அர்ஜுனனும் பீஷ்மரும் பொருதும் இந்த இரண்டாவது நாள் யுத்தத்தின் ஒத்திசைவும், அது குலையும் தருணத்தையும் குறித்த பகுதி அபாரமான ஒன்று. யார் முதலில் சலிப்புறுவார் என்ற விளையாட்டு இது என எண்ணுகிறான் சுஜயன். இளையோரே சலிப்படையவும் கூடும் எனவும் எண்ணத் தலைப்படுகிறான். அவனும் இளையவன் அல்லவா!!! உண்மையில் அங்கு நிகழ்வது தேர்ந்த இரு மல்லர்கள் நிகழ்த்தும் மல்யுத்தம் போன்ற ஒன்றே. யுக்தி, அனுபவம், ஆற்றல் அனைத்திலும் சமமானவர்கள். அத்தகைய மல்யுத்தப் பிடி என்பது நுட்பங்களுக்கான ஒரு தேடல் மட்டுமே. அங்கு வெற்றி தோல்வி போன்ற இருமைகள் பொருளற்றவை ஆகின்றன. அர்ஜுனனும் பீஷ்மரும் அத்தகையதோர் தேடலிலேயே இருக்கின்றனர். போரில் வெளிப்படும் பீஷ்மரின் புலன்கள் ஒரு விரிசலுக்காக கூர்ந்திருக்க, ஒரு கணத்தில் சுஜயன் மீது செலுத்திய அம்பு விடுபட்ட கணத்தில், அது காறும் தன்னைக் கட்டியிருந்த ஒரு சரடு அவிழ்ந்ததை அர்ஜுனன் ஆழம் அறிந்து துவண்டு, மீண்ட அக்கணத்தின் கோடியில் ஒரு காலத்துளி அளித்த இடைவெளியில் அவனது கவசத்தைப் பிளக்கிறார் பிதாமகர். இதையே
“ஒரு துளி, துளியின் துளி, கணப்பிசிறு, அணுக்காலம். அவர்கள் அதை உணரும் வரை அதுவே நிகழும். அக்கணம் நிகழ்ந்தால் ஒருவரில் மற்றவர் மட்டுமே அறியும் விரிசல் ஒன்று திறக்க அம்பு அங்கே தைக்கும். ஓர் அம்பு அதன் வால் சூடிய சிறகொன்றின் திரும்பலால் அணுவிடை திசை பெயரக்கூடும். அணுவில் ஆயிரத்திலொன்று, கணத்துளியில் கோடியிலொன்று எக்கணமும் நிகழக்கூடும்.”
என்கிறது திசை தேர் வெள்ளம். ஆம், சுஜயன் வீழ்ந்த கணமே அர்ஜுனன் மீது அம்பு பாய்ந்த கணமும். உண்மையில் அன்றைய போரில் அர்ஜுனன் தன்னைத் தான் கடக்கத் தேர்ந்தெடுத்த இரையே சுஜயன் தான். எனவே தான் அவனை போர் துவங்கும் முன்பே கண்டு விடுகிறான். போர் முழுமையும் அவன் தன் முழுத் திறனால் சென்று கொண்டிருந்த தருணம் என்பதே, தான் மடியிலேற்றிக் கொஞ்சிய ஒரே கௌரவ குமாரனை, தன் காண்டீபம் கண்டு தன்னகங்காரம் உணர்ந்த, தன் கதைகள் கேட்டு அச்சம் விட வந்து, தான் கண்டுணர்ந்த அருக நெறியான வீரத்தின் உச்சமெனத் தான் கண்டுகொண்ட கொல்லாமையின் திறமுணர்ந்து வில்லெடுத்த அப்பாலகனை வீழ்த்துவது தான். அதுவே அவன் முந்தைய இரவு அம்பைக்கும், பிற அன்னையருக்கும் அவன் தன் முழுத் திறனோடும் போரிடுவேன் எனக் கூறிய வார்த்தைகளுக்குப் பொருளாகும். இப்போது பாசறை மீளும் பார்த்தன் உற்றோர் என்னும் இறுதித்தளையையும் கடந்தவன். பீஷ்மரிலிருந்து எழுந்து வந்து போரிடும்,போர் மட்டுமே திறன் என்று கொண்ட ஒரு பற்றற்றவனை நோக்கிய உருமாற்றத்தில் அவன் நகர்ந்து சென்ற பேரதிகத் தூரம் சுஜயனின் வீழ்ச்சி.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்