அன்புள்ள ஜெ
ஈரோட்டில் நடந்த
கூட்டத்தைப்பற்றிய செய்தியைப் பார்த்தேன். அந்தக்கட்டுரைகளையும் வாசித்து முடித்தேன்
இத்தனைபேர் கூடி இந்நாவலைப்பற்றிப் பேசுவது
ஆச்சரியமானது. ஆனால் அதைவிட ஆச்சரியமானது உங்களுடன் நின்று உதவிசெய்து இந்தப்பெரிய
பணியை சிறப்பாக கொண்டுசெல்லும் நண்பர்கள். இந்த நண்பர்கள் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்
என்று எண்ணினேன். வெண்முரசு போன்ற இவ்வளவு பெரிய படைப்பு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வெளியே இருப்பது என்ன? மிகப்பெரிய உதாசீனம். பெரும்பாலானவர்கள் அக்கறையே காட்டவில்லை.
இன்னொரு சிறுசாரார்
நக்கல் நையாண்டி என எழுதுகிறார்கள். மட்டம்தட்டுகிறார்கள். எதையுமே புரிந்துகொள்ளும்
ஆற்றல் இல்லாமல் நானும் ஒரு ஆள்தான் என்று காட்டுவதற்காகவே அசட்டுத்தனமாக எழுதுகிறார்கள்.
இவ்வளவுபெரிய விஷயம் அவர்களுக்குள் உள்ள சிறுமையைத்தான் வெளியே கொண்டுவருகிறது. மனம்
விரியவோ தங்கள் எல்லைகளை உணரவோ முடியவில்லை. இந்தமாதிரியான அரைவேக்காட்டுக்குறிப்புகள்
அல்லாமல் ஒரு நல்ல குறிப்பு இதுவரை வெளிவந்ததில்லை.
இந்நண்பர்கள் இல்லாவிட்டால்
நீங்கள் மனம் சோர்ந்திருந்தால்கூட ஆச்சரியமில்லை. ஒரு கோணத்தில் பார்த்தால் நீங்கள்
கொண்டிருக்கும் மூர்க்கம்தான் ஆச்சரியமானது. வாசகன் அல்லாமல் எவனும் எனக்குத்தேவையில்லை
என்று ஆணவத்துடன் நிமிர்ந்து நின்று எழுதுகிறீர்கள். அந்த வேகம் இருந்தால்தான் இதெல்லாம்
சாத்தியமாகும் என நினைத்துக்கொள்கிறேன்
சுவாமி.