Wednesday, September 26, 2018

கர்ணனின் கேள்விகள் - இமைக்கணம்
கர்ணனின் கேள்விகள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை. வேத முடிபு என்றும் தத்துவ தரிசனங்கள் என்றும் தவ முனிவர்கள் கூறுவது யாருக்காக எதற்காக சாமானியன் இதனால் தன் துயரை களைய முடியுமா? கர்ணன் தன் சொந்த வாழ்விலிருந்தே அதற்கான காரணங்களை கண்டடைகிறான். குலத்தால் இழிந்தவனாக கருதப்படுபவன் அதிலிருந்து வெளியேற முடியுமா சிறுமைகளை ஒழித்து தன் சுய மரியாதையை பெற முடியுமா? நம் காலத்திற்கான கேள்விகள் இவை. ஒரு உளக் குமுறல் போன்றே இதைச் சொல்லிவிட்டு இளைய யாதவரிடம் விடைப் பெற்று கிளம்புகிறான் . உடன்குருதியினரை கொல்வது குறித்தான தயக்கம் இங்கே கர்ணனுக்கே அதிகம் பொருந்துகிறது. இங்கே கர்ணனுக்கு அவனுடைய நிகர் வாழ்க்கை காட்டப்படுகிறது. வண்ணக்கடலில் சதசிருங்கத்திலிருந்து குந்தி வரும் வழியில் அவள் கர்ணனை துறப்பது ஒரு மிக முக்கிய திருப்புமுனை. அவ்வாறில்லாமல் அவர் ஏற்றிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது இங்கே சொல்லப்படுகிறது. இந்த நிகர் வாழ்வில் குறிப்பிடத்தக்கது அவன் மட்டுமே திரௌபதியை மணக்கிறான் அவர்களுக்கு மட்டுமே ஐந்து குழந்தைகள் பிறக்கின்றன. திரௌபதியின் உளம் கவர்ந்தவன் என்ற முறையில் மற்ற ஐவரும் அவளுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. மேலும் அவர்களை மணப்பதற்கான அரசியல் காரணங்கள் இந்த நிகர் வாழ்வில் இல்லை. இந்த வாழ்வில் கர்ணன் வலி தவிர எதையும் அறியாதவன் ஆனால் நிகர் வாழ்வில் வலி துயர் போன்ற எதையும் அறியாத ஒரு ஒற்றைப்படையான நேர்வாழ்வை பெறுகிறான். நன்மையை சமன் படுத்தும் தீமை எதுவும் அதில் நிகழவில்லை. ஆனால் அதற்கு மாறாக அவன் விண்புகுந்தபின் அவன் கொடி வழியினர் யாரும் நிலைத்த பூசலற்ற ஆட்சியை வழங்கவில்லை. அவர்கள் கொண்ட வஞ்சத்தின் காரணமாக தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் கொலைபாதகங்களைப் புரிகிறார்கள். வசுஷேணனின் பெயர் அந்த பெரும் குரு வம்ச நிரையில் எந்தவித முக்கியத்துவமும் இன்றி காலப்போக்கில் மறைகிறது. 

எதிர்விசையற்ற வாழ்க்கை மேலோட்டமாக பார்த்தால் வரம் போல தெரியலாம் ஆனால் அடிப்படையில் அது கொடியது. மரணமில்லா வாழ்வு எத்தகைய கொடியது என்பதை இதற்கு முன் தியானிகன் கதையில் பார்த்தோம் அதனுடன் வசுஷேணனின் இந்த வாழ்வை ஒப்பிடலாம். கர்ண வம்சத்தில் கடைசியாக எஞ்சிய க்ஷேமகனின் தாய் செளரவை மணமாவதற்கு முன்பு ஒரு முனிவரிடம் பெற்ற மகன் தான் விஸ்ரவன். அவனைக் காட்டிற்கு எடுத்துச் சென்று கொல்லுமாறு சேடியிடம் கூறுகிறாள். ஆனால் சேடி ஒரு இசைச்சூதரிடம் அவனை விட்டுவிடுகிறாள். வளர்ந்து பெரியவனாகும் விஸ்ரவன் தன் பிறப்பைக் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி அறிகிறான். தாயின் அருகில் ஒரு முறையாவது இருந்தால் போதுமென அவளிடம் போகிறான். ஆனால் செளரவை முற்றாக நஞ்சு கொண்டவளாகவே இருப்பதை அறிந்து கொதிக்கும் நெஞ்சத்துடன் அலைந்து திரிந்து மயங்கிய நிலையில் நாகர்களால் மீட்கப்படுகிறான். நாகர்களே வியக்கும் அளவிற்கு தன்னுள் புறக்கணிக்கப்பட்டவன் என்னும் நஞ்சை சுமந்து திரிகிறான். வசுஷேணனின் கடைசி கொடிவழியனான க்ஷேமகனையும் கொன்று ஆட்சியை கைபற்றுகிறான். இந்த அகக்காட்சி கர்ணனை சுக்குநூறாக உடைக்கிறது

அனுபவம் மற்றும் புரிதல் இரண்டையும் அறிதலுக்கான கருவியாக முன் வைக்கிறார் இளைய யாதவர். முதலில் ஒரு நிகர் வாழ்க்கை காட்டப்படுகிறது பின்னர் அதற்கு நேர் எதிரான ஒரு வாழ்க்கை தெரிவை கர்ணனிடமே விட்டு விடுகிறார். கர்ணன் இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறான். உடன் பிறந்தாரை கொல்லும் நிலை ஏற்படினும் அவனே கூட களம் பட்டு மைந்தர்கள் உட்பட அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்படினும் அவன் அதையே ஏற்கிறான்.

இறுதியில் அவன் பெரும் அனுபவங்களை ஞானமாக முன்வைக்கிறார் கிருஷ்ணர். அவன் இழிவுகள் அனைத்தும் வாய்ப்பாக பயன் படுத்தி மேன்மை அடையத் தான். சாமானிய தளத்தில் உள்ள உண்மைக்கு விசேஷ தளத்தில் தீர்வு அமையாது. கர்ணன் குழம்பித் தேடுவது அதைத்தான். எல்லைக்குட்பட்டு வகுக்கப்பட்ட களத்தில் அவன் அந்த எல்லைகளை ஏற்று ஆம் முடியும் அதில் வெல்லவும் கூடும் // உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!//

புறக்கணிக்கப்பட்டவனாக தன்னிரக்கம் கொண்டு பெரும் வலிகளை சுமந்து வாழும் கர்ணன் அதற்கான காரணத்தையும் தீர்வையும் சிறப்பு தளத்தில் தத்துவ தரிசனங்களில் தேடுவதை விடுத்து சாதாரண தளத்திலேயே அவன் செயலூக்கம் கொண்டவனாகும் போது அவன் வாழ்வு முழுமைப் பெறுகிறது.. அனுபவம் வாயிலாகவும் புத்திபூர்வமான புரிதலின் வழியாகவும் இளைய யாதவர் சுட்டியதைப் பெற்று விடை பெறுகிறான் ‌கர்ணன்.

சிவராம் ஹரி