அன்புள்ள ஜெ
நலம்தானே?
போர்க்களக் காட்சிகளை
வாசித்துக்கொண்டிருக்கையில் இது எனக்கு என்ன தருகிறது என்று நினைத்துக்கொண்டேன். நான்
நேரில் போர்க்களத்தைப்பார்த்தவள். என் கண்முன்னால் நாலைந்து சாவுகளைப் பார்த்தேன்.
இன்றைக்கு அன்னிய மண்ணில் இருந்து பார்க்கையில் எல்லாம் கனவுபோல தோன்றுகிறது. நல்லவேளை
மீண்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால் அது பொய்யான ஆறுதல் ஏனென்றால் என் உறவினர்களும்
வேண்டியவர்களும் போய்விட்டார்கள். எத்தனையோ இளைஞர்கள் செத்தார்கள். அவர்களை எல்லாரும்
மறந்தும் விட்டார்கள்.
இதற்கெல்லாம் என்னதான்
அர்த்தம்? நாம் சாதாரண வாழ்க்கையில் இதைக் கேட்பதில்லை. ஏனென்றால் எங்கள் போரைப்பற்றி
ஒன்றுமே சிந்திக்கமுடியாது. ஏராளமான கருத்துக்கள். பிரச்சாரங்கள். பொய்யான உணர்ச்சிகள்.
உண்மையான உணர்ச்சிகள். அதை எல்லாம் செவிகொண்டு போர் என்று யோசிக்கவே முடியாது. அந்தப்போர்
நடந்திருக்கவேண்டுமா, அதனால் என்ன பயன், அதை யார் நட்த்தினார்கள் எதையுமே யோசிக்கமுடியாது.
ஆனால் இந்த வெண்முரசில்
போரைப்பார்க்கையில் துல்லியமாக வெளியே நின்று பார்க்கமுடிய்கிறது. ஆனால் இந்த நாவலுடனேயே
வாழ்ந்த்தனால் இதெல்லாம் உண்மையான அனுபவமாகவும் உள்ளது. ஆகவே மிகச்சிறப்பான முறையில்
அணுக முடிகிறது. ஏமாற்றமோ கசப்போ இல்லாமல் ஆனால் துக்கத்துடன் இதையெல்லாம் பார்க்கிறென்.
நூறாண்டு வாழ்ந்த ஒரு அனுபவநிறைவு கிடைக்கிறது
வல்லி