அன்பின் ஜெ,
எங்கள் ஊர் கடலாடியில் பர்வத மலை எனும் மலை உண்டு (வழக்கம் போல இதுவும் அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வரும் போது அதிலிருந்து விழுந்த ஒரு துளி தான்). அந்த மலை மீது ஏற கடந்த வருடம் வரை என் தந்தை என்னை அனுமதித்ததில்லை. எனக்கு வந்த பெரும்பாலான கனவுகள் நான் அந்த மலை மீது ஏறுவது தான். அதுபோலவே எனக்கு அதிகமாக வந்த அடுத்த கனவு உங்களை சந்திப்பதுதான். எப்போதுமே உங்களை ஏதோ ஒரு வளைகுடா நாட்டின் விமான நிலையத்தில் தான் சந்திக்கிறேன்.
இவ்வருட விடுப்பில் ஈரோடு வெண்முரசு வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். நான் கடைசி சமயத்தில் புதுவை திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களிடம் ஈரோடு திரு. கிருஷ்ணனின் தொடர்பு எண்ணைப் பெற்று கூட்டத்தில் கலந்து கொள்ள பதிந்து கொண்டேன்.
25 ம் தேதி காலை ரயில் நிலையத்தில் திரு. கிருஷ்ணன் அவர்களும் திரு.சந்திரசேகர் அவர்களும் என்னையும் நண்பர்களையும் அழைத்து சென்றனர். அப்போது முதல், இரண்டு நாட்களும் நான் சஞ்சரித்த மனநிலை முற்றிலும் வேறானது. அந்த மனநிலையை இதற்கு முன்னர் குழுவுடன் மங்களூர் சுற்றி உள்ள மலையேற்ற நிகழ்வுகளில் தான் அடைந்துள்ளேன். அது ஒரே நோக்கத்துடன் கூடும்போது ஏற்படும் நேர் மனநிலை என உணர்ந்து கொண்டேன்.
முதல் நாள் அமர்வுகள் சிறப்பாக நடந்தது. திரு.மது, திரு.பாரி, திரு.ராகவ், திரு.ரகு, திரு.ராஜமாணிக்கம் இவர்களின் வாசிப்புக் கோணமும், மட்டுறுத்துனராக திரு. கிருஷ்ணன் அவர்களின் கோணமும் வெண்முரசை இதுவரை அறிந்திராத வீச்சில் புரிந்து கொள்ள உதவியது. வெண்முரசின் வாசக இடைவெளியை நிரப்புவதாக இருந்தது. இதுவரை தளத்தில் வெறும் பெயர்களாகவும் புகைப்படங்களாகவும் அறிமுகமானவர்களை நேரில் கண்டுஉரையாடியது, ஆளுமைகளுடனும், உருவாகி வரும் ஆளுமைகளுடனும் அமர்ந்து, பேசி, உண்டு, உறங்கியது பரவசமாக இருந்தது.
மறு நாள் காலை நடை முடித்து வரும்போது நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள். . அன்றைய திரு.அந்தியூர் மணி, திரு.தாமரைக்கண்ணன், திரு.திருமலைநாதன் இவர்களின் அமர்வும் பின்னர் உங்களின் சிறப்பு அமர்வும், கேள்வி பதில் பகுதிகளிலும் இருந்து நான் உணர்ந்து கொண்ட ஒன்று
யாதெனில், இளநாகன் கண்டடைந்த அஸ்தினாபுரி போல நான் காணும் வெண்முரசு ஒரு அடுக்கு தான், அதற்கு மேலும், கீழும் என வெண்முரசிலும் பல அடுக்குகள் உண்டு. அவைகளை அடைய இன்னும் தீவிரமாகவும், விழிப்புடனும் முயல்கிறேன்.அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
கடந்த வருடம் விடுப்பில் நான் பர்வதமலை ஏறி இறங்கினேன். அதன் பிறகு அந்த மலையேறும் கனவு வருவதில்லை. ஆனால் ஈரோடு சந்திப்பின் பின்னர் தங்களை சந்திப்பதாக வரும் கனவு இன்னும் அதிகமாகி விட்டது.
கணேசமூர்த்தி
கத்தார்
குறிப்பு: தங்களின் நினைவுகூறலுக்காக இக்கடிதத்துடன் புகைப்படத்தை இணைத்துள்ளேன். நன்றி.