Monday, September 24, 2018

மண்டலா





திசைதேர்வெள்ளம் படித்துக்கொண்டிருக்கிறேன். போர் நிகழ்வுகள் ஒரு கதார்சிஸ் தான். திபெத்திய துறவிகள் வண்ணம் கலந்த மண்ணை வைத்து மண்டலா என்று ஒரு கோலம் போன்ற வடிவை பல நாட்களுக்கு பொறுமையாக சடங்கு போல் உருவாக்குகிறார்கள் என்று அறிந்திருப்பீர்கள். முடிந்தவுடன் அதே சடங்கு மனப்பான்மையுடன் அந்த கோலத்தை அழிக்கிறார்கள், மண்ணை திரட்டி ஓடும் நீரில் கரைக்கிறார்கள் இல்லையா? போரில் ஒவ்வொருவராக, ஒவ்வொரு பேரரசாக சரியும் போது மாபெரும் கோலம் மெல்ல ஒரு சடங்கின் பாணியில் அழிபடும் உணர்வு உருவாகிறது. 

இன்றைய அத்தியாயத்தில் காண்டீபம் என்பது இருப்பற்ற ஒன்றாக ஒவ்வொரு வில்லாளன் நெஞ்சில் கொண்டுள்ள ஒரு உருவமாக வரும் இடம் அற்புதம். இசை மேதை பாக்கின் கல்லறையை பார்த்த அன்று, எவ்வளவு பெரிய கலைஞன் என்றாலும் வரலாற்றில் நின்ற உருவம் என்றாலும் இவ்வளவு தானா என்று ஒரு வெறுமை உள்ளத்தை நிறைத்தது. ஆனால் மறுமுனையில் அவர் படைத்த இசையை வரிசை வரிசையாக வந்து மக்கள் வாசித்துச்செல்லும் காட்சி அமரத்துவத்தையே எனக்கு உணர்த்தியது. அது பாக்கின் அமரத்துவம் அல்ல, இசையின், கலையின், கலையை படைக்கும் ஆற்றலின் அமரத்துவமான நதி. எந்த தனி மனிதனும் அந்த நதியில் இணைவதால் அமரத்துவத்தை தனக்கு சூட்டிக்கொள்வதில்லை. மாறாக அமரத்துவத்தின் தரிசனத்தை கண்டு அவன் தன்னை அதில் கரைத்துக்கொள்கிறான். அமரத்துவமே நிலைக்கிறது. காண்டீபமும் அது தான்.

நன்றி,
எஸ்


S


அன்புள்ள எஸ்

மண்டலா போன்ற சடங்கு கேரளத்திலும் உண்டு. களம்வரைத்துபாட்டு என்று பெயர். புள்ளுவர்கள் ஒர் இரவு முழுக்க அமர்ந்து பொடி போட்டு வரையும் மாபெரும் ஓவியத்தை இறுதியில் சன்னதம் வந்து கூந்தலாலும் கமுகுப்பூவாலும் வீசி அழிப்பார்கள்

ஜெ