Tuesday, September 11, 2018

வெண்முரசு ஒரு பயணம்



அன்புள்ள  ஆசானுக்கு , 

       நலம்  தானே,  நானும் நலமே. 
வெண்முரசும்   நீங்களும்  எனக்கு  அறிமுகமாகி ஆகி  இரண்டு வருடங்கள் ஆகின்றன.

மகாபாரதம்  மேல் எனக்கு என்றும் ஒரு  பெரும்  ஈர்ப்பு  இருந்துக்கொண்டே  இருந்தது. அதன் அனைத்து கதைகளையும் , அனைத்து  கதாமாந்தர்களையும்  படித்து  தெரிந்து  கொள்ள  வேண்டும்  என்று  அங்கு அங்கு  கிடைக்கும்  புத்தகங்கள் , சிறு கதைகள் வழியாக  பாரதத்தை  படித்துக்கொண்டே  சென்றவன்  நான். முதலில்  உங்களை எனக்கு அறிமுகம்  செய்த  வானவன் , வல்லபி  சகோதரிகளுக்கு  என்றும் கடன்பட்டுள்ளேன். அவர்கள் முலமாக  இலக்கியமும்  வெண்முரசும்  அறிமுகம்  ஆகியது. 
2016  ஆல்  வெண்முரசு  படிக்க  தொடங்கினேன். முதற்கனல்  படிக்க  தொடங்கிய  அன்றே  முடிவு  செய்து  விட்டேன்  இது தான் நான் தேடியது என்று . 

   நீண்ட  நாட்கள் விடுமுறை  கிட்டும் போது  முழூ நாவலையும்  படத்துக்கொண்டு  இருந்தேன் . பின்  உங்கள்  வேகத்திற்கு  ஈடு  கொடுக்க  முடியாமல் நீர்க்கோலத்தில் இருந்து  தினம் வாசிக்க  தொடங்கிவிட்டேன். நீண்ட இடைவேளை கிடைக்கும்  போது  நாவல்களை வரிசையாக    வாசிப்பேன் . இன்னும் மாமலர் தான் படிக்காமல்  இருந்தது , அதுவும் நேற்றுடன்  வாசித்துமுடித்தேன். வெண்முரசின் அனைத்து  நாவல்களையும்  வாசித்தேன் என்ற ஒரு மன நிறைவை  நேற்று அடைந்தேன்.

      கடைசியாக  கிராதம்  வாசித்த பின்  அருணாச்சலம்  மகாராஜன்  அவர்களின்  கட்டுரையை  படித்தது  ஒரு மாபெரும் திறப்பு  புதிய ஒரு பார்வையில்  கிராதத்தை  புரிய வைத்தது. பின்  ஈரோடு கூடுகையில்  கூடுகையில்   நண்பர்களின் கட்டுரைகள் அனைத்தும்  புதிய புதிய பார்வையை தந்தது . 

   மாமலரை  ஐந்து நாட்களில்  வாசித்து  முடித்தேன் . தர்மன், அர்ஜுனன்  இவர்களை தொடர்ந்து  பீமன் மேற்கொள்ளும்  பயணமாக  அமைகிறது. ஆனால் அவர்கள் தங்கள் எல்லையை  கடக்க ,  தங்களுக்காக  ஆன ஒரு பயணத்தை  அமைத்துக்கொண்ட  போது பீமன்  காதலுக்காக ,பிறருக்காக  தன் பயணத்தை அமைத்துக்கொள்கிறான். காதல் நிரம்பியவனின்  பயணம் . மெய்மையை  அவன்  அடைய  தன் மூதாதையரின் கதைகளின் வழியே  செல்கிறான். அக்காலகட்டத்தில் வாழ்ந்து தன் மெய்மையை உணர்கிறான். ஆனால் அதில் அவன் இறுதியை அடைய மறுத்து  திரும்புகிறான்.


ஊர்வசி , ஆசோகசுந்தரி,தேவயானி,சர்மிஷ்டை, என்று  தன் மூதாதையரின் நிரை  வழியே  பெண்மையும், காதலையும் , காமத்தையும் , தாய்மையும்  அதன் வழி மெய்மையின் எல்லை வரை சென்று திரும்புகிறான்.
எல்லையற்ற  காதலை  ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று அடைகிறான்.தன் உடன் பிறந்தாராகவும்  தன்  மூதாதையராகவும்  நின்று ஒவ்வொரு பெண்ணின் காதலையும்  உணர்கிறான். இறுதியில் அவன் கல்யாண சௌந்திகத்தையும் அடைகிறான். 

 இக்கதைகளில் தாய்மையை  சொன்ன  அதே அளவுக்கு  தந்தைமையும்  சொல்லி இருப்பது தான் அழகினும் அழகு. 



நாளை  திசைத்தேர் வெள்ளம்  ஆரம்பமாக  போகிறது என்பதே ஒரு கிளர்ச்சை  குடுக்கிறது. கடந்த  ஒரு வருடங்களாக தினம் காலை  வெண்முரசு படித்துவிட்டு  தான் என்னுடைய அந்த நாள் ஆரம்பம்  ஆகும். எனவே  ஒரு சிறுவனின்  மனதுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்.


சுகதேவ் .

மேட்டூர்.