருளில் நின்றிருக்கும் யானை. கருமையான இருளிலிருந்து நகர்ந்து கொண்டிருக்கும் யானை. கருமையான இருளாய் விரைந்து வரும் யானை. காந்தாரி தன் கருவை வயிற்றில் சுமக்கும் காலம் நீண்டு கொண்டே போகிறது. காந்தார இளவரசிகளாலும் அம்பிகையாலும் நிகழ்வது என்ன என்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை. அரச கொட்டிலிலிருந்து சில பிடிகள் காந்தாரி அரண்மனைக்கு வெளியே நின்று அவ்வப்போது பிளிறிக் கொண்டிருக்கின்றன. கர்ப்ப காலம் இருபத்து இரண்டு மாதங்களாகிறது. அவளது ஈற்றரையின் சாளரங்களுக்கு வெளியே காகங்கள் முட்டி மோதுகின்றன. அஸ்தினபுரியிலிருக்கும் ஏரிக்கு மடைவாயிலின் வழியே நரிகள் நுழைந்து பெரும் ஊளையிடுகின்றன. இளவரசன் பிறக்கப் போவது நகர மக்களிடம் பேரச்சத்தை ஏற்படுத்துகிறது. சகுனி பாலைவனத்தின் இளவரசன் இவ்வாறுதான் பிறக்க இயலும் என எண்ணுகிறான். அகாபில நரி கலியால் நோக்கப்பட்டு தன் கூட்டத்துடன் நகருள் நுழைந்த தருணத்தையும்  சத்யவதியை சுயோதனன் காண்பதிலும் தீர்க்க சியாமர் சுயோதனன் தன்னைக் காண்பதை உணரும் அச்சத்திலும் இருக்கும் ஒற்றுமை வாசகனுக்குத் திகைப்பூட்டுகிறது. முதுநாகினி சுயோதனனை நாகங்களின் தலைவன் என உரைத்து விட்டு செல்கிறாள். நாகினி சொற்களால் உந்தப்பட்ட காந்தாரி தன் மகவை தன் விழிக்கட்டை நீக்கிக் காண்கிறாள். திருதராஷ்டிரன் மகன் மீதான பாசத்தை உணரும் இடம் புனைவுரீதியில் உச்சமானது. எப்படி ஒரு குழந்தை தீமையின் வடிவாக முடியும்அது செய்த பாவம் என்னஎன்று அவன் எண்ணும் போது தன் முழு ஆற்றலாலும் அதனைக் காக்க உறுதி கொள்கிறான். சார்வாக முனிவர் துரியனின் பிறப்பு நிகழ்த்தப்போகும் அழிவு குறித்து விதுரனை எச்சரிக்கிறார். கலி கண் திறக்கும் கணத்தில் நிகழும் துரியோதனனின் பிறப்பை திகைப்பூட்டும் விதத்தில் முன்வைக்கிறது ‘’இருள்வேழம்’’.

இருளில் வேழம் என்றே பேசி வருகிறோம் அந்த இருளே வேழம் என்று யோசித்துப் பார்த்தால் அதன் பிரம்மாண்டம் திகைக்கச் செய்யும் என்ற சுநீலின் கோணம் அனைவரையும் விழி மலைக்கச் செய்தது.

கலியின் பிறப்பு நிகழ்ந்தவுடன் ஏற்பட்ட முதல் பலியான தீர்க்கசியாமரின் இறப்பு குறித்தும், சார்வாக ஞானத்தை நிலை நிறுத்தும் பொருட்டு நிகழும் சார்வாகரின் பிரவேசம் பற்றியும் முதுநாகினி வந்து காந்தாரியிடம் மைந்தனுக்கு வழங்கிச் செல்லும் ஆசியுடன் கூடிய செய்தி பற்றியும் கடலூர் சீனு பேசியது ஒரு பெரிய திறப்பாக அமைந்தது.    

கூடுகையின் முடிவில் நமது சுநீல் கிருஷ்ணன் தனது அம்புப்படுக்கை நூலுக்காக யுவபுரஸ்கார் விருது வென்றதையொட்டி எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு எங்களது அன்பின் வெளிப்பாடாக ஒரு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.  அவர் அந்த தொகுப்பிலுள்ள சிறுகதைகள் பற்றிய ஒரு சுருக்கமான தனது எழுத்தானுபவத்தை பகிர்ந்து கொண்டார்.  மனநிறைவான கூடுகையாக அமைந்திருந்தது.

மிக்க அன்புடன்
மணிமாறன்.